

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது ஒரு யூதரின் இறுதி ஊர்வலம் சென்றது. அப்போது நபிகளார் எழுந்து நின்றார். இதைக் கண்ட தோழர்கள், “நபியே..! இப்போது ஒரு யூதரின் உடல்தானே எடுத்துச் செல்லப்பட்டது. தாங்கள் ஏன் எழுந்து நிற்கவேண்டும்?” என்று கேட்டனர்.
“அவர் மனிதராயிற்றே” என்றார் நபிகளார்.
மதங்கள் வெவ்வேறானாலும் மனிதர்கள் அனைவரும் சமமே என்பதற்கு இதைவிட வேறு ஏதேனும் சான்று தேவைப்படுமா என்ன?
ஒருமுறை அபூதர் கிபாரி (ரலி) என்கிற நபித் தோழர் கறுப்பு நிறத்தைச் சேர்ந்த ஒருவரை நோக்கி, “கறுப்புத் தாய்க்குப் பிறந்தவரே” என்று இழிவாகக் குறிப்பிட்டார். அந்தத் தோழர் நபிகள் நாயகத்திடம் இதை முறையிட்டார்.
நபிகளார் அத்தூதரை அழைத்து, “நீர் இன்னும் அறியாமைக் காலத்தில்தான் இருக்கின்றீர். அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்றார். பிறப்பின் அடிப்படையில் பேதம் இல்லை என்பதை நபிகள் அனைவருக்கும் உணர்த்திய சம்பவம் அது.
ஏற்றத்தாழ்வு வேண்டாம்: ‘மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப்போல் சமமானவர்கள்’ என்று நபிகளார் கூறியுள்ளார். ‘சீப்பின் பற்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தால், அது தலையைக் கிழித்துச் சீழ் பிடிக்க வைத்துவிடும். அதுபோலவே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்தால் அந்தச் சமூகம் புண்படும். மனிதர்கள் அனைவரும் ஒரே ஆண்டவனின் படைப்புகளே! ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள்’ என்கிறது திருக்குர்ஆன்.
‘மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்’ என திருக்குர்ஆனில் (49:13) குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: இஸ்லாம் ஒரு பார்வை, கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது
தொகுப்பு: நிஷா