

இறைவனின் மீதான தூய்மையான பக்தியைக் கேட்பவர்களிடத்தில் உண்டாக்கும் கலை உபன்யாசம். துஷ்யந்த் ஸ்ரீ தரின் உபன்யாசத்தில் நகையும் இருக்கும் சாராம்சமான பக்தியின் உவகையும் இருக்கும். அண்மையில் திருவல்லிக்கேணி கலாச்சார சபாவின் ஆதரவில் ஆஸ்திக சமாஜத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் ‘மழைக் கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை’ என்னும் தலைப்பில் நிகழ்த்திய உபன்யாசத்திலிருந்து சில துளிகள்:
“பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் முதலாழ்வார்கள் எனப்படுவர். நிகழ்ச்சி நடக்கும் இந்த இடமோ ஆழ்வார்பேட்டை. நம் புராணங்கள் நைமிசாரண்யத்தில்தான் தொடங்கும். நைமிசாரண்யம் புராணங்களுக்கு அரங்கேற்றம் செய்யும் பூமியாக இருந்தது. சத்தியநாராயண பூஜை சரித்திரம் தொடங்குவது நைமிசாரண்யம். இந்த மண்டபத்துக்கு பெயரே நைமிசாரண்யம்.
சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் எத்தனையோ ஆண்டுகாலம் இந்த மண்டபத்தை அலங்கரித்தார். அத்தனை பேரும் அலங்கரித்த சந்நிதி இது. அப்பேர்ப்பட்ட ஆஸ்திக சமாஜத்தில் ‘மழைக் கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை’ என்னும் தலைப்பில் அடியேன் உபன்யாசம் செய்யவிருப்பது பெரும் பாக்கியம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘மாலதி மாதவம்’ என்னும் கிரந்தத்தில், நாயகன் நாயகியைப் பார்த்து, ‘உன்னுடைய தாமரை மலர்ப்பாதத்தை வருடிக்கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கிறது’ என்பதைப் பெருமாளின் பாதத்தைச் சரணடைவதற்கான பொருளில் சனாதனத்தைப் பரப்பும் முயற்சியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
எல்லாரும் கேட்கும் கேள்வி பகவானை எப்படித் தியானிப்பது? தியானம் செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது. அஷ்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை நினைத்து யோகம் செய்வது. தேசிகன் சொல்வது பகவத் தியானம் சோபானம் - பெருமாளின் கேசாதி பாதம் ஓர் ஏணிப்படி.
இவற்றை நினைத்து தியானித்தாலே அஷ்டாங்க யோகத்தின் பலன் கிடைக்கும். பெருமாளின் கூந்தலில் தொடங்கி பாதம் வரை பாதாதிகேசம் வர்ணிப்பதைப் பலரும் செய்திருக்கின்றனர்.
திருப்பாணாழ்வார் - ரங்கநாதனை அமலனாதிபிரான் என்னும் பாடலில் கேசாதிபாதமாக வர்ணிக்கிறார். அடுத்தது வேதாந்த தேசிகர் வர்ணிக்கிறார். 16ஆம் நூற்றாண்டில் நூறாவது தசகத்தில் நாராயண பட்டத்ரி வர்ணித்திருக்கிறார். 17ஆம் நூற்றாண்டில் ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யர் வர்ணித்திருக்கிறார்.
காவிரி எனப்படும் பொன்னி! - காவிரியைப் பொன்னி என்று அழைக்கின்றனர். சூரியனின் கதிர்கள் எந்த நதியின் மீது பட்டால் பொன்னைப்போல் இருக்குமோ, அதைப் பொன்னி என்று அழைக்கிறார்கள். மற்ற நதிகளைவிடக் காவிரியில் தங்கத்தின் சேர்மானம் அதிகம். “என்ன சார்... நீரில் எல்லாம் தங்கம் இருக்குமா?” என்று கேட்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
பிட்ஸ் பிலானியில் படித்துமுடித்தவுடன் 2009இல் எனக்கு இண்டர்ன்ஷிப் ஜாம் நகரில் கிடைத்தது. பிர்லா சால்ட்ஸில் நான் புராஜெக்ட் செய்தேன். ‘அனலைஸிஸ் ஆஃப் ஸீ வாட்டர்’ (Analysis of Sea Water) என்பதுதான் என்னுடைய புராஜெக்டின் தலைப்பு. கடல் நீரில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை ஆய்வுசெய்ததில், .02% அளவு தங்கம் கரைந்துள்ளது என்பது தெரிந்தது. பொன்னிறக் காவிரியின் கரையோரத்தில் இருப்பவர் பெருமாள் என்று தேசிகன் வர்ணிக்கிறார்.
சுவாமி தேசிகன் ரங்கநாதனின் பெயரில் ஸ்தோத்திரப்படுத்தியிருக்கிறார். 12 ஸ்லோகங்களை கொண்ட பாசுரம். தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருக்கக்கூடியவர், அவரைத் தரிசிக்க அவர் அளிக்கும் கண்கள் வேண்டும். அர்ச்சுனனுக்குக் கொடுத்த கண்களைக் கொடு என்று வேண்டுகிறார். இந்தப் பெருமாள்தான் நீ தியானம் செய்வதற்கு உகந்த இறைவன் என்கிறார் சுவாமி தேசிகன்.”