

திருப்பூர் - கொடுவாய் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ள அலகுமலை முத்துக்குமார சுவாமி - பால தண்டாயுதபாணி கோயில், தொழில் விருத்திக்கு அருளும் திருத்தலமாகப் போற்றப்படுகிறது. குழந்தைப் பேறு பெறவும், திருமணத் தடை நீங்கவும் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தல வரலாறு: அலகு என்றால் ‘மூக்கு' என்பது பொருள். இந்த மலை, மயில் மூக்கின் வடிவம் போல் அமைந்து உள்ளதால் ‘அலகு மலை' என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மலை அடிவாரத்தில் ‘அழகாபுரி அம்மன்' என்ற அன்னை ஊர்க்காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். இதன் காரணமாக அன்னையின் பெயரே மருவி, இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
அலகு மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்ட மலை, ஊதியூர் மலை. பழநி மலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை அழகுற காட்சியளிக்கிறது. முருகப்பெருமான், பழநி மலையில் இருப்பது போன்று ஆண்டி கோலத்தில் கையில் தண்டாயுதத்துடன் அருள் பாலிக்கிறார்.