மருமகனைப் புகழ்ந்த மாமனார்!

மருமகனைப் புகழ்ந்த மாமனார்!
Updated on
3 min read

திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்து வலம் வரும்போது பெரிய காணிக்கை உண்டியலைக் காணலாம். அதற்கு எதிர்ப்புறமாக உள்ள யோகநரசிம்மர் சந்நிதிக்கருகே கருவூல மொன்றில் சில செப்பேடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் செதுக்கப்பட்டுள்ளவை அன்னமாச்சார்யாவின் பாடல்கள்.

தினமும் வெங்கடேஸ்வரர் கண்விழிப்பதே அன்னமாச்சார்யாவின் பாடலைக் கேட்டுதான்! அதிகாலையில் ஏழுமலையானின் திருக்கோயிலின் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும்போது கையில் தம்பூராவுடன் கர்ப்பக்கிரகத்தின் வாசலில் நிற்கும் ஒருவர். பாடல் ஒன்றைப் பாடுகிறார். அந்தப் பாடலை எழுதியவர் அன்னமாச்சார்யா. தம்பூராவுடன் நின்றபடி பாடுபவர் அன்னமாச்சார்யாவின் வாரிசு. இது இன்று நேற்றல்ல, சில நூற்றாண்டுகளாகவே நிலவும் பழக்கம்.

யார் இந்த அன்னமாச்சார்யா? இவருக்கு ஏன் இவ்வளவு சிறப்பிடம்? - திருமால் பக்தர்களில் அன்னமாச்சார்யா விசேஷமானவர். வேங்கடேஸ்வரரை மட்டுமே கடவுளாகக் கண்டவர். ஸ்ரீரங்கத்துக்குப் போனால் அவர் அங்கு கண்டது ‘வெங்கட ரங்கனை'. காஞ்சிக்கு வந்தபோது அவர் கண்ணுக்குத் தெரிந்தது ‘வெங்கடவரதன்’. வெங்கடேஸ்வரரின் மீது ஒன்றிரண்டல்ல, முப்பத்து இரண்டாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார்!

திருமலையானுக்கு சுப்ரபாத சேவையை முதலில் நடைமுறைப்படுத்தியவர். தன்னை அலர்மேல்மங்கையின் தந்தையாக பாவித்துக் கொண்டார். இதனால் அவரை வேங்கடவனுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு அவருடையதாகிவிட்டது! எனவே தந்தை ஸ்தானத்தில் இருந்து அலர்மேல்மங்கையை வேங்கடவனுக்கு கன்னிகாதானம் செய்தார்! ‘மகளையும் மாப்பிள்ளையயும்' ஊஞ்சலாட வைத்தவர் அவர். ‘டோலாயாம் சல டோலாயம்' என்ற பாடல் மூலம் நடந்தது இந்த ஊஞ்சல் சேவை.

அன்னமாச்சார்யா பத்மாவதித் தாயாருக்குத் தன்னைத் தந்தையாக நினைத்துக் கொண்டவர் என்பதால் இன்றுகூட இறைவனின் திருமண உற்சவத்தின்போது நலங்கு விளையாட்டின்போது தேங்காய் உருட்டிவிடும் உரிமை அன்னமாச்சார்யாவின் வாரிசுகளுக்கு உண்டு.

இரவில் இறைவனைக் கண்ணுறங்க வைக்கும் வைபவம் ஒன்றும் உண்டு. ‘ஏகாந்த சேவை' எனும் அந்த நிகழ்ச்சியையும் நடத்தி மகிழ்ந்திருக்கிறார் அன்னமாச்சார்யா.

அன்னமாச்சார்யா அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கிறார். கிரீடத்தோடு கூடிய அவரது தோற்றம்தான் சிலைகளில் காணப்படுகிறது. ஆனாலும் அந்தக் கால அரசவைக் கவிஞர்கள் அனைவரும் செய்துவந்த ஒரு காரியத்தை இவர் செய்ததேயில்லை. அரசனைப் புகழ்ந்து பாடியதில்லை! இவரது அத்தனை பாடல்களுமே வெங்கடேஸ்வரரைப் பற்றியதுதான். தனது செல்வத்தில் பெரும்பகுதியை வேங்கடவனின் சேவைக்குப் பயன்படுத்தினார்.

