

மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு
பாத நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் பெருமாளே - திருப்புகழ்
முருகா என்று ஒருமுறை மனமுருகி வேண்டி னால் முப்பொழுதும், எப்பொழுதும் நம்முடன் இருந்து காப்பான் என்பது வேத வாக்கு. முருகா என்று மனத்தில் நினைத்தாலே போதும். அவன் ஓடோடி வருவான். அவனை நினைத்தாலே அனைத்துக் கடவுள்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். அவனும் ஈசனும் ஒன்றே.
“அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்”
என்கிறது திருமுருகாற்றுப் படை. நமசிவாய என்பது அஞ்செழுத்து. அதை ஓதினால் அங்கு முருகன் தோன்றுவான். முருகன் ஒருவன் மட்டுமே ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்தவன். எளியவர்களின் இறைவன். அடியார்களின் அன்பன். எனவேதான் உன்னைப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். ஒவ்வொரு தலத்திலும் காட்சி தந்து அடியவர்களின் குறை தீர்க்கும் முருகன் மயிலம் நகரில் மன மகிழ்ச்சி அருளும் முருகனாக காட்சி அளிக்கிறான்.
தலக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறு குன்றின் மீது உள்ள இக்கோயில் சூரபத்மனால் வழிபாடு செய்யப்பட்ட தலம். மயில் வடிவ மலையாக இங்கு அசுரன் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. தேவாசுரப் போரில் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட சூரபத்மன், இங்கு வந்து தவம் செய்து, முருகனின் வாகனமாக தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க, மயில் வாகனனாக மாறினான் ஆறுமுகன்.
மயில் ஒன்று தோகை விரித்து ஆடுவது போலவே மலை காட்சி அளிக்கிறது. மயூராசலம் என்ற பெயரே மருவி மயிலம் என்று அழைக்கப் படுகிறது. செவ்வாய்க்கிழமை காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்திற்கு அர்ச்சனை செய்தால் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தகப்பன்சாமி முருகன்: ஒவ்வொரு தலத்திலும், மான்விழி மாதர்களின் மையலில் நான் அமிழ்ந்து போகாமல் நீயே என்னைக் காக்க வேண்டும் என்று வேண்டுவது போல் இங்கும் கந்தனிடம் கெஞ்சுகிறார் அருணகிரியார்.
“கொலை கொண்ட போர்விழி கோலோ, வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழை
கொண்டு லாவிய மீனோ, மானோ - - - - எனுமானார்"
வலையில் சிக்கி, மோகத் தீயில் மூழ்கி, பஞ்சமா பாதகங்களைச் செய்து பிணியால் அழிவேனோ? மனம் சிதறாமல் நீதான் என்னைக் காக்க வேண்டும் என்பவர், ஆரவாரத்துடன் எம தூதர்கள் என்னை இழுக்க வரும்போது நீயே உன் திருவடி தந்து அருள வேண்டும் என்று கேட்கிறார்.
"உறுதண்ட பாசமொடாரா வாரா எனையண்டி யேநம னார்தூ
தானோர் உயிர் கொண்டு போய்விடு நாள்நீ மீதாளருள்வாயே"
எனும் நாதர் ஈசனுக்கு ஞான உபதேசம் செய்தவன் என்று பூரிப்புடன்,
மகிழ் சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை
வாழ்வே வானோர் பெருமாளே”
என்று குறிக்கிறார். தந்தையே ஆனாலும் தகப்பனுக்கு உபதேசித்த தகப்பன்சாமி முருகன் என்ற பெருமை அவரின் ஒவ்வொரு பாடலிலும் தொனிக்கிறது.
முருகனின் வீரம்: சுயம்பிரகாசமாய் நின்ற ஜோதி முருகன். நேர் மையாய், பெரிய நெருப்பு உருவத்தில் வேலைச் செலுத்தி அசுரனை, அழித்தவன். வேடர்கள் வாழும் காட்டுக்குள் சென்று வள்ளியை மணம் புரிந்தவன், அழகுள்ளவன், சிவபெருமானால் வணங்கப்படும் திருவடிகளை உடையவன்.
"அவிர்கொண்ட சோதிய வாரார் நீள்சீ ரனலங்கை
வேல்விடும் வீரா, தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் வடிவாகி
மலைகொண்ட வேடுவர் காணூடேபோய் குறமங்கை
யாளுட னேமாலாயே மயல்கொண்டு லாயவள் தாள்
மீதேவீழ் குமரேசா” என்று கொஞ்சி மகிழ்கிறார்.
கூப்பிட்டவுடன் வரும் முருகன், கொஞ்சி மகிழும்போது வராமல் இருப்பானா? ஞான வேலவன் அல்லவா அவன்! தன் அடியவர்களுக்கு எது மகிழ்ச்சி தரும் என்று உணர்ந்து அதை அள்ளி வழங்கும் வள்ளல் அவன். மயிலம் முருகா என்று மனம் கனிந்து கூவினால் மயில் மீதமர்ந்து பறந்தோடி வருவான் பரம்பொருள் குமரன்.
(புகழ் ஓங்கும்)