

காயத்ரி மந்திரத்தின் உருவம் காயத்ரி தேவி. சாவித்திரி, வேதமாதா, ஆதிசக்தி என்று அழைக்கப்படும் இவருடைய உண்மையான இருப்பிடம் சத்திய லோகம். நேபாளத்தில் இவருடைய வெங்கல சிலைகள் பல கிடைத்துள்ளன. காலம் காலமாக இவருடைய வழிபாடு அங்கு தொடர்ந்துள்ளது. பிரம்மாவுக்கு புஷ்கரில் கோயில் உள்ளது. காயத்ரிக்கும் அங்கு கோயில் உள்ளது.
இந்தியா முழுவதும் காயத்ரிக்கு கோயில்கள் உள்ளன. சாதாரண குடிமகன் முதல் மன்னர்கள் வரை இவருக்கு பக்தர்கள் உண்டு. கர்நாடக மாநிலம், மைசூர் அரண்மனைக்குள்ளும் ஓர் அற்புத கோயில் உள்ளது. மைசூர் கடைசி மகாராஜா ஜெய சாம்ராஜ உடையார் காயத்ரி பக்தர். தன் மகளுக்கு காயத்ரி என்று பெயரிட்டார். அரண்மனைக்குள் காயத்ரி தேவிக்கு ஒரு கோயில் கட்டி வழிபட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு 1951-ம் ஆண்டு ஏற்பட்டது.