

மருத்துவ அறிவியல்படி மனம் என்பது மூளை. ஆனால் நடைமுறையில் நாம் ஒருவரைப் புகழும்போது, ‘நான் உன்னை மனதாரப் பாராட்டுகிறேன்’ என்றுதான் சொல்வோம். ‘உண்ட வீட்டுக்கு துரோகம் செய்றியே, உனக்கு மனசாட்சியே இல்லையா?’ என்றுதான் நாம் கேள்வி கேட்போம்.
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்பதே அறம் என்கிறது திருக்குறள். மனதை ஒருமுகப்படுத்தினால் எல்லாம் நம் வசப்படும் என்பதைப் பல ஞானிகளும் புரியவைத்திருக்கின்றனர். இதை வலியுறுத்தும் பலவிதமான யோகப் பயிற்சிகளும் இருக்கின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவலாக மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது ‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ எனப்படும் இதயநிறைவுப் பயிற்சி.
நான்கு வழிகாட்டிகள்: இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த லாலாஜி எனப்படும் ராம் சந்த்ர யோகி இந்தப் பயிற்சியின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரின் ஆன்மிக வாரிசாகத் திகழ்ந்தவரும் ராம் சந்த்ர என்னும் பெயரைக் கொண்டவரே. இவரை பாபுஜி என்றும் அழைத்தனர்.
பாபுஜியே இன்றைக்கு அனைவரும் பின்பற்றும் இதயநிறைவுப் பயிற்சியைப் பரவலாக்கியவர். இவரைப் பின்பற்றிப் பரப்பியவர் பார்த்தசாரதி ராஜகோபாலாச்சாரி (சாரிஜி). இவரைத் தொடர்ந்து கம்லேஷ் (தாஜி) நான்காவது வழிகாட்டியாகத் தற்போது இதயநிறைவுப் பயிற்சியை உலகம் முழுவதும் பரப்பிவருகிறார்.
இயல்பான மாற்றம்: இந்த இதயநிறைவுப் பயிற்சியைக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் செய்துவருகிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பயிற்சியும் அளித்துவருகிறேன். இந்த இதயநிறைவு தியானத்தின் அடிப்படையே முதலில் பயிற்சி, பிறகு புரிந்துகொள்ளுதல் என்பதாக இருக்கும்.
இந்தப் பயிற்சியைப் பெறுபவர் - அபியாசி. அளிப்பவர் ‘பிரசிப்டர்’. மூன்று அமர்வுகளில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். எனக்கு இந்தப் பயிற்சியை அளித்தவர் சென்னை கோடம்பாக்கத்திலிருக்கும் வெங்கப்ப நாயுடு.
இந்தத் தியானமுறை இதயத்தில் செய்வதாகும். இந்த முறையில் ஒன்றின் மீது கவனத்தைக் குவிப்பதில் பிரயத்தனப்பட்டு முயலாமல், தன்னியல்பில் நடக்கும் நிகழ்வாக இருக்கும். அதுதான் இந்தத் தியானமுறையின் சிறப்பும்கூட! இந்தப் பயிற்சியின் சிறப்பைப் பற்றி ஆறு மாதங்களில் உங்களின் நண்பர்கள், உறவினர்கள் உங்களிடமே கேட்பார்கள்.
நான் ஆறு மாதங்கள் இந்தப் பயிற்சியைச் செய்தபின், என்னுடைய அம்மா என்னிடம், “முன்புபோல் உனக்குக் கோபம் வருவதில்லையே” என்றார். என்னுடைய இந்தச் சமநிலைக்கு இந்த இதயநிறைவு தியானப் பயிற்சியே காரணம்.
தைரியசாலி யார்? - இந்த முறையில் இருக்கும் இன்னொரு சிறப்பு, தேவையற்ற விஷயங்களை நம்மிடமிருந்து அகற்றுதல். இதை நாம் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் நமது இதயத்தில் இருக்கக்கூடிய அழுக்கு, அழுத்தம், கடினத் தன்மை போன்றவை நம்மிடமிருந்து அகன்று செல்கின்றன என்னும் பாவனையோடு அமர்வது. இதை நாம் செய்துமுடித்த பின், நீண்ட ரயில் பணத்துக்குப் பின் குளித்தவுடன் கிடைக்கும் புத்துணர்வு ஏற்படும்.
தைரியசாலி என்பவன் பத்துப் பேரை அடிப்பவன் அல்ல; தன்னுடைய சுயத்தை நேருக்கு நேராகச் சந்திக்கத் திராணி உள்ளவனே உண்மையான தைரியசாலி. ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்னும் கருத்துள்ள திரைப்பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் பாடலின் கருத்து நிதர்சனத்தில் உணர்த்தும் பயிற்சி முறைதான் ஹார்ட்ஃபுல்னெஸ்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் ஞாயிறுதோறும் இலவசமாக இந்தப் பயிற்சியை கற்றுத்தருகிறார்கள். புதிய வெளிச்சத்தை நோக்கிப் பயணிக்க நினைப்பவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
(கட்டுரையாளர், திரைப்பட இயக்குநர்)
தொடர்புக்கு: ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையம், பாபுஜி நினைவு ஆசிரமம், மணப்பாக்கம் பிரதான சாலை, மணப்பாக்கம், சென்னை- 600125, போன் : 044 42171111.