தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 12: திருவொற்றியூர் | மனக்கவலை தீர்க்கும் மாலோன் மருகன்

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 12: திருவொற்றியூர் | மனக்கவலை தீர்க்கும் மாலோன் மருகன்
Updated on
2 min read

அரிவை ஒரு பாகர் திகழ்கநக மேனி உடையாளர் திருவளரும்
ஆதிபுரியதனில் மேவு ஜெயமுருக தேவர் பெருமாளே.
- திருப்புகழ்

மனிதனின் நோய்களுக்கு மனக்கவலையே காரணம். எல்லையற்ற ஆசைகளை மனதில் குவித்து வைத்துக்கொண்டு அதைத் தேடி ஓடி, கிடைக்காமல் அல்லலுற்று, வேதனை, விரக்தி, எதிர்பார்ப்பு என்று ஏங்கிக் கவலையுறும் மனிதனையே நோய்கள் தேடி அடைகின்றன. ‘எண்சாண் உடலுக்குள் ஏங்கித் தவிக்கும் எந்தன் ஆசைகளை நீக்கி உன் பதம் தந்தருள் பெருமானே’ என்றுதான் அருணகிரியார் உருகி வேண்டுகிறார். அடியவர்களின் மனக்கவலை போக்கவே திருவொற்றியூரில் அருளாட்சி புரிகிறான் சிவக்குமாரன்.

திருவொற்றியூர் சிறப்பு: பிரளயத்துக்குப் பின் புது உலகைப் படைக்க பிரம்மா, ஈசனை வேண்டியபோது அவர் அருளால் ஒரு வெப்பக்கோளம் உண்டா னது. அதிலிருந்து ஒரு மகிழ மரமும் அதன் அடியிலிருந்து சுயம்புவாக ஒரு லிங்கமும் உண்டாயின. பிரளய நீரை ஒற்றி எடுத்ததால் இது ‘ஒற்றியூர்’ என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மகிழ மரத்தின் அடியில்தான் இறைவனைச் சாட்சி வைத்து சுந்தரர் சங்கிலி நாச்சியாரை மணம் செய்துகொண்டார். பட்டினத்தாரின் ஜீவசமாதி இங்கே உள்ளது.

திருமுருகனின் பெருமை: விசாலமான திருக்கோயிலின் நடுநாயகமாக பாலசுப்ரமணியமாகக் காட்சி யளித்து, அருணகிரியார் மூலம் தனக்கு இரண்டு திருப்புகழ் பெற்றுக்கொண்டான் கந்தவேள். ஐந்தடி உயரத்தில் ஒரு முகம், நான்கு கரங்களுடன், மயிலுடன் அழகுறக் கருணை வழிய நிற்கிறான் கார்த்திகேயன்.

அவன் அழகில் மயங்கிய அருணகிரியார் பிரகாசமான உருவத்தோடு, சராசரம் அனைத் தையும் தன்னுள் அடக்கியவனே என்று பூரிக்கிறார். தேஜஸ் உடையவன், பலவகையான பராக்கிரமம் உடையவன், கருணையே வடிவான ஒளிப்பிழம்பானவன், தூய்மையானவன், பேரொளி வீசும் திருமேனி உடையவனே என்று அடுக்கும் அருணகிரியார் தவத்தில் சிறந்த மகா தவசிகளின் இதயத்தில் குடியிருப்பவன் என்று குறிப்பிடுகிறார்.

‘யோகதவ மிகுமுக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவு பெருமாளே!’ என்றே முருகனை விளிக்கிறார். ‘சொரூபப் பிரகாச விசுவரூபப் பிரமாகநிச சுகவிப்பிர தேசரச சுபமாயா... கருவிற் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளையெத்திடி... கருணைப் பிரகாசவுன தருளுற்றிட ஆசில் சிவ கதி பெற்றிட ரானவையை...யொழிவேனோ?’ என்று முருகனிடம் வினவுகிறார்.

உன் திருவருளைப் பெறுவதால் என் கவலைகள் அனைத்தும் நீங்கி சிவகதியை நான் அடைய மாட்டேனா என்று கேட்பவர், அவனருள் இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்று முடிக்கிறார்.

ஞான அருள் தரும் ஞானவேல்: ‘அழகிய மகளிரின் மேல் மையல் கொண்டு அலையும் பித்தன் என்று உலகோரின் பழிச்சொல்லில் இருந்து என்னை விடுவித்து, மேன்மை அடைவதற்கான வழி உன்னை வணங்குவதே என்கிற ஞானத்தை அருளும் கந்தனே’ என்கிறார், ‘கரிய முகில் போலும் இருள் அளக பார கயல்’ என்னும் திருப்புகழில்.

பரமானந்தப் பரம்பொருள்: ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள்தாம் எல்லாத் தெய்வங்களும் என்று உணர்ந்த அருணகிரியார் தன் எல்லாத் திருப்புகழிலும் அனைத்துத் தெய்வங்களின் பெருமைகளைக் கூறி அவர்களால் வணங்கப்படும் பெருமாளே என்றுதான் முருகனைத் துதிக்கிறார்.

‘அரி பிரமர் தேவர் முனிவர் சிவ யோகர் அவர்கள் புகழ் ஒத
புவிமீதே அதிகநடராஜர் பரவுகுரு ராஜா’
என்று பாடும் அருணகிரியார்,
‘திருவளரு மாதிபுரி யதனில் மேவு ஜெயமுருக தேவர் பெருமாளே” என்று
மகாலக் ஷ்மி வசிக்கும் இடம் திருவொற்றியூர் என்று குறிப்பிடுகிறார்.

ஆதியில் உண்டான முதல் கோயில் என்பதால் ஈசன் ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதால் இத்தலத்தை ஆதிபுரி என்றே அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

‘திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு ஆதிசிவ னருள்பாலா...’ என்று ஈசனுடன் சேர்த்தே கந்தனைப் புகழும் அருணகிரியார் உரைத்தபடி அழியாத சுத்த பிரகாசமான முருகன், நாம் மீண்டும் கருவில் பிறவாதபடி காத்து, இம்மையில் நம் மனக் கவலைகளையும் நீக்குவான்.

(புகழ் ஓங்கும்)

- gaprabha1963@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in