இரண்டு உள்ளங்கள் கிடையாது

இரண்டு உள்ளங்கள் கிடையாது
Updated on
2 min read

துன்னூன் மிஸ்ரி எனும் சூஃபி ஞானியிடம் ஒருவர் தன் குறையை எடுத்துக் கூறினார். “நான் வேளை தவறாமல் தொழுது வருகிறேன். அண்மைக் காலத்தில் ஒரு தொழுகையைக் கூட செய்யாமல் விட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் சில நாள்களாக என் தொழுகையில் வெறுக்கத்தக்க மாறுதலை நான் பார்க்கிறேன்.

தொழ வேண்டிய நேரம் வந்ததும் என் மனத்தில் ஒருவிதமான சங்கடம் தோன்றுகிறது. மனத்தை அடக்கிக்கொண்டு தொழுகையில் ஈடுபட்டால், தொழுகையின் பகுதிகளில் சிலவற்றை எனக்கே தெரியாமல் நான் விட்டுவிடுகிறேன். இந்த நிலைமை எனக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் இந்த வெறுப்பை என்னால் மாற்றிக்கொள்ள முடிய வில்லை. எனக்குக் காரணமும் தெரியவில்லை. பரிகாரமும் புரியவில்லை!” என்று அந்த மனிதர் சற்றுத் தயக்கத்துடன் தன் மனத்திலுள்ள எண்ணத்தைக் கூறி முடித்தார்.

துன்னூன் மிஸ்ரியின் கேள்வி அமைதியாக வெளிவந்தது.

“இந்த நிலைமை சில நாள்களாகத்தான் உனக்கு இருக்கிறது என்று கூறினாய் அல்லவா? முன்பெல்லாம் உனக்குத் தொழுகையில் வெறுப்புத் தோன்றவில்லையா?” என்று துன்னூன் மிஸ்ரி கேட்டார்.

“இல்லை. அப்போதெல்லாம் நான் தொழுகையில் விருப்பத்தைக் கண்டேன். என் மனத்தில் வெறுப்போ அலுப்போ தோன்றியது கிடையாது” என்று அந்த மனிதர் பதிலுரைத்தார்.

“தொழுகையில் உனக்கு எத்தனை நாள்களாக வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது?” என்று ஞானி கேட்டார்.

“ஏறக்குறைய 20 நாள்களாக இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் கூறினார்

“இருபது நாள்களுக்கு முன்னர் ஏதேனும் குறிப்பிடத்தக்கச் சம்பவம் நடந்திருக்கிறதா?”

சற்று யோசித்துப் பார்த்துவிட்டு, “அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் சென்ற மாதம் காய்கறிகள் விற்பனை செய்யும் நோக்கத்தில் ஒரு கடை வைத்தேன்” அந்த மனிதர் பதிலளித்தார்.

ஞானியின் முகம் பளிச்சிட்டது. “தொழுகை யில் வெறுப்பு ஏற்படுகிறது என்று சொன்னாய் அல்லவா? இந்த வெறுப்பினால் தொழுகையை நீ விட்டது உண்டா?” என்று கேட்டார்.

“உண்டு. இரண்டு அல்லது மூன்று தொழுகைகளை செய்யாமல் விட்டிருக்கிறேன்” என்றார் அந்த மனிதர்.

“தொழுகையை நிறைவேற்றாதபோது அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று ஞானி கேட்டார்.

“வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கடையை அலங்கரிப்பதில் அக்கறை செலுத்திக் கொண்டிருந்தேன்” என்றார் அவர்.

“அந்த அக்கறை இப்போதும் உனக்கு இருக்கிறதா?” என்று ஞானி கேட்டார்.

“நிறைய இருக்கிறது. இரவில் கூடக் கடையைப் பற்றிய நினைவு மாறுவதில்லை” என்று அந்த மனிதர் பதிலளித்தார்.

சிறிது நேர மௌனத்துக்குப் பின்னர், துன்னூன் மிஸ்ரியின் அறிவுரை தெளிவுரையாக வெளிவந்தது.

“மனிதனுக்கு இறைவன் இரண்டு கண்களையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறான். கையையும் காலையும் கூட இரட்டையாகத்தான் அவன் அளித்திருக்கிறான். ஆனால், எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களைக் கொடுக்கவில்லை. உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உள்ளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கறைகள் ஒரே நேரத்தில் ஆழமாக வேரூன்ற முடியாது.

உனக்குத் தொழுகையில் வெறுப்பு ஏற்படுவதற்கு, வியாபாரத்தில் உனக்கு இருக்கிற ஆழ்ந்த அக்கறையும் ஆசையுமே காரணம். இந்த அக்கறை, தொழுகையில் ஏற்கெனவே இருந்த அக்கறையை அழித்து விட்டது.

மீண்டும் உனக்குத் தொழுகையில் வெறுப்பு மறைந்து விருப்பம் ஏற்பட வேண்டு மானால், வியாபாரத்தைவிடத் தொழுகையில் அதிக அக்கறையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்” என்று அந்த ஞானி எடுத்துரைத்தார். தனக்கு நல்வழி காட்டிய ஞானிக்கு நன்றி சொல்லி அந்த மனிதர் உள்ளத் தெளிவுடன் விடைபெற்றார்.

தொகுப்பு: நிஷா

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in