

தமிழர்கள் உலக அரங்கில் சிற்பக் கலையில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று விளங்கினா் என்பதற்கு நம் தமிழ் மண்ணில் உள்ள அநேக திருக்கோயில்களே உன்னதமான எடுத்துக்காட்டுகளாகும். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள மதுரோதைய ஈஸ்வரமுடையார் திருக்கோயில் அதில் ஒன்று.
இதன் சிறப்பம்சமே தேவ கோட் டத்தில் பிரஸ்தர மட்டத்தில் உள்ள கொடுங்கைகளின் கீழ் சிற்றுளி கொண்டு மிக அற்புதமான கை வண் ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தெய்வ உருவங்களின் சிற்பங்களே!
பேரூர், கிருஷ்ணாபுரம், ஸ்ரீவை குண்டம், அம்மன்குறிச்சி, திருநெல் வேலி, குடுமியான் மலை போன்ற கோயில்களில் உள்ள சிற்பங்கள் எல்லாம் ஆளுயர பிரம் மாண்டத்துடன் உருவாக்கப்பட்டவை.
ஆனால், விக்கிர மங்கலத்தில் உள்ள நுண்ணிய சிற்பங்கள் எல்லாம் சாஞ்சி ஸ்தூபி உள்ள சாரநாத்தில் காணப்படும் சிறிய நுட்பமான வகை சிற்பங்களாகும். வேறெந்த தலத்திலும் இதுபோன்ற கலை வேலைப்பாடமைந்த வெகு சிறிய சிற்பங்களை நாம் காண முடிவதில்லை.
வணிக நகரம்: விக்கிரமங்கலத்தில் உள்ள பாண்டியர் காலக் கல்வெட்டுகள் அவ்வூரில் தென்கல்லகநாடு என்ற உள்நாட்டுப்பிரிவில் பாண்டிய நாட்டில் இருந்ததாகத் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் நீண்ட நெடிய நாகமலைத் தொடரும், சிறுகுன்றுகளும் காணப்படுவதால் இதனைக் கல்லகநாடு என்று அழைத்திருக்கின்றனர்.
`தென் கல்லகநாட்டில் உள்ள விக்கிரம சோழபுரம்' என்று கல்வெட்டுகளில் விக்கிர மங்கலம் குறிப்பிடப்படுகிறது. பொ.ஆ. (கி.பி.) பதினோராம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் ஆட்சிபுரிந்த சோழர்களின் அரசப் பிரதிநிதியாக விளங்கிய விக்கிரம சோழ பாண்டியன் பெயரால் இது விக்கிரமசோழபுரம் என்று வணிக நகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
விக்கிரமசோழபாண்டியனின் (காலம் பொ.ஆ.1050-1079) கல்வெட்டுகள் பாண்டிய நாட்டின் பல இடங்களில் உள்ளன. விக்கிரம சோழபுரம் என்ற பெயரே பிற்காலத்தில் விக்கிரமங்கலம் என மருவி வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அய்ஹோளே என்ற முக்கிய வணிக நகரத்தில் உருவான திசையாயிரத்து ஐநூற்றுவர் என்ற புகழ்பெற்ற வணிகர் குழுவோடு தொடர்புடைய வணிக நகரமாக விக்கிரமசோழபுரம் விளங்கியுள்ளது. ஊருக்கு மேற்கே கிழக்குப் பார்த்த வண்ணம் அபூர்வ சிவப்பு கிரானைட் கற்களால் கோட்டைச் சுவர்போல உறுதியான சுற்றுச்சுவர்களால் ஆன திருக்கோயிலாக அமைந்துள்ளது.
கோயிலின் எதிரே தெப்பக்குளமும், பாண்டியன் கிணறும் உள்ளன. கோயிலின் வாசலில் பலி பீடம், நந்தி மண்டபம் உள்ளன. இதனையடுத்து, முன்புறம் வேலைப்பாடு களோடு கூடிய தூண்களுடன் கூடிய முகமண்டபம் உள்ளது. இதனையடுத்து வேலைப்பாடு கொண்ட தூண்கள் தாங்கி நிற்கக்கூடிய மகாமண்டபம் உள்ளது.
