

கர்னாடக இசைத் துறையிலும் திரைத் துறையிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்த பாடல்களையும் இசையையும் உருவாக்கியவர் பாபநாசம் சிவன். அவரின் மகள் டாக்டர் ருக்மிணி ரமணி. தன்னுடைய தந்தையின் வழியில் இறை அருளைப் பரப்பும் பல பக்திப் பாடல்களை எழுதியிருப்பவர்.
அண்மையில் இவர் எழுதி வெளியிட்டுள்ள ‘மன்னையில் கண்ணனின் லீலைகள்’ நூல் 32 பாடல்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமியின் லீலைகளே பாடலின் கருப்பொருளாக அமைந்துள்ளது நூலின் சிறப்பு. `பாலுக்குள் இருக்கும் வெண்ணெய்போல/ பாருக்குள் இருந்தான் பரந்தாமன்' என்பது போன்ற ஜனரஞ்சகமான மொழி நடையில் துலக்கமான பக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் ருக்மிணி ரமணி. அவரிடம் பேசியதிலிருந்து..
“மன்னார்குடி ராஜகோபாலசுவாமி லீலைகளைப் பற்றி சொல்லும் பாடல்கள் இவை. ஆயிரம் ஆண்டுகள் தவத்தில் மூழ்கியிருந்த கோப்ரளயர், கோபிலர் ஆகிய இரு தவசிகளும் தவத்திலிருந்து எழுந்தவுடன், கிருஷ்ணனின் லீலைகளைப் பார்க்க விரும்புவதாக நாரதரிடம் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
“இவ்வளவு தாமதமாக வருகிறீர்களே.. கிருஷ்ண அவதாரமே முடிந்து அவர் பாற்கடலுக்குச் சென்றுவிட்டாரே என்றார் நாரதர்.
“நாங்கள் நிச்சயம் பார்க்க வேண்டுமே... அப்போதுதான் இந்த ஜென்மம் சாபல்யம் அடையும்” என்கின்றனர்.
“அப்படியென்றால் மன்னார்குடிக்குச் சென்று கிருஷ்ணனைக் குறித்து தவம் செய்யுங்கள்” என்கிறார் நாரதர்.
மன்னார்குடியில் கிருஷ்ணனை நோக்கி கோப்ரளயரும் கோபிலரும் தவமிருக்கின்றனர். அவர்களுக்கு காட்சி அளித்த கிருஷ்ணனிடம், “நீங்கள் நிகழ்த்திய 32 லீலைகளையும் நாங்கள் பார்க்க அருள்புரிய வேண்டும்” என்று கோப்ரளயரும் கோபிலரும் கூறினர்.
“நான் விஸ்வரூப தரிசனம் எடுக்கிறேன். என்னை நீங்கள் ஒருமுறை வலம் வந்தால் ஒரு லீலையை உங்களுக்குக் காட்டுகிறேன். இவ்வாறே 32 முறை வலம் வந்தால் 32 லீலைகளின் தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும்” என்றார் கிருஷ்ணர்.
கிருஷ்ணன் அருளியவாறு அப்படியே 32 லீலைகளையும் தரிசித்த கோப்ரளயரும் கோபிலரும் ஜென்ம பரிபூரணம் அடைந்தனர். இதுதான் கிருஷ்ணன் தவசிகளுக்கு தன்னுடைய லீலைகளைக் காண்பித்த புராண விவரம். இந்த லீலைகளை சேவை என்றும் கூறுவர். அதை ஒட்டி நான் எழுதிய பாடல்களின் தொகுப்பே `மன்னையில் கண்ணனின் லீலைகள்'.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கும் பரவாசுதேவ சேவை, பூதகி மோட்ச சேவை, யசோதையிடம் தாய்ப்பால் அருந்தும் சேவை, வாயுள் வையம் காட்டிய சேவை, தவழ்ந்துவரும் சேவை, வெண்ணெய்க்கு அல்லாடும் பிள்ளை, மாடு மேய்த்தல் சேவை, தயிர் கடையும் சேவை, கோபியர் வஸ்த்ராபரண சேவை, குழலூதும் சேவை, உரலுடன் கட்டுண்ட சேவை உள்ளிட்ட 32 சேவைகள் என பாடல்களின் வரிகளைப் படிக்கும்போதே மனக் கண்ணில் காட்சிகள் விரியும் வண்ணம் எழுதியிருக்கிறேன்” என்றார் ருக்மிணி ரமணி.