

தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற திருவிழாக்கள், பண்டிகைகளில் நரசிம்ம ஜெயந்தியும் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் அச்சுதபுரம் எனப்படும் சாலியமங்கலத்தில் 378ஆவது ஆண்டாக ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படுகிறது. தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் காலத்திலிருந்து இந்த விழா கொண்டாடப்படுவதிலிருந்தே இதன் பாரம்பரியப் பெருமையை அறிந்துகொள்ள முடியும்.
இந்த ஆண்டும் இன்றைக்கு (4 - 5 - 2023) ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீநிவாஸபெருமாள் சந்நிதியில் நரசிம்மர் பிம்பத்துக்குப் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு, பெருமாளை கருட சேவையில் எழுந்தருளச் செய்து பாகவத மேள பக்த சமாஜத்தினர் ஸ்ரீ பிரகலாத சரித்திரத்தை நாட்டிய நாடகமாக இரவு முழுவதும் நடத்தவிருக்கின்றனர். அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நரசிம்ம அவதாரம் மேடையில் பக்தர்களுக்குத் தரிசனமாகும் வைபவம் நடக்கும்.
தொடர்ந்து அன்றைக்கு இரவு ஸ்ரீ ருக்மணி பரிணயம் பாகவதமேள நாட்டிய நாடகம் நிகழ்த்தப்படவிருக்கிறது. 6-5-23 காலை பாகவத சம்பிரதாயப்படி ஸ்ரீ ருக்மணி கல்யாண வைபவமும் மாலையில் ஸ்ரீஆஞ்சநேய உற்சவமும் நடைபெறவிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: ஸ்ரீ லக் ஷ்மி நரசிம்ம பாகவதமேள பக்த சமாஜம், 94440 71220, 94436 74366.