

அருண தளபாத பத்மமது நிதமுமே துதிக்க
அரிய தமிழ்தான் அளித்த மயில் வீரா - திருப்புகழ்
தலங்கள்தோறும் ஒரு வரியிலாவது தந்தைக்கு உபதேசம் செய்த முருகனைத் தன் திருப்புகழில் குறிப்பிட அருணகிரியார் மறந்ததில்லை. அவனையே சுவாமிமலையில் தரிசித்த அவர், மெய் உருகி, மனம் சிலிர்க்க முப்பத்தெட்டு திருப்புகழ் பாடியுள்ளார். தந்தைக்கே பிரணவப் பொருள் உரைத்த தலம் என்பதால் சுவாமிமலை தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறது.
‘ஆறு எழுத்தடங்கிய அருமறைக் கேள்வி நா இயல்
மருங்கில் நவிலப்பாடி விரையுறு நறுமலர் எத்தி பெரிதுவந்து
ஏரகத்து உறைதலும் உரியன அதான்று’ - என்கிறது சுவாமிமலை பற்றி திருமுருகாற்றுப்படை.
சிவனுக்கு உபதேசித்த சிவகுமரன்
ஒருமுறை பிருகு மகரிஷியின் தவத்தால் அகில உலகமும் தகித்தது. அப்போது ஈசன் அவரின் தலையில் கை வைத்துத் தகிப்பைக் கட்டுப்படுத்தினார். தவத்துக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் தன் சிறப்பை இழப்பார்கள் என்கிற முனிவரின் ஆணைப்படி ஈசன் பிரணவ மந்திரத்தை மறந்துபோனார்.
இதுவும் அவருடைய லீலைதானே. ஞானம் எங்கிருந்து வந்தாலும் அதைச் சிறியவர், பெரியவர் என்று இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே ஈசன் உணர்த்துகிறார். முருகனைக் குருவாக ஏற்று, அவனிடம் பிரணவ உபதேசம் பெற்ற தலம் சுவாமிமலை.
தலச் சிறப்பு: சுவாமிக்கே உபதேசம் செய்த மலை சுவாமிமலை. இங்கு ஈசன் சிஷ்ய பாவனையில் மண்டியிட்டு, வலக்கையால் வாய் பொத்திக் கேட்க, முருகன் அவர் மடியில் அமர்ந்து பிரணவத்தின் பொருளை விளக்குகிறான். சுவாமிமலை, திருவேரகம் என்றும், குருமலை, தாத்ரீகிரி என்றும் அழைக்கப்படுகின்றன.
இது இயற்கையான மலையல்ல, கருங்கல்லால் கட்டப்பட்ட மாடக்கோயில். தமிழ் வருடங்களின் தேவர்களே இங்கு அறுபது படிகளாகக் காட்சி அளிக்கிறார்கள் என்கின்றனர் பக்தர்கள். கருவறையில் ஈசன் ஆவுடையாகவும் கந்தன் பாணலிங்கமாகவும் காட்சி தருவது இருவரும் ஒன்றே என்று விளக்குகிறது.
புகழ் உரைக்கும் திருப்புகழ்: ‘முருகா, உலகப் பொருள் களில் ஆசை ஏற்படாமல் யம தூதர்களின் கையில் சிக்கி அல்லல்படாமல் என்னைக் காத்தருள் கந்தா’ என்றே வேண்டு கிறார்.
‘சுர அதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு
சுவாமிமலை வாழும் பெருமாளே’ எனப் போற்றும் அருணகிரியார், ‘சந்த சபைதனில் எனது உளம் உருக வருவாயே’ என்று வேண்டுகிறார்.
‘கருணை மொழி கமலமுகம் ஆறும் இந்துளம்
தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண்
கலகல என மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய்’ என்று விண்ணப்பம் வைக்கிறார்.
சரண கமலாலயம்: ‘தாமரை மலர் போன்ற கந்தனுடைய காலடிகளை ஒரு நிமிட நேரமாகிலும் மனதில் வைத்துத் தியானம் செய்தறியாத தெளிவில்லாதவன் நான்’ என்பதை இப்படிப் பதிவு செய்கிறார் அருணகிரியார்.
‘சரணகமல ஆலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சட கசட மூட மட்டி பவவினையிலே சனித்த
தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ?’
‘தீவினையால் பிறந்து, திக்கற்றவனாகிய அடியவன், உன் அருட்செல்வம் இல்லாமல் வறுமையில் வாடலாமா?’ என்று வினவும் நாதர், ‘முருகனின் அருள் பெற இதுவே சிறந்த தருணம்’ என்கிறார்.
‘தருணம் இது ஐயா மிகுந்த கனம் அது உறுநீள் சவுக்கியம்’
‘சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு, தகைமை சிவஞானம்
முத்தி ப்ரகதியும் நீ கொடுத்து உதவி புரிய வேணும்’
என்று வடிவேலனை வேண்டுகிறார்.
முக்கண்ணன் உரைத்த முருகனின் மூலமந்திரம்: பிரணவத்தின் பொருளை முருகனிடம் உபதேசம் பெற்ற பரம்பொருள் அதிசக்தி வாய்ந்த மூல மந்திரத்தை உருவாக்கினார். இப்போதும் சுவாமிமலையில் மூலவருக்கு அர்ச்சனை செய்யும்போது இந்த மந்திரம் சொல்லப்படுகிறது.
‘ஓம் நமோ குமாராய நம’. இதை, ‘நாதா குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?’ என்கிற கந்தர் அநுபூதி விளக்குகிறது. அற்புதமான இந்த மந்திரத்தைச் சொல்லிவர நம் வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களையும் அடையலாம்.
‘சரண கமலாலயத்தை’ என்கிற திருப்புகழைத் தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வச் செழிப்பை அருளும் முருகன், ‘ஓம் நமோ குமாராய நம’ என்று இடைவிடாமல் ஜெபிப்பதன் மூலம் அனைத்து வளங்களையும் அருள்வான்.
(புகழ் ஓங்கும்)