

உள்ளத்தில் கொண்ட பேரன்பால் பரம்பொருள் மீது எல்லையற்ற பக்தியைக் காட்டியவர்கள் 63 நாயன் மார்கள். இவர்களின் பக்தி உணர்வைத் தன் அருளாசியால் ஊருக்கு உணர்த்தியவர் முக்கண் முதல்வன். இந்த நாயன்மார்கள் வரிசையில் காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூன்று மகளிரும் அங்கம். அத்தகைய நாயன்மார்களின் பக்தி உணர்வுக்குச் சற்றும் குறைவில்லாமல் இறைவனுக்குப் பெரும் தொண்டுசெய்து சரித்திரத்தின் ஏடுகளில் நிரந்தரமான இடத்தைப் பக்தை ஒருவர் பிடித்த பெருமைக்குரிய திருத்தலம் வயலூர்!
திருக்கற்றளி திருப்பணி: முற்காலச் சோழர் ஆட்சியில் முதலாம் ஆதித்தன் ஆட்சிக்கு வந்த வேளையில் முதன்முதலாக ஆகமவிதிகளுக்கு ஏற்ப பரிவாரத் தெய்வங்களுக்குரிய தனி சந்நிதிகளோடு சிவாலயத்தை சோழர் கலைப் பாணியில் முழுமை யாகக் கல் திருப்பணியாகச் செய்து முடித்தான்.
ஆவணமாகும் சொத்துரிமை: காவிரி பாய்ந்து வளப்படுத்தும் வயலூரில் ஓர் எழிலான சிவாலயத்தைக் கட்டியெழுப்பினான். அந்தக் கோயில் மூலவருக்கு வயலூர் திருக்கற்றளி பரமேசுவரர் எனப் பெயரும் சூட்டினான். இந்தத் தலத்தின் மகத்துவத்தைப் பரிபூரணமாக உணர்ந்து பேரின்பம் அடைந்தாள் பக்கத்து ஊரைச் சேர்ந்த சேந்தன்காரி என்னும் நங்கை. இப்பெண் வயலூரில் இறைவனுக்கு உரிய இறைவியாக உமா தேவியின் செப்புப் படிமம் ஒன்றைக் கோயிலுக்குச் செய்து அளித்தாள்.
இந்த உமையம்மையைத் தன் மகளாகவே பாவித்து, ஒரு கட்டத்தில் இறைவனுக்கு மணம் செய்தும் வைத்தாள். அதோடு அவளின் பக்திப் பெருக்கு முடியவில்லை. தன் மகளுக்கு நாளும் திருவமுது தயாரித்துப் படைக்க வேண்டி தம் உடன்பிறந்தார்களிடமிருந்து சீதனமாக வந்த வயலைத் தானமாகத் தந்தாள்.
இந்தத் தான காரியத்திற்கு அவளுடைய சகோதரன் மாறன்நக்கன் உறுதுணையாக இருந்தார். இந்தத் திருப்பணி மூலம் சோழர்கால மகளிரின் மெய்யான பக்தி உணர்வு, மகளிருக் கான சொத்துரிமை, அவர்களின் முயற்சிக்கு ஆடவர்களும் துணை நின்றது உறுதியாகிறது.
மேலும், மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் செழிக்க வழிவழியாக வந்த மன்னர்கள் பலரும் நீர் மேலாண்மைக்காக அருந்தொண்டாற்றினர். எடுத்துக்காட்டாக, வயலூரில் சிந்தாமணி வதியும் ராஜேந்திர சோழன் வாய்க்காலும் இன்றளவும் மக்களின் தாகத்தையும் பசிப்பிணி தீர்க்கும் மருந்தாகவும் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் தீன சிந்தாமணி என்பவர் முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசி ஆவார். இது போல, இதர சோழப் பேரரசிகளின் பெயர்களிலும் பல நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன என்பது வரலாறு சொல்லும் உண்மை.
திருப்புகழில் வயலூர்: திருவண்ணாமலையில் தங்கியிருந்த அருணகிரிநாதரை வயலூருக்கு வருமாறு அவரது கனவில் தோன்றி உணர்த்தினார் குமரக்கடவுள். அதன்படி இத்தலத்திற்கு வந்த அருணகிரிநாதர் தான் இயற்றிய திருப்புகழில் 18 பாடல்களைப் பக்திப் பெருக்கோடு பாடியுள்ளார்.
அதோடு நில்லாமல், தான் சென்ற இதர தலங்களிலும்கூட வயலூர் திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும் கந்தனை வாயாரப் பாடி மகிழ்ந்துள்ளார். மேலும், இங்குள்ள பொய்யா கணபதி மீது ஐந்து திருப்புகழ்ப் பாடல்களைத் தனித்துவமாகப் பாடியிருக்கிறார்.
