

மனிதனின் தொன்மையான வழிபாடுகள் இயற்கையையும், அதன் ஆற்றலையும் சார்ந்தே இருந்தது. குறிப்பாக இயற்கையை மையப்படுத்தியே வழிபாட்டு சம்பிரதாயங்கள் இருந்தன. நெருப்பு, சூரியன், மழை, மின்னல், விலங்கு, தாவரம், மரம் என்று இருந்த வழிபாடுகள் பின்பு அடுத்தடுத்த நிலைக்குச் சென்றன.
இதன் தொடர்ச்சியாக முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு என்று அதன் தன்மைகளும் மாறின. இன்றைக்கு உருவ வழிபாடுகள், தனி கோயில்கள் என்று பல்வேறு வகையிலும் மாற்றம் கண்டுள்ளன. இருப்பினும் தன்னைச் சுற்றிலும் இருக்கும் பொருட்களையும், இயற்கையையும் வழிபடும் நோக்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
சூரியனையும், பயிரையும், நீரையும் வணங்கி விவசாயப் பணிகளை தொடங்கிய முன்னோர் காலப்போக்கில் வயலையும் கோயிலாக வழிபட தொடங்கினர். பின்பு இதற்கென ஓர் அடையாளத்தையும் ஏற்படுத்தினர். இதனால் வயல்கள், கண்மாய் கரைகளில் கருப்பசாமி, தவ்வை போன்ற தெய்வங்கள் உருவாகத் தொடங்கின.