சாதிவேற்றுமை தலைதூக்கியிருந்த கால கட்டத்தில் வாழ்ந்தாலும் இறைவனுக்கு முன் எல்லாரும் சமம்தான் என்பதை தன் பாடல்களில் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார். அந்த விதத்தில் இவரை ஒரு `புதுமைக் கவி' என்று கூடக் கூறலாம். (தந்தனா நா அஹி, தந்தனா நா புரே .. பிரம்மம் ஒகடே, பரப்பிரம்மம் ஒகடே என்பது அவரது பிரபல பாடல்களில் ஒன்று).

அன்னமாச்சார்யாவின் தந்தையான நாராயணசூரி, காசியிலிருந்து பத்தாம் நூற்றாண் டில் ஆந்திரப்பிரதேசத்தில் குடியேறியவர். தாள்ளபாக்கம் கிராமத்தில் வழிவழியாக வாழத் தொடங்கியது அந்தப் பரம்பரை.

திருமணமாகி சில வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளான நாராயணசூரியும் லக்கமம்பாவும் மன வருத்தத்துடன் திருப்பதிக்குச் சென்றார்கள். வெங்கடேஸ்வரர் சந்நிதியில் மனம் உருகி வேண்டிக்கொண்டார்கள். அன்றிரவு திருமலையில் தங்கியபோது அவர்களது கனவில் தோன்றிய திருமால், “‘நந்தகம்' என்று அழைக்கப்படும் தனது கத்தியின் அம்சமாக உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்” என்றார்.

வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில் அழகானதோர் ஆண் குழந்தை பிறந்தது. அன்னமய்யா என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள்.

குழந்தைப் பருவத்திலேயே அன்னமய்யா வுக்கு வெங்டடேசப் பெருமாளின் மீது பக்தி அதிகமாக இருந்தது. காரணம், அவருக்கு உணவு ஊட்டும்போதே வேங்கடவனின் சிறப்புகளை கதை கதையாகக் கூறி பக்தி உணர் வையும் சேர்த்தே ஊட்டினார் அவரது தாய்.

அது ஒரு கூட்டுக் குடும்பம். சின்ன சின்ன வீட்டு வேலைகளை சிறியவர்களிடம் ஒப்படைப்பார்கள். ஆடுமாடுகளுக்குப் போடுவதற்காக புல் தேவைப்பட்டது. ‘காட்டிற்குப் போய் புல் அறுத்துக்கொண்டு வா' என்றார்கள் பெரியவர்கள். அப்படிப் புல்லை அறுக்க அவர் சென்றிருந்தபோது பக்தர்கள் குழு ஒன்று வெங்கடேச பெருமாளின் புகழைப் பாடியபடி திருப்பதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தன்னை மறந்த பரவசநிலையில் அன்னமய்யாவும் அந்தக் குழுவோடு சேர்ந்துகொண்டார்.

பக்தி ஊற்று: அன்னமய்யாவின் கண்களில் திருமலை தென்பட்டது. பிரமித்துப் போனார். உடலெல்லாம் ஒர் ஆனந்த நடுக்கம். கூட வந்த யாத்ரீகர்கள் குழு விறுவிறுவென மலையேறினர். சிறுவன் அன்னமய்யாவுக்கு பசியும் களைப்பும் ஏற்பட அருகிலிருந்த ஒரு பாறையின் மேல் படுத்துக்கொண்டார்.

அப்போது ஒரு பெண்மணி அன்னமய்யாவை அணுகினார். அந்தச் சிறுவனுக்குத் தன் கையால் உணவூட்டினார். ‘இந்தக் குன்று சாளக்ராம கற்களால் ஆனது. இதன் மீது காலணிகளுடன் நடக்கக்கூடாது' என்றார். பிறகு குன்றின் மீது எப்படிச் சென்றால் திருமலையை அடையலாம் என்று வழிகாட்டி விட்டு, சட்டென மறைந்தார். வந்தது பத்மாவதித் தாயார் என்பதை உணர்ந்துகொண்ட அன்ன மய்யாவின் நெஞ்சில் பக்தி ஊற்று பெருக்கெடுத்தது.

தன் காலணிகளை வீசி எறிந்தார். பின் நூறு பாடல்கள் கொண்ட ஒரு சிறு காவியத்தை அப்போதே இயற்றினார். அன்னை பத்மாவதியின் கருணையைப் புகழ்ந்துபாடும் பாடல்கள் அவை. ஆனாலும் பாடலின் முடிவில் `எல்லாப் புகழும்  வெங்கடேச பெருமாளுக்கே' என்றார். அதனால் அந்தக் காவியம் ‘ வெங்கடேஸ்வர சதகமு' என்ற பெயரில்தான் விளங்குகிறது.