முருகக் கடவுளின் பெருமையைக் கடல் கடந்து சென்றும் பரப்பி மகிழ்ந்த திருமுருக கிருபானந்த வாரியார் தலைமையில் அமைந்த குழுவொன்று இத்தல சுப்பிரமணிய சுவாமிக்கு விலை மதிப்பற்ற தங்கக் கவசம் ஒன்றைச் செய்து தந்துள்ளது.
வைகாசி விசாகத் திருவிழா: சித்திரை விஷு, தைப்பொங்கல் விழா சிறப்பு அபிஷேகம் இத்தலத்தில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 12 நாள்கள் அதிவிமரிசையாக வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இங்கு நடைபெறுகிறது. புனர்பூசத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. சுவாதி நட்சத்திரத்தில் தேரோட்டமும் விசாகத்தன்று பக்தர்களின் காவடி, பால்குட ஊர்வலமும் கோலாகலமாக இங்கு நடைபெறும்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் விசாகத் திருவிழா 02.06.2023 வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ளது. விசாகத் திருவிழாபோல் தைப்பூசமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூசத்தையொட்டி வயலூரில் இருந்து முத்துக்குமாரசாமி புறப்பாடாகி கீழ வயலூர், வடகாபுத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை எனப் பல்வேறு ஊர்களுக்கும் திருவீதி எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.
அது சமயம் ஆயில்ய நட்சத்திர நாளில் சோமரசம் பேட்டையில் அல்லித்துறை பார்வதீஸ்வரர், பொம்மினி சமுத்திரம் காசி விஸ்வநாதர், வரையூர் பெருமாள், உய்யக்கொண்டான் மலை உஜ்ஜிவன நாதர், சோமரசம்பேட்டை முத்துமாரி ஆகிய ஐந்து தெய்வங்களின் சந்திப்பு சோமரசம்பேட்டையில் வெகு அற்புதமாக நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் இதைக் கண்டுகளிக்க ஒன்றுகூடி நிற்பர். ஆனி மூலத்தில் அருணகிரிநாதர் ஜெயந்தி நடைபெறும்.
பங்குனி உத்திரத் திருவிழா நான்கு நாள்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விழாவில் பக்தர்களின் பால்குட ஊர்வலம், இரண்டாம் நாள் விழாவில் தினைப்புனம் காத்தல், மூன்றாம் நாள் விழாவில் வள்ளியை யானை விரட்டிச் செல்லும் நிகழ்வு, நான்காம் நாள் விழாவில் வள்ளி திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
பரிகாரத் தலம்: உரிய மணப்பருவம் அடைந்தும் மாங்கல்ய வரம் கிட்டாமல் கவலையில் மூழ்கிக் கிடப்பவர்கள் இந்தத் திருக்கல்யாண நிகழ்வில் கலந்துகொண்டால் கூடிய விரைவில் திருமணயோகம் கைகூடி வரும் என்பது ஐதிகம். அதுபோல, குழந்தையின் ஜாதக தோஷம் உள்ளவர்கள் இத்தல சுப்பிரமணியசுவாமிக்கு குழந்தையைத் தத்துக் கொடுத்து வாங்கிட, தோஷம் நீங்கி நல்வாழ்வு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தலவிருட்சம் வன்னிமரம். கோயிலின் எதிரே பிரம்மாண்ட சக்தி தீர்த்தக் குளம் உள்ளது.
கிழக்குப் பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. இரு சுற்றுக்களைக் கொண்டது. அம்பாள் ஆதிநாயகி சந்நிதி எதிரே தெற்குப் பக்க வாசல் உள்ளது. வள்ளியை முருகன் கைப்பிடித்த தலம் என்பதால் இங்கு திருமண சுபமுகூர்த்தம் நடக்க வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, சுற்றுவட்டார மக்களின் திருமணத் தலமாக வயலூர் விளங்குகிறது.
முகமண்டபத்தில் எழுந்தருளியுள்ள தில்லைக்கூத்தர் சதுர தாண்டவ கரணத்தில் காட்சியளிப்பது தனித்துவமிக்கது. வசந்த மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. வசந்த மண்டபம் பொ.ஆ.(கி.பி) 16ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலத் திருப்பணியாகும்.
பொ.ஆ.902இல் முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டிய பிறகு இதன் நித்ய பூசை விழாச் செலவினங்களுக்கு முதலாம் பராந்தகன், சுந்தர சோழர், உத்தமசோழர், ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் ஏராளமான தானங்கள் அளித்துள்ளனர்.
ஆகம முறைப்படி தினமும் ஆறு கால பூசை நடைபெறுகிறது. ஏராளமான பொருள்செலவில் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. எதிர்வரும் 2024 ஆனி மாதம் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
| அமைவிடம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து வயலூருக்குத் தொடர்ச்சியாகப் பேருந்துகள் உள்ளன. பயண தூரம் 11 கி.மீ. தரிசன நேரம்: காலை 6.00 மணி - பகல் 1.00 மணி. மாலை 5.00 மணி - இரவு 9.00 மணி. |