

உண்மையான பரம்பொருள் நம்முள்ளே இருக்கும்போது, உருவ வழிபாடும், வெறும் சமய சம்பிரதாயங்களும் தேவையில்லை என்று உரைக்கும் சித்தர் சிவவாக்கியர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பிறக்கும்போதே ‘சிவசிவ’ என்று சொல்லிக் கொண்டே பிறந்ததால் இவருக்கு ‘சிவவாக்கியர்’ என்ற பெயர் காரணம் சொல்லப்படுகிறது. இவர் ‘சிவவாக்கியம்’, ‘நாடிப்பரீட்சை’ போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிவனே ‘பரம்பொருள்’, கடவுள் உயிரினின்று வேறுபட்டவரானாலும், கடவுளன்றி உயிரில்லை என்று கூறுகிறார். நமது உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. இவற்றை தாமரையாகவும், சக்கரமாகவும் உருவகிப்பர்.
இந்த ஆறு ஆதார சக்கரங்களில் அதற்குரிய எழுத்துகளை உணர்ந்து, அந்தந்த சக்திகளை ஐந்தெழுத்து மந்திரத்தால் கட்டுப்படுத்தி, ஐம்புலன்களையும் வென்று ஜீவனை சிவனோடு ஐக்கியப்படுத்துவதே பஞ்சாட்சரம் என்று சிவவாக்கியர் பாடியுள்ளார்.