

குகை நமச்சிவாயரின் முதன்மைச் சீடர் குரு நமச்சிவாயர். தன்னைப் போலவே தன்னுடைய சீடனும் பல சித்திகளைப் பெற்றுவருவதைக் கண்ட குருவான குகை நமச்சிவாயர் பெரிதும் மகிழ்ந்தார். தன் சீடனின் புகழ் நாடெங்கும் பரவ வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆகவே சீடனான குரு நமச்சிவாயரை சிதம்பரம் சென்று அங்கு இறைப்பணிகள் செய்துவருமாறு பணித்தார்.
ஆனால், சீடனுக்கோ குருவை விட்டுப் பிரியவே மனம் இல்லை. “நான் சிதம்பரம் செல்ல மாட்டேன். என் தெய்வமான நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள்” என்று குருவிடம் சொன்னார். புன்னகை பூத்தபடியே குருவானவர், “கவலைப் படாதே. சிதம்பரத்தில் ஈசன் எனது உருவத்தில் உனக்குக் காட்சி தருவான்” என்று நம்பிக்கை ஊட்டி வழியனுப்பினார். குருவின் சொல்லை மீற முடியாமல் அரை மனதாகக் புறப்பட்டார் சீடனான குரு நமச்சிவாயர்.
‘அண்ணா மலையார் அகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே - நண்ணா
நினைதொறும் போற்றிசெய நின்னடி யாருண்ண
மனைதொறும் சோறுகொண்டு வா’
- என்று உண்ணாமுலை அம்மையைச் சோறு கொண்டு வரச்சொல்லி வேண்டி ஒரு அழகிய தமிழ்ப் பாடலைப் பாடினார்.
பாடி சில கணங்கள்தான் ஆனது. குரு நமச்சிவாயர் அம்பிகையை எண்ணி தியானத்தில் இருந்தார். அப்போது, “குழந்தையே நமச்சிவாயா, கண்களைத் திறந்து உனது அன்னையைக் காண்” என்று மதுரமான ஒரு குரல் கேட்டது.
நமச்சிவாயர், மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர் போலச் சட்டென்று கண்களைத் திறந்தார். அவர் எதிரே, உண்ணாமுலை அம்மை கையில் ஒரு தங்கத் தட்டில் நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் சுடச் சுட இருந்தது. அதைத் தனது அருள்கரங்களால் எடுத்து, தனது குழந்தை குரு நமச்சிவாயருக்கு ஊட்டிவிட்டாள்.
அம்மையின் எல்லையில்லாக் கருணையை எண்ணி, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, உணவை உண்டார். இதற்காகவே காத்திருந்த அம்பிகை, கையில் இருந்த தங்கத் தட்டை அங்கேயே விட்டுக் காற்றோடு காற்றாகக் கரைந்து மறைந்து போனாள். மறுநாள் கோயில் சிவாச்சாரியார் அம்பிகையின் சந்நிதி கதவைத் திறந்து பூஜை செய்ய தங்கத் தட்டை தேடியபோது அது கிடைக்கவில்லை.
அப்போது ஓர் அசரீரி ஒலித்தது.
“அப்பனே! வருத்தம் வேண்டாம். எனது பரம பக்தனான குரு நமச்சிவாயர், நேற்று அழகாக ஒரு தமிழ்ப் பாடல் பாடி என்னிடம் பசிக்கிறது, சோறு கொண்டு வா தாயே என்று வேண்டினான். அவன் பசியைப் போக்கவே நான் தங்கத் தட்டில் சர்க்கரைப் பொங்கல் எடுத்துச் சென்றேன். அதை அங்கேயே மறந்துவிட்டு வந்துவிட்டேன். ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தின் அடியில் இப்போதும் அது இருக்கிறது. சென்று எடுத்துக்கொள்”.
சிவாச்சாரியார் சென்று அந்த இடத்தில் பார்த்தார். தங்கத் தட்டு இருந்தது. அதில் அம்பிகை சொன்னது போல சர்க்கரைப் பொங்கலின் சில பருக்கைகளும் இருந்தன!
இப்படித் தனது அடியவரின் பசியை மட்டும் போக்காமல், அவரது பெருமையை உலகறியச் செய்ய, தட்டை மறந்ததைப் போல ஒரு திருவிளையாடல் புரிந்த உண்ணாமுலை அம்மையின் செயல், அவளது கருணைக்குச் சான்று.
- ஜி.மகேஷ்