

பெங்களூரிலிருந்து 80 கி.மீ, தொலைவிலும் தும்கூரிலிருந்து சுமார் 20 கி.மீ.க்கும் அதிகமான தொலைவிலும் தேவராய துர்கா என்னும் சிறு நகரம் உள்ளது. இங்குள்ள குன்றின் கீழேயும் மேலேயும் நரசிம்மர் குடிகொண்டுள்ளார். கீழேயுள்ளவர் போக நரசிம்மர் மேலே யுள்ளவர் யோக நரசிம்மர். குன்றின்மீது உள்ளவருக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது. குன்றின் மீதுள்ள யோக நரசிம்மர் காலம் காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மூன்று யுகங்கள்: சத்ய யுகத்தில், ஆயிரம் ஆண்டுகள் இங்கே பிரம்மா தவம் செய்ததாகவும் அவருக்கு விஷ்ணு, நரசிம்மராகக் காட்சி தந்ததாகவும் இதனால் இங்குள்ள நரசிம்மர், பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது ஐதீகமாகப் போற்றப்படுகிறது.
அதன்பிறகு, துவாபர யுகத்தில் மழை இல்லாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. கௌதமர் ஆசிரமத்தில் மட்டும் தண்ணீர் இருந்ததால், அங்கே ஏராளமான முனிவர்கள் தங்கினர். ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவரும் கௌதம முனிவருக்கும் அவரிடமிருந்த காமதேனுவுக்கும் எதிராகச் செயல்பட்டனர். அதனால், கௌதமர் சினந்து அந்த முனிவர்களின் தவப்பலன்கள் அனைத்தையும் இழக்கச் செய்தார்.
இதனால் பரிதவித்த முனிவர்கள், கௌதமரிடம் பரிகாரம் கேட்டனர். கௌதமர், “இந்தத் தேவராய துர்கா குன்றில் உள்ள கல்யாணி தீர்த்தத்தில் நீராடியபின், யோக நரசிம்மரை வழிபடுங்கள். உங்களின் தவப் பலன்கள் திரும்ப கிடைக்கும்” என்றார். முனிவர்களும் அப்படியே யோக நரசிம்மரை வழிபட்டு, இழந்த தவப்பலன்களைத் திரும்பப் பெற்றனர்.
திரேதா யுகத்தில் இந்தப் பகுதிக்கு வந்த ராமர், நரசிம்மரைத் தரிசித்தார். அப்போது அவர் ஒரு சுனையை உருவாக்கியதாகவும் அதில் சுரக்கும் நீர் இன்றைக்கும் சுவையாக இருப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
பெயர்க்காரணம்: இந்த ஆலயம் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம் கடந்து, 17ஆம் நூற்றாண்டுக்கு வருவோம். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த தேவராயர் என்பவர் இந்த மலையைச் சுற்றி கோட்டை எழுப்பினார். இதனால்தான் இந்த இடத்துக்கு தேவராய துர்கா எனப் பெயர் வந்ததாம்.
குன்றின் உச்சியில் உள்ள நரசிம்மர் கோயிலை கன்டிவராயர் என்பவர் நிர்மாணித்த வரலாறு உள்ளது. பிறகு, மைசூர் மன்னர்கள் ஆண்டபோது, கோயிலை இன்றைய நிலைக்குப் புதுப்பித்துள்ளார்கள். இந்தக் கோயில் குன்றைப் பார்க்கும்போது, கிழக்கில் யானை போன்றும் வடக்கே கருடன் போன்றும் தெற்கே சிங்கம் போலவும் காட்சியளிக்கும் என்கின்றனர்.
இனி கோயிலுக்குள் போவோமா? குன்றின் அடியில் ஒரு நரசிம்மர் இருக்கிறார். பிரம்மாவை ஒரு முறை பார்க்கவந்த துர்வாசர், அடிக்கோயில் நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். குன்றின் அடிவாரத்திலிருந்து ஆயிரம் படிகள் மேல் ஏறி உச்சியை அடைகிறோம்.
காலையில் 10 மணிக்குத்தான் கோயில் திறக்கிறது என்றாலும், அதிக வெயில் வருவதற்குள் படிகளில் ஏறிவிடுவது நல்லது. குன்றின் உயரம் 1,204 மீட்டர். திராவிடக் கட்டிடக் கலையில் 5 நிலையுடன் கூடிய கோபுரம் மையமாக எழுந்துள்ளது. கோபுரத்தின் இருபுறமும் இறக்கைபோல் விரிந்து அதன் உச்சியில் மாடங்கள் அமைத்து அதில் பொம்மை தெய்வங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கிழக்கு வாசல்: கோயிலுக்குக் கிழக்கு பார்த்த வாசல். நேராகக் கருவறை. அங்கு நரசிம்மர் மடியில் லட்சுமியை வைத்துக் கொண்டபடி நம்மை ஆசிர்வாதம் செய்கிறார். உக்கிரமானவர் எனக் காட்டுவதற்கு மீசை மேல்நோக்கி எழுந்திருந்தாலும், கூர்ந்து பார்த்தால் கருணைதான் தெரிகிறது! இந்த நரசிம்மர் அலங்காரப்ரியர். அதற்கு ஏற்ப கூட்டமும் வருவதால் அவருடைய கழுத்தை பூக்களும் மாலைகளும் ஒன்றுக்குப் பத்தாக அலங்கரிக்கின்றன.
புத்திர பாக்கியத்துக்குப் பிரசாதம்: சிறு சிறு சந்நிதிகளாக கருடன், ஆஞ்சநேயர், ராமானுஜர், நம்மாழ்வார் ஆகியோரும் இருக்க அவர்களையும் தரிசித்து வெளியே வந்தால், எதிரில் கல்யாணி தீர்த்தக் குளம் உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் இந்தத் தீர்த்தத்தில் குளித்துவிட்டுத்தான் நரசிம்மரைப் பார்க்க உள்ளே செல்கிறார்கள்.
நரசிம்ம ஜெயந்தி விசேஷம். சித்திரை மாதத்தின் பிரம்ம முகூர்த்தத்தில் சப்தரிஷிகள், இங்கு கூடி நரசிம்மரைப் பூஜித்துச் செல்வதாக ஐதீகம்.
பங்குனி மாதம் பௌர்ணமியின்போது தேரோட்டம் நடக்கிறது. குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் இந்தச் சமயத்தில் தம்பதி சமேதராக வருகின்றனர். எதற்கு? அப்போது அவர்களுக்கு ‘கருதபுதி’ என்னும் பிரசாதம் வழங்கப்படுகிறது. அதை வாங்கி பயபக்தியுடன் சாப்பிடும் தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகிறது என்பது நம்பிக்கை.
தேர் புறப்படும் முன் கருடன் அதற்கு நேர் எதிரே வானத்தில் மூன்று முறை சுற்றி வருகிறது. இது காலம் காலமாக நடக்கிறது. இப்படிச் சுற்றி வந்த பிறகுதான் தேரோட்டம் கிளம்பும். கோயில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்துள்ளது. மலைக்குன்று என்பதால், இங்கு குரங்குகளின் அட்டகாசம் உண்டு. குன்றின் மீது நின்றபடி சுற்றிப்பார்க்க நன்றாக இருக்கும்.
- radha_krishnan36@yahoo.com