

இசை உலகில் ஆளுமையுடன் விளங்கிய மேதைகளின் பெயர்கள் எந்த அளவுக்குப் பிரபலமோ அதே அளவுக்கு அவர்களின் ஊரும் பிரபலமாக இருக்கும். அரியக்குடி என்றாலே ராமானுஜம் நினைவு வரும். திருவாவடுதுறை என்றாலே ‘நாகஸ்வரச் சக்கரவர்த்தி’ டி.என்.ராஜரத்தினம் நம் நினைவுக்கு வந்துவிடுவார். இவர்களின் அடிச்சுவட்டில் திருப்பனந்தாள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தவில் வித்வானாகத் திகழ்ந்த டி.எஸ்.மாரிமுத்து.
அவர் மறைந்தாலும் தவில் வாசிப்பில் அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் என்றென்றைக்கும் இசை உலகில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். சிறு வயது முதல் மாரிமுத்து, அவருடைய தந்தை சீனுவாசனிடம் பால பாடங்களைப் பயின்றார். பின்னர், கூறைநாடு பழனிவேலிடம் குருகுல வாசம் பயின்று, கச்சேரிகள் நடத்தத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் தவில் வித்வான் கூறைநாடு கோவிந்தராஜனுடன் இரண்டாம் தவிலாக நாகஸ்வர வித்வான் திருவெண்காடு சுப்பிர மணியனின் குழுவில் சிறிது காலம் வாசித்தார். அதன் பின்னர், செம்பனார்கோயில் சகோதரர்கள் எஸ்.ஆர்.ஜி.சம்பந்தம், எஸ்.ஆர்.ஜி.ராஜன்னா குழு வினருடன் ஏறக்குறைய 25 ஆண்டுகள் வாசித் தார்.
1980 முதல் 1990 வரை சிங்கப்பூர் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு உள்பட்ட ஸ்ரீ சீனுவாச பெருமாள் கோயிலில் பணிபுரிந்தார். அந்தக் காலத்தில் ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளிலும் குடமுழுக்கு விழாக்களிலும் தவில் வாசிக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. மாரிமுத்துவின் மகன்கள் மூவரில் குருமூர்த்தி, அருணஜடேசன் ஆகிய இருவர் அவரைப் பின்பற்றி நாகஸ்வரம் வாசிக்கிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்வதானால், ஆஸ்திரேலிய மண்ணில் கால்பதித்த முதல் தவில் கலைஞர் மாரிமுத்துதான். திருப்பனந்தாள் காசி மட ஆதீன வித்வானாகிய இவர், திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களிலும் வாசித்துள்ளார். தமிழ்நாடு அரசு இவருடைய இசைச் சேவையைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருதை வழங்கிக் கௌரவித்தது. முத்தமிழ்ப் பேரவையின் ‘தவில் செல்வம்’ விருது உள்படப் பல விருதுகளும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
டி.எஸ்.மாரிமுத்து பற்றி பிரபல நாகஸ்வர வித்வான் செம்பனார்கோவில் எஸ்.ஆர்.ஜி.ராஜன்னா, “காலம் தவறாமை, சுனாதமான வாசிப்பு, சக கலைஞர்களுடன் பக்குவமாக அனுசரித்து வாசிக்கும் இயல்பு, லய சுத்தமான வாசிப்பு ஆகியவை இன்றைய இளைய தலைமுறை இந்தப் பண்பான மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பண்புகள் காலம் கடந்தும் வரலாற்றில் அவரை ஒளிரவைக்கும்.