

கிறிஸ்தவர்களின் வேத புத்தகமான விவிலியத்தின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் சிலுவை கிறிஸ்தவத்தின் குறியீடு ஆகும். ஒன்றுக்கொன்று நேர்குறுக்காக இடப்பட்ட இரண்டு கோடுகள் போன்ற சிலுவையின் வடிவம், இடம், காலம், நம்பிக்கைகளைப் பொறுத்து மாறுபட்டாலும், பெரும்பாலும் உலகம் அறிவது லத்தீன்/ரோமானிய வடிவமே.
வெறும் சிலுவை கிராஸ் (Cross) என்றும், இயேசுவின் உடலைத் தாங்கிய சிலுவை க்ரூசிபிக்ஸ் (Crucifix) என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. சிலுவை, இயேசு கிறிஸ்துவின் பாடுகள், பாவத்திலிருந்து விடுதலை, மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பு, முடிவில்லாத விண்ணக வாழ்வு என்று கிறிஸ்தவத்தின் ஆழ்ந்த, முக்கிய நம்பிக்கைகளின் குறியீடு.
தேவாலயங்களின் உச்சியிலும், கல்லறைகளின் முகப்பிலும் இருப்பதும் சிலுவைகளே. லண்டனில் உள்ள செயின்ட் பால் தேவாலயம் சிலுவை உருவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிலுவையில் அறையப்படுவது அக்காலத்தில் அரசியல், மதக் குற்றம் புரிந்தவர்கள், கடல் கொள்ளையர்கள், அடிமைகள் மற்றும் குடி உரிமை அல்லாதவர்களுக்கான மரண தண்டனையாக இருந்து வந்தது.