

குன்றின் மேலமர்ந்த குமரன் கோயில்களில் சிறப்பு வாய்ந்தது சிரகிரி என்று அழைக்கப்படும் சென்னி மலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்தி ஐநூறு அடி உயரத்தில் உள்ள இக்கோயிலில் பல சிறப்புகள் உள்ளன.
சென்னிமலையின் சிறப்பு: ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் இடையே யார் பலசாலி என்று போட்டி நடந்தது. ஆதிசேஷன், மகாமேருவை சுற்றி வளைத்துக் கொண்டான். வாயுதேவன் தன்னுடைய பலத்தைக் கொண்டு மேருவைப் பிடுங்கி எறிய முயன்றார். இந்தப் போராட்டத்தில் மேருவின் சிகரப் பகுதி பறந்து விழுந்த இடமே சிரகிரி.
அங்கு ஓர் இடத்தில் சில காராம் பசுக்கள் தானாகப் பால் சொரிவதைக் கண்டு அங்குள்ள மக்கள் அந்த இடத்தைத் தோண்டியபோது அற்புத அழகுடன் ஒரு கற்சிலை கிடைத்தது. அதன் இடுப்புக்குக் கீழ் பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் இருப்பதைப் பார்த்து சிற்பி உளியினால் செதுக்கி சரி செய்ய முயன்றபோது. அதிலிருந்து ரத்தம் பீறிட்டது.
மக்கள் பயபக்தியுடன் அந்தச் சிலையை அப்படியே சிரகிரி குன்றின் மீது ஆலயம் எழுப்பி பிரதிஷ்டை செய்தனர். அழகன் தண்டாயுதபாணியாக அங்கு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தான். இன்றுவரை அதே தோற்றத்தில் காட்சி அளிக்கிறான் கந்தன்.
பழனி மலையிலிருந்து இங்கு வந்த அருணகிரியாருக்கு படிக்காசு வழங்கினான் முருகன். முருகன் தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட தலம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்கக் குளம் உள்ளது. கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம். “சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக” என்று குறிப்பிடுகிறார் தேவராய சுவாமிகள்.
முத்தமிழ் தலைவன் முருகன்: இம்மை, மறுமை என்னும் இருவினை நலன்களுக்கு காரணமானவன் முருகன். இயல் இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் தலைவன். பகல், இரவு, மறதி, நினைப்பு என்று தடுமாறும் புத்தியை தெளிவாக்கி `நீயே குரு என்று உணரும் ஞானத்தை அளிப்பாய் பெருமாளே' என்று சென்னிமலை முருகனை வேண்டுகிறார்.
"ஞானம் என்னும் ரகசியத்தை உபதேசித்து, அநுபூதி நிலையைத் தந்து உன்னுடன் ஒன்றும் பேரின்ப நிலையைத் தருவாயே சரவணபவப் பெருமானே" என்று விண்ணப்பம் வைக்கிறார் தன் திருப்புகழில்.
பகல் இரவினில் தடுமாறா பதிகுரு எனத் தெளிபோத
ரகசியம் உரைத்து அநுபூதி இரத நிலைதனைத் தருவாயே
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே! சரவணபவப் பெருமாளே!
அருணகிரியாரின் பாட்டில் மகிழ்ந்து முருகன் படிக்காசு அளித்ததாக சென்னிமலை ஆண்டவன் புகழ் பாடும் ஒரு நூலில் இடம் பெற்றிருக்கும் வரிகள் இவை: “நாட்டில் அருணகிரி நாதன் சொல் திருப்புகழ் பாட்டில் மகிழ்ந்து படிக்காசளித்த பிரான்” - என்று அந்த நூல் குறிக்கிறது.
பக்தியே பரம்பொருளை அடையும் வழி: உத்தமமான சற்குருநேயா, சமமில்லாத பெருமை உடையவனே, பேரறிவாளா, திருவருள் ஞானம் அருள்பவனே என்று போற்றும் அருணகிரியார், பக்தியால் உன் திருப்புகழை அன்புடன் பல காலம் பாடி, உன்னை உறுதியாகப் பிடித்துள்ளேன். நான் முக்தி அடைய நீ அருள வேண்டும் என்று ரத்தினகிரி திருப்புகழில் வேண்டுகிறார்.
"பக்தியால் யானுனைப் பலகாலம் பற்றியே மாதிருப்புகழ் பாடி
முத்தனாமாறு எனைப் பெருவாழ்வில் முக்தியே சேர்வதற்கு
அருள்வாயே.
உத்தமா தானசற் குணநேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத்திநிபாதா வெற்றி வேலாயுதப் பெருமாளே" - என்று முருகன் திருப்புகழையே பாடி அவன் பாதத்தையே பற்றிக்கொள்ளச் சொல்கிறார். சென்னிமலைக்கென்று தனித் திருப்புகழ் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும், தன்னுடைய பல பாடல்களில் `சிரகிரி' என்றே குறிப்பிடுகிறார். கந்தர் அலங்காரத்திலும் சிரகிரி பற்றிய குறிப்பு வருகிறது.
ஏகாந்த யோகம்: இரவு பகல் என்பது நினைப்பும், அது இல்லாத மறதியையுமே குறிக்கிறது. எந்த நினைவும் அற்று பரம்பொருள் ஒன்றையே சிந்தையில் நிறைத்து இருக்கும் நிலையே யோக அநுபூதி என்கிறார் அருணகிரியார். அந்த நிலை எளிதல்ல. “இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” என்று கந்தர் அலங்காரத்தில் குறிக்கிறார்.
அருள் தரும் அழகனாம் முருகனையே நினைத்தி ருந்தால் அந்த நிலையை எளிதில் அடையலாம். எங்கும் நிறைந்திருக்கும் மகாசக்தியாய் அடியார்கள் உள்ளத்தில் ஜோதி வடிவாய் இருக்கிறான். அவனின் திருப்புகழை மனமுருகிப் பாடுவதன் மூலம் நிரந்தர இதயவாசனாகி வாழ்வை சீராக நடத்த உதவுவான்.
(புகழ் ஓங்கும்)
- gaprabha1963@gmail.com