நீதி தேவதையாக விளங்கும் மடப்புரம் ஸ்ரீபத்ரகாளி!

நீதி தேவதையாக விளங்கும் மடப்புரம் ஸ்ரீபத்ரகாளி!
Updated on
3 min read

மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை யிலிருந்து 18 கி.மீ. தொலைவில் திருப்புவனம் வட்டத்தில் உள்ளது மடப்புரம் எனும் சிற்றூர். இங்குதான் பிரபலமான  பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

பார்ப்போரை வசீகரித்துப் பிரமிக்க வைக்கும் காளி திறந்தவெளியில், நின்ற நிலையில் காட்சி அருளுகிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கிய திரிசூலம் அநீதியை அழிக்கவும் தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழ விடாது சாம்பலாக்கவும் நாடிவரும் தன் மக்களை எப்போதும் காக்கத் தயாராக ஆயத்த நிலையில் திருக்கோலம்.

காளியின் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் பின்னங்கால்களை ஊன்றி முன்னங்கால்களைத் தூக்கி, காளிக்கு நிழல்கொடுக்கும் விதமாக அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமாகக் குதிரை நிற்கிற கோலம் அழகோ அழகு. அது 13 அடி உயரத்துடன் சர்வ அலங்காரத்தோடு காட்சியளிக்கிறது.

காளிக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம் என்பதால், கோயிலுக்கு எதிரே எலுமிச்சை மாலைகள் விற்கும் கடைகள் உள்ளன. சுமார் 20 முதல் நூற்றுக்கணக்கில் எலுமிச்சை மாலையாகக் கோத்து விற்பனை செய்கிறார்கள். அர்ச்சனை சாமான்கள் கொண்ட கூடையும் எலுமிச்சை மாலையும் வாங்கிய பின்னரே, பக்தர்கள் ஆலயத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

புவனம் போற்றும் புத்திரர்: மடப்புரம் ஆலயத்தில் மூலக் கடவுளாக வீற்றிருப்பவர்,  அடைக்கலம் காத்த ஐயனார். சிவன், திருமால் அருளால் அவதரித்தவர் அரிகர புத்திரர். அவரை ருத்ர மூர்த்திகளுள் ஒருவராக்கித் தேவர்களும் வணங்கும்படியாக புவனத் தலைமைப் பொறுப்பு வழங்கினார் சிவபெருமான். இவரே ஐயனார் என்று தேவர்களால் அழைக்கப்பட்டார். அளவில்லாத பூத கணங்களோடு, யானை வாகனத்தைக் கொண்டு, திருமாலுக்கு நிகராகக் காக்கும் கடவுளாக இறைவனால் நியமிக்கப்பட்டவர்.

இவருக்கு பூரணை, புஷ்கலை என இரண்டு மனைவியர். மருத நிலத் தலைமை பூண்ட இந்திரனுக்கும் இந்திராணிக்கும் பக்கத் துணையாக இருந்தும் எல்லா உயிர்களுக்கு இன்பம் தருபவராகவும் ஐயனார் வரலாறு கந்த புராணத்தில் சித்தரிக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு உதவும் ஐயனார்: ஐயனார், மகாகாளன் என்கிற தன் தளபதியை இந்திராணிக்குப் பாதுகாவலாக வைத்திருந்ததை எப்படியோ கண்டுபிடித்து இந்திராணியைக் கவர வந்த அஜமுகியை அடித்து விரட்டிய வரலாறு, அடைக்கலம் காத்த ஐயனாரின் பெருமையை விளக்கும்.

இதே போன்று ஊருக்கு ஊர் தன்னை நாடி வந்த மக்களுக்கு, குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நேரும் பூத, பெளதீக இடையூறுகளை நீக்கவே ஐயனார் பல ஊர்களில் எழுந்தருளியிருக்கிறார். மடப்புரம் ஐயனாரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து அன்பு பாராட்டுகிறார் என்பது உலகம் அறிந்த உண்மை.

இவரை வணங்குபவர்கள், உலகம் வாழத் தமது உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். இக்குறிப்பை வெளிக்காட்டும் விதமாக, இரண்டு வீரர்கள் தங்கள் தலையை அரிந்து ஐயனாருக்குச் சமர்ப்பிக்கும் வலப்புற, இடப்புற நவகண்ட சிற்பச் சிலைகள் பக்தர்கள் போற்றி வணங்குவதற்கு உரியவை. ஐயனாரின் மூலஸ்தானத்தில் உள்ள சப்த மாதர்கள் வருணணோடு தொடர்பு உடையவர்கள் ஆதலால், சப்த மாதர்களை வழிபடுவது தேவையான மழை பொழிய வழிவகுக்கும் என்கிற நம்பிக்கையும் மக்களிடையே இருக்கிறது.

அடைக்கலம் காத்த ஐயனார், பத்ர காளி அம்மன் ஆகியோருடன், சின்ன அடைக்கலம் காத்த சுவாமி, சின்னு, வீரபத்ரர், காணியாண்ட பெருமாள், அய்யனார், கருப்பண்ணசாமி, வினை தீர்க்கும் செல்வ விநாயகர் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் உறைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

மடப்புரம் வரலாறு: ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்துவிட்டது. அப்போது மீனாட்சி, சொக்கநாதப் பெருமானிடம் மதுரையின் எல்லையைக் காட்டி, ‘அருளுங்கள்’ என வேண்டினாள்.

சொக்கரின் ஆணைப்படி, ஆதிசேடன் என்கிற பாம்பு வெளிப்பட்டு மதுரையின் நான்கு புறத்தையும் வளைத்துத் தற்போது உள்ள மடப்புரத்தில் தன் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டியது. இவ்வாறு பாம்பின் படமும் வாலும் சேர்ந்து இருந்த இடம் ‘படப்புரம்’ என அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘மடப்புரம்’ என்று ஆகியதாக வரலாறு கூறுகிறது.

இக்கோயிலில் தினமும் இரு காலம் பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்குக் கோயில் திறந்து இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. காலை 7 மணி மற்றும் இரவு 7 மணிக்குத் தீபாராதனை, தினசரி உச்சி கால பூஜை. முதலில் ஐயனாருக்குத் தீபாராதனை முடித்த பின்பே காளி மற்றும் பிற தெய்வங்களுக்குத் தீபாராதனை காட்டப்படும். ராக்கால பூஜை தீபாராதனையுடன் முடிவடைகிறது.

அன்னை காளியின் சிறப்பம்சமாகக் காசு வெட்டிப் போடுதல் நடக்கிறது. நீதியின் தேவதையாகவே மடப்புரம் காளியை மக்கள் கருதி வழிபடுகின்றனர் என்பதற்கு இது சான்று.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, சொத்துத் தகராறு, குடும்பச் சண்டைகள் ஆகியவற்றில் நீதி கிடைக்காமல் ஏமாந்தவர்கள் குளித்துவிட்டு ஈரத் துணியுடன் காளியின் சந்நிதிக்கு எதிரே காசு வெட்டிப் போடும் இடத்தில் காசு வெட்டிப் போட்டுவிட்டு, காளியிடம் முறையிட்டபின் கிழக்கு வாசல் வழியாக வெளியேறி விட வேண்டும். முறையிட்டவர்கள் வீடு போய்ச் சேருவதற்குள் பலன் கிட்டிவிடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

செவ்வாய் தோஷம் கொண்டு திருமணம் தடைபடுபவர்கள் தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகள் இக்கோயிலுக்கு வந்து காளியை மனமுருகித் தொழுதால், கை மேல் பலன் நிச்சயம் என்கிறார்கள்.

படங்கள்: நா.ரமேஷ்குமார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in