பின் திருமலையை அடைந்து வெங்கடாஜலபதியின் வடிவைப் பார்த்து மெய்மறந்து பாடி இன்பமுற்றார். அடுத்த நாளே ஓர் இனிமையான ஆச்சர்யமூட்டும் அனுபவம் அவருக்குக் காத்திருந்தது. வராக தீர்த்தத்தில் நீராடி வேங்கடவனின் சந்நிதிக்குள் நுழைய முயன்றபோது, ஏகாதசியான அன்று அந்த வேளையில் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. தான் இயற்றிய ஒரு பாடலை அன்னமய்யா பாட, கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டன. அர்ச்சகர் இதைக் கண்டு வியப்பில் மூழ்கினார்.

யோகிக்கு வேங்கடவனின் கட்டளை: அப்போது திருமலையில் கணவிஷ்ணு என்ற பெயர் கொண்ட யோகி இருந்தார். அவரின் கனவில் தோன்றிய இறைவன் ‘எனது பரமபக்தனான அன்னமய்யா இப்போது திருமலையில் இருக்கிறான். அவனுக்கு முத்ரதாரணத்தை நீ செய்து வைக்க வேண்டும்' என்றார்.

அப்படியே அன்னமய்யாவைத் தேடிக் கண்டுபிடித்தார் யோகி. அன்னமய்யாவின் இரு தோள்களிலும் சங்கு மற்றும் சக்கர உருவங்களை வெப்பத்தில் எழுதினார். பிறகு திருமாலின் பன்னிரண்டு திருநாமங்களை அன்னமய்யாவின் உடலிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் எழுதினார். (இதைத்தான் முத்ரதாரணம் என்பார்கள்). அப்போதிலிருந்து அன்னமய்யா ‘அன்னமாச்சார்யா' என்று அழைக்கப்பெற்றார்.

தினமும் ஒரு பாடலாவது வெங்கடாசலபதி மீது இயற்றாமல் விட்டதில்லை அன்னமாச்சார்யா. தன் இறுதி நாள்களை தாள்ளப்பாக்கத்திலும் திருப்பதியிலுமாக மாறிமாறிக் கழித்தார் அன்னமாச்சார்யா.

திருமலையிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் ‘பார்வேட்டு (பரிவேட்டை) மண்டபம்' ஒன்றை எழுப்பினார் அன்னமாச்சார்யா. வெங்கடேஸ்வரரின் திருவுருவம் வேட்டையாடுவதற்காகப் புறப்பட்டுச் செல்லும்போது இடையே ஓய்வெடுப்பதற்காகக் கட்டப்பட்ட மண்டபம் அது. அன்னமாச்சார்யா அங்குதான் முக்தி அடைந்தார். துந்துபி வருடத்தில் (1503) பகுள துவாதசி திதியில் மார்ச் ஏழாம் தேதியன்று அவரது ஆன்மா ஜோதியாக மாறித் திருமாலுடன் கலந்தது.

வெள்ளிக்கிழமை உற்சவத்தின் பின்னணி: அன்னமாச்சார்யா நினைவு நாளன்று திருமலைக் கோயிலுக்கு அருகில் உள்ள நாராயணகிரி தோட்டத்துக்கு அவரது விக்ரகம் (திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா ஆராய்ச்சி மையத்திலிருந்து) எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று அகோபிலத்திலிருந்து ஜீயர் சுவாமிகள் எழுந்தருளுவார். பெருமாள் அணிந்த ஸேஷவஸ்திரம் போன்ற பிரசாதங்களை அன்னமாச்சார்யாவின் வாரிசுக்கு அளிப்பார்.

பொதுவாக திருமால் கோயில்களில் வெள்ளிக்கிழமை அபிஷேகம் இருக்காது. ஆனால் அன்னமாச்சார்யா தொடங்கிவைத்த அந்தப் பழக்கம் இன்னமும் தொடர்கிறது. ‘கண்டி சுக்ரவார அபிஷேகம்' என்ற தனது பாடலில் அபிஷேகத்தின்போது என்னென்ன பொருள்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் எந்த விதத்தில் அபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதையும் விவரித்திருக்கிறார். ஆக திருமலை தெய்வ வழிபாட்டில் தவிர்க்க முடியாதவராகிவிட்டார் அன்னமாச்சார்யா.

அன்னமாச்சார்யா பிறந்த தேதி மே 22, 41 08

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in