

மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள உத்திராபதீஸ்வரருக்குச் செண்பகப்பூ உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது.
சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் சிறுதொண்டர் தன் மகனையே கறிசமைத்து இறைவனுக்கு அமுது படைத்துத் தன் பக்தியை வெளிப்படுத்தி முக்தியடைந்த நாள் ‘அமுதுபடையல் திருவிழா’வாக உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது. அதிலிருந்து 21ஆவது நாள் திருவோண நட்சத்திரத்தில் வாதாபி கொண்டான் எனப்படும் நரசிம்மவர்மன் மோட்சம் பெற்ற ‘செண்பகப்பூ உற்சவம்’ கொண்டாடப்படுகிறது.
தென்திசை நோக்கி முருகன்: இத்தலத்தில் சுமார் 400 வருடங்கள் பழைமைவாய்ந்த முருகன் தென் திசை நோக்கி வீற்றுள்ளது சிறப்பு. இதே தலத்தில் உத்திராபதீஸ்வரர் வீற்றிருக்கிறார். சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் செண்பகப்பூ உற்சவத்தன்று உத்திராபதீஸ்வரருக்குப் பட்டு சாத்தி வணங்கினால் கண்திருஷ்டி நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆலயத்தின் செண்பகப்பூ உற்சவத்தின் சிறப்பை மேலும் விரிவாக அறிந்துகொள்வோம்.
சிவனடியாரான தளபதி: நரசிம்ம பல்லவரின் படை சேனாதிபதி பரஞ்சோதியார். அப்பழுக்கில்லாத சிவபக்தர். வாதாபி போரில் அவரின் தீரத்தைக் கண்ட மன்னனுக்குப் பெருமை இருந்தாலும், சிவபக்தரான பரஞ்சோதியைப் போரில் ஈடுபடுத்தி கொலைத்தொழில் புரியவைத்துவிட்டோமே என்று மனம் கலங்கினார். பரஞ்சோதிக்குப் பொன் னும் நிலமும் தானமாக அளித்து, சிவநெறியைப் பரப்புவதற்கு வேண்டினார். மன்னரின் அன்பிற் கிணங்க பரஞ்சோதி சிவநெறியில் ஈடுபட்டார்.
திருச்செங்காட்டான்குடி என்னும் புண்ணியத் தலத்தில் பரஞ்சோதி அன்னமடம் கட்டி அன்னக்கொடி உயர்த்தி தினமொன்றுக்கு ஆயிரம் சிவதொண்டர்களுக்குக் குறையாமல் திருவமுது படைத்து சிவத்தொண்டு செய்துவந்தார். தினமும் கணபதீஸ்வரரை வழிபட்டுச் சிவனடியாருக்கு உணவு கொடுத்து உபசரித்த பின்பே தான் உணவு உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தார்.
அவருடைய மகன் சீராளன். சிவனடியார்கள் பரஞ்சோதியின் சிவ பக்தியைக்கண்டு அகமகிழ்ந்து, அவருக்கு ‘சிறுதொண்டர்’ என்று நாமகரணம் சூட்டி அழைத்தார்கள். சிவபெருமான், சிறுதொண்டரின் பக்தியின் பெருமையை உலகறியச் செய்ய நிகழ்த்திய திருவிளையாடலே இந்தச் செண்பகப்பூ உற்சவத்துக்கு முகாந்திரமாக உள்ளது.
சிவபெருமான் சிவனடியாராக உருமாறிவந்து சிறுதொண்டரிடம், பிள்ளைக்கறி இருந்தால் சாப்பிட வருவதாகக் கூறினார். உடனே சிறுதொண்டர் தன் பிள்ளை சீராளனையே கறி சமைத்துக் கொடுத்துத் தன் பக்தியை வெளிப் படுத்தினார். சிறுதொண்டரின் பக்தியைக் கண்டு மனம் நெகிழ்ந்த இறைவன், சீராளனை உயிர்ப்பித்துத் தந்ததோடு, “சிறுதொண்டா நீ வேண்டும் வரத்தைக் கேள்” என்றார்.
சிறுதொண்டரோ தனக்கு உதவி செய்து தன்னை ஆற்றுப்படுத்திய மன்னரை நினைத்து, “நான் இந்த சிவத்தொண்டு செய்ய காரணமாயிருந்த என் மன்னருக்கு வரம் தாருங்கள்” என்றார் சிவபெருமானிடம். சிவபெருமான், “திருவோண நட்சத்திரத்தில் வடக்கு வீதியில் செண்பகப்பூவாசமாக உன் மன்னருக்கு முக்தி அளிக்கிறேன்” என்றார். 63 நாயன்மார்களில் ஒருவராக சிறுதொண்டருக்கும் சிவபெருமான் முக்தி வழங்கினார்.
| வரும் சித்திரை 28 வியாழக்கிழமை (11.05.23 ) மாலை 6 மணிக்குத் திருவோண நட்சத்திரத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து ரிஷப வாகனத்தில் உத்திராபதீஸ்வரர் வீதியுலாக் காட்சி நடைபெறவுள்ளது. |
- ஜி.மனோகரன்