

‘நாறா தெடுத்தடவி யெரியூடே.. நாணாமல் வைத்து விட நீறா
மெனிப்பிறவி நாடா தெனக்குனருள் புரிவாயே’
- திருப்புகழ்
பிறப்பு, இறப்பு என்கிற சுழலில் சிக்கித் தவித்தாலும் நோய், வறுமை, வேதனை, துக்கம், துயரம் என்று உலகப் பிணிகள் சுற்றிச் சூழ்ந்தாலும், இறைவனை வேண்டவும் அவன் அருளில் நனையவும் அவன் கருணையை உரக்க உலகுக்கு அறிவிக்கவும் பூமி வாழ்க்கையே உகந்ததாக இருக்கிறது. ஜீவன்களை மேம்படுத்தவும் அவர்களை இறைவனின் அடியவர்களாக்கவுமே பல மகா புருஷர்கள் பக்திநெறியைத் தங்கள் பாடல்கள் மூலமாகக் காட்டி அருளியிருக்கிறார்கள்.
தித்திக்கும் தேன்தமிழால் கந்தனின் கருணையை அருணகிரிநாதர் பலவிதச் சந்தங்கள், தாள நயங்களுடன் பாடல்களால் வெளிப்படுத்தியிருக்கிறார். முருகனே தன் ஜீவன் என்றாலும், பிற கடவுளரின் புகழைப் பாடவும் போற்றவும் அவர் தயங்கியதில்லை.
தலச் சிறப்பு: வாருணி என்கிற தேவன் துர்வாச முனிவரால் யானை உடலும் ஆட்டுத் தலையும் உள்ள விலங்காக மாறச் சாபம் பெற்றான். அவ்வுருவத்துடன் வந்து வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற தலம் திருவாடானை.
முருகன் உறையும் இடங்களை எல்லாம் தேடித் தேடித் தரிசித்த அருணகிரியார் இங்கே வந்து முருகனை ஞானஸ்கந்தனாகத் தரிசித்தார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று சிறப்பு பெற்றது திருவாடானை. ஞான தண்டாயுதபாணியாக விளங்கும் கந்தனை, ‘ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தமுறை பெருமாளே’ என்கிறார்.
இருவிதப் பிணி நீக்கும் இறைவன்: பிறக்கும் உயிர்கள் அந்தந்த காலத்தில் இளமை, முதுமை, பருவங்களை அடைந்து முடிவில் மரணத்தைத் தழுவுகின்றன. மரணத்தின்போதுதான் வாழ்க்கை நிலையாமை என்கிற உணர்வு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இரண்டு விதமான பிணி என்கிறார் அருணகிரியார். ஒன்று உள்பிணி.
மாமிசம் நிறைந்த இந்த உடலுக்குள் ஏற்படும் நோய்கள். இன்னொன்று, பிறவிப் பிணி - கர்ம வினை, ஆசைகளின் காரணமாக ஏற்படுவது. நோயால் பாதித்த உடல் அழிந்து போனால் ஊரார் கூட்டமாக வந்து அழுது, ஓய்ந்து, பலவிதமாக அலங்கரிக்கப்பட்ட சிவிகையில் கிடத்தி எடுத்துச் சென்று எரியூட்டுகிறார்கள்.
‘ஊனாரும் உள்பிணியும் ஆனாக கவித்த உடல்
ஊதாரி பட்டு ஒழிய உயிர்போனால் ஊரார் குவித்து வர
ஆவா எனக்குறுகி ஓயா முழக்கமெழ அழுது ஓய
நானாவிதச் சிவிகை மேலே கிடத்தியது’
என்று கூறும் அருணகிரியார், ‘எனவே இந்த இழிபிறவி எனக்கு வேண்டாம். உன் அருள் வேண்டும்’ என்று வேண்டுகிறார்.
‘நாறா தெடுத்தடவி யெரியூடே - நாணாமல் வைத்து விட
நீறாமெ னிப்பிறவி நாடா தெனக்குனருள் புரிவாயே’ என்று கேட்கிறார்.
அனன்ய பக்தி: இறைவனிடம் நமக்கு வேண்டுவது அனன்ய பக்தி. அதாவது இறைவனைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்கிற பக்தி. முருகனே நமக்குக் கிடைத்து விட்டால், பிறகு நமக்கு வேறு செல்வங்கள் வேண்டுமோ.
‘முருகா என உனை ஓதும் தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவார், வியாதி அடைந்து நையார்’
என்கிறது திருமுருகாற்றுப்படை. அந்த அனன்ய பக்திதான் அருணகிரியாரிடம் இருந்தது. முருகனே போதும் எனும் நாதர், தன் மயில் விருத்தத்தில் முருகனின் அருள் இருந்தால் என்னென்ன கிடைக்கும் என்பதைப் பட்டியலிடுகிறார்.
‘ஆயிரம் பிறை தொழுவர், சீர் பெறுவர்
பேர் பெறுவர், அழியா வரம் பெறுவரே’
என்று பூரிக்கிறார்.
ஞானம் அருளும் ஞானவேல்: திருவாடானையில் முருகனையே உயர்த்திப் புகழ்கிறார். காளிங்க நர்த்தனம் செய்த திருமாலும் தேவர்களும் புவனம் முழுவதும் வாழும்படி ஆலகால விஷத்தை உண்டவர் சிவபெருமான். அவர் முன் ஞானத்தை அருளும் கந்தனாக முருகன் காட்சியளிக்கிறான்.
மால்நாகம் துத்திமுடி மீதே நிறுத்தம் இடு
மாயோனும் அட்டொழுகு வாழ்வாய் இருக்கும் ஒரு
வேதாவும், எட்டிசையும்
ஆலாலம் உற்ற அமுது அயில்வோன் முன் ஆசார
பக்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தமுறை
பெருமாளே - என்று உளம் பூரிக்க பூஜிக்கிறார்.
முருகன் உபதேசிக்க, ஈசன் தாழ்ந்து அமர்ந்து கேட்பதாக அருணகிரியாருக்கு இத்தலம் காட்சி அளித்தது. இத்திருப்புகழைப் பாடுவதன் மூலம் குமரன் நமக்கு ஞானத்தை அருள்வான்.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com