மகாமண்டப வடபுறம் அம்பாள் சிவனேசவல்லி சந்நிதி உள்ளது. ஒரு காலகட்டம் வரை பிரதான மூல அம்பாள் கோயில் சுவாமி சந்நிதியின் தென்புறம் தனிக்கோயிலாக இருந்தது. பொ.ஆ. 14ஆம் நூற்றாண்டில் அந்நியர் படையெடுப்பில் அது பெரிதும் சிதிலமடைந்து வழிபாடு நின்று போனது. இடைக்கால ஏற்பாடாக அம்பாள் விக்ரகத்தை தற்போது சுவாமி சந்நிதியில் மகாமண்டபத்தில் நிறுவியுள்ளனர்.
இதனையடுத்து கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபத்துடன் கூடிய சிவன் சந்நிதி உள்ளது. இதனைச் சுற்றி புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்ட கலைநயமிக்க தூண்களைக் கொண்ட திருச்சுற்று நடைமாளிகை உள்ளது. கன்னி மூலை கணபதி விக்ரக விதானத்தில் கஜலட்சுமி முதலிய லட்சுமியின் உருவங்கள் கொண்ட பட்டியல் கல் உள்ளது. தேவ கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் கேது விக்ரகங்கள் உள்ளன. விமானத்தின் சிகரம் சதுர வடிவில் உள்ளது.
வளைகாப்பு அலங்காரம்: கருவறை மூலவராக சாநித்தியமிக்க தெய்வமாக மதுரோதைய ஈஸ்வரமுடையார் எழுந்தருளியுள்ளார். பிரதோஷ வழிபாட்டில் திருமணத் தடை நீங்க பரமனுக்கு பாலாபிஷேகமும், சந்தான பாக்யத்திற்கு பச்சரிசி மாவு அபிஷேகமும், இதய சம்பந்தமான நோய்களுக்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்த நெய்யை சாப்பிடுவதையும் இங்கு கூடும் பக்தர்கள் நம்பிக்கையோடு செய்கின்றனர். அதுபோல அம்பாளுக்கு வளைகாப்பு அலங்காரம் செய்து வணங்குவதால் மாங்கல்ய பலம் நீடிப்பதாக நம்பிக்கையுள்ளது.
அர்த்தமண்டபம், கருவறைச் சுவர்களை சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன. இத்தூண்களின் மேல்புறம் எழுதகப் படையில் நடனமாடும் மாது, காதல் வயப்பட்ட ஆண், பெண், மத்தளம் வாசிப்போன், பாசுபதக்கணை பெற ஒற்றைக் காலில் தவம் புரியும் அர்ச்சுனன், சிலம்ப வீரர்கள் ஆகிய நுட்பமான சிறு சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்றுளி கொண்டு மிகச்சிறிய வடிவில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் காண்பவர் மனதை கவர்ந்து வியப்பில் ஆழ்த்துகிறது. கருவறை மூலவர் விதானத்தில் உள்ள விமானம் உள்ளே வெற்றிடமாக கொடும்பளூர் மூவர் கோயில் விமான அமைப்பில் காணப்படுகிறது.
அரசர்களின் கைங்கர்யம்: இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் மூலவர் மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் நித்ய பூசை, விழா செலவினங்களுக்கு சடையவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன், மாறவர்மன் பராக்கிரம பாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன், முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்கள் பல்வேறு கொடைகளை அளித்துள்ளனர். பொ.ஆ.12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கலைக் கருவூலத்தை பொ.ஆ.17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது.
விழாக்கள்: சுற்றுவட்டாரத்தில் எங்குமே காணக் கிடைக்காத அரிய வகை சிவப்பு நிற கிரானைட் கற்களால் மிக உறுதியாக கட்டப்பட்ட இக்கோயிலை தற்போது மறுபடியும் புனரமைத்து குடமுழுக்கு வைபவம் நடத்திட ஊராரும், ஆன்மிக அன்பர்களும் முயற்சி எடுத்து வருகின்றனர். தினமும் இருகால பூசை சிறப்பாக நடைபெறுகிறது.
சித்ரா பெளார்ணமி நாளில் திருக்கல்யாண உற்சவம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், அட்சய திருதியை, விநாயகர் சதுர்த்தி, பரதநாட்டிய நிகழ்வுடன் நவராத்திரி கொலு உற்சவம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை முதல் சோமவாரத்தன்று 108 சங்காபிஷேகம், கார்த்திகை மகாதீபம், ஆருத்ரா தரிசனம், தைப்பொங்கல் மூன்று நாள் உற்சவம், மகாசிவராத்திரி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
- vganesanapk2020@gmail.com