

மகாபாரதப் புராணத்தில் சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர். அவரின் இயற்பெயர் தேவவிரதன். பீஷ்மருக்கு மூன்று குருமார்கள். அரசியல் அறிவுக்கு பிரகஸ்பதி, வேதத்துக்கு வசிஷ்டர், வில்வித்தைக்கு பரசுராமர். அனைத்துக் கலைகளிலும் விற்பன்னராக இருந்ததால் அஸ்தினாபுரத்தை ஆண்ட கௌரவர்களுக்குத் தலைமை ஆலோசகரும் முதன்மை படைத் தலைவருமாக இருந்தார்.
மகாபாரத யுத்தம் தொடங்கும்முன் பீஷ்மர், “பஞ்ச பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன். கௌரவர்களின் வெற்றிக்குப் பாடுபடுவேன்” என சபதம் எடுத்தார்.
யாராலும் வெல்ல முடியாதவர் பீஷ்மர். போரில் அவரை எதிர்கொள்ள இயலாமல் அர்ச்சுனன் திணறினான். அப்போது கிருஷ்ணன், “சிகண்டியை பீஷ்மருக்கு முன்பாக நிறுத்திச் சண்டையிடச் சொல். பீஷ்மர் அவருக்கு எதிராகப் போரிட மாட்டார். சிகண்டிக்குப் பின்னால் இருந்து நீ பீஷ்மரின் மீது பாணங்களைத் தொடு. வெற்றி உனக்கே” என்று யோசனை கூறினார்.
கிருஷ்ணனின் யோசனையை அப்படியே செய்தான் அர்ச்சுனன். தனக்கு எதிராக நிற்கும் சிகண்டி, முற்பிறவியில் அம்பா என்னும் பெண் (தான் மணந்துகொள்ள மறுத்ததால் மரணத்தைத் தழுவியவள்) என்பதை ஞானதிருஷ்டியில் அறிந்து பாணங்களைக் கீழே போட்டார்.
அந்தச் சமயத்துக்காகக் காத்திருந்த அர்ச்சுனன் பீஷ்மரின் மீது அம்புமாரி பொழிந்து அவரை அம்புப் படுக்கையில் கிடத்தினான். விரும்பும்போது மரணத்தைத் தழுவும் வரம்பெற்றவரான பீஷ்மர், அம்புப் படுக்கையில் இருந்தவாறே தருமருக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் போதித்தார். போர் முடிந்து வந்த பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் உயிர் துறந்தார்.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்த இடம் குருச்சேத்திரத்தில் உள்ள நரகாதாரி என்கிற இடம். அந்த இடத்தில் பீஷ்மருக்குக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அழகான அலங்கார வளைவுகளைக் கடந்து உள்ளே சென்றால் பீஷ்மரின் கர்ப்பகிரக அறைதான். பக்கவாட்டில் இதை அமைத்துள்ளனர். கர்ப்பகிரக வாசலுக்கு மேலே பீஷ்மர் சம்பந்தப்பட்ட ஏராளமான காட்சிகளை வரையப்பட்ட படங்களாகக் காணலாம்.
கர்ப்பகிரகத்தில் முள் படுக்கையில் பீஷ்மரின் தரிசனம். அவர் மீதும் அம்புகள் தைத்துள்ளன. பின்னால் கிருஷ்ணன், பஞ்ச பாண்டவர்கள், கங்கை தாயார் ஆகியோரின் சிலைகள்.
வட நாட்டுப் பாணியில் சலவைக் கல்லில் சிற்பங்கள் பளீரிடுகின்றன. ஆடைகளை ஜொலிப்புடன் அலங்கரித்து அழகூட்டியுள்ளனர். கர்ப்பகிரகத்துக்கு வெளியே தடுப்பு ஏற்படுத்தி அதை இரண்டாகப் பிரித்துவிட்டுள்ளனர். இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கர்ப்பகிரகம் முன் அமர்ந்து சகஸ்ரநாமம் படிக்கின்றனர்.
இது மிகவும் சிரத்தையுடன் அங்கே நடத்தப்படுகிறது. கர்ப்பகிரகத்தையும் அவர்களையும் ரசித்துவிட்டுச் சென்றால் பின்னால் கட்டப்பட்டிருக்கும் பீஷ்ம கங்கா குளத்தைக் காணலாம்.
பீஷ்மர் முள் படுக்கையில் கிடந்தபோது அவருக்குத் தாகம் எடுத்தது. குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்டார் பீஷ்மர். அர்ச்சுனன் உடனே சற்றுத் தள்ளிச் சென்று, நிலத்தை நோக்கி அம்பைச் செலுத்தி, “கங்கையே நீதான் பீஷ்மரின் தாயார் என்பது உண்மையானால் பிரவாகமாக உடனே வெளிப்பட்டு, அவரின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்” என வேண்டினான்.
உடனே அந்த இடத்திலிருந்து நீர் பீய்ச்சி அடித்ததுடன், பீஷ்மரின் தாகத்தையும் தணித்தது. ஒரு குளமாகத் தேங்கி நின்றது. அந்தக் குளத்தைத்தான் பீஷ்மர் குண்ட் (குளம்) என அழைக்கின்றனர்.
குளத்திற்கு அழகாகப் படி அமைத்துள்ளனர். பலர் அதில் இறங்கிக் குளிக்கின்றனர். சிலர் இறங்கி தலையில் நீரைத் தெளித்துக்கொள்கின்றனர். குருச்சேத்திரம் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாகத் தரிசிக்க வேண்டிய கோயில் இது.
உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் தாராகஞ்ச் பகுதியில் ஒரு பீஷ்மர் கோயில் உள்ளது. ஆனால் அது சரியாகப் பராமரிக்கப்படவில்லை. பீஷ்மருக்குக் கோயில் என்றால் அது அவர் வீழ்ந்த இடத்தில் இருப்பதுதான் சரி. ஆக, குருச்சேத்திரத்தில் இருப்பதுதான் சரி.
அதிகாரபூர்வமாக பீஷ்மருக்கு இருக்கும் ஒரே கோயில் இதுதான். குருச்சேத்திரம் ரயில் நிலையத்தி லிருந்து 7 கி.மீ. தொலைவில் புதுக் கோயில் எழுந்துள்ளது.