

‘சிவபுராணம்’ என்றதும், சிவனைப் பற்றிய கதைகள்தான் நிறைந்திருக்கும் என்று சிறு வயதில் நினைத்ததுண்டு. இது உருவகப்படுத்தப்பட்ட சிவனின் அதாவது சங்கரனின் புராணமன்று. சிவம் எனப்படும் பரம்பொருளின் பண்புகளைப் பாடும் புராணம்.
அனைவருள்ளும் ஓடும் தேடலின் இலக்கும், அதை நோக்கிய ஆன்மாவின் பயணமுமே திருவாசகத்தின் முதல் திருப்பதிகமான சிவபுராணம். ஊனையும் உள்ளத்தையும் உருக்கும் அளவுக்கு இதை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடி கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து’ என நிறைவடையும் சிவபுராணம், அதன் ஆன்மிக ஆழத்தை சூட்சுமமாகச் சொல்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, கிரியா யோகத்தை உலகெங்கும் பரப்பிய பரமஹம்ச யோகானந்தரின் விளக்கங்கள், தத்துவங்களும்கூட சிவபுராணத்தோடு நன்கு பொருந்துகின்றன.
‘பரம்பொருளில் இருந்து உதிர்ந்து விரிந்து வளர்ந்து வந்ததே இந்தப் பிரபஞ்சம். அந்தப் பரம்பொருள் நிலையை மீண்டும் அடைய கண்மூடி, உடல் - மனம் - ஆன்மாவை ஒருங்கிணைக்கும்போது உடல் உணர்வு, இறையுணர்வு (கூடஸ்த சைதன்யம்) தாண்டி பரம்பொருள் உணர்வை அடையலாம்’ என்பதே பரமஹம்சரின் அடிப்படைக் கொள்கை.
ஒளியும் ஒலியும்: பரம்பொருளின் முக்கிய வெளிப் பாடுகளான பேரொளி, பேரொலி, பேரின்பம், பேரன்பு, பெருஞானம், பேரறிவு, பேரமைதி, பேரருளை உணர்ந்து அதனோடு இந்த ஆன்மாவை இணைப்பதுவே பரமஹம்ச யோகானந்தரின் கொள்கை. பதஞ்சலியின் யோக சூத்திர அடிப்படையில் அதை அடைவது குறித்து அவர் பயிற்றுவித்த உத்திகளில் மிக முக்கியமானது கிரியா யோகம்.
‘சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்’ கழல் அடைவதற்கு அவர் வழங்கும் கர்ம, பக்தி, ஞான, கிரியா யோக உத்திகள் மாணிக்கவாசகரில் இருந்து வேறுபட்டவையல்ல. ‘சிரம் குவிவாரை ஓங்குவிக்கும் சீரோன்’ என மணிவாசகர் இறைவனைப் போற்றும்போது, நிச்சயம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் தாண்டி இறைவனிடம் சரணடைவாரை ஏற்றுவிக்கும் இறைவன் என்றும் பொருள் சொல்லலாம்.
அந்நிலையை அடை வதற்கு, யோக முறைகளால் முகுளத்தில் இருந்து முளைத்த மூவுடல், அதாவது இந்த ஒன்பது வாயில் குடில், அதை இயக்கும் சூட்சும உடல், இவை இரண்டையும் இயக்கும் காரண உடல் ஆகியவற்றைச் சிரத்தில் குவிக்க முயல்வாரை ஓங்குவிக்கும் இறைவன் எனும் ஆழமான பொருளையும் உணரலாம்.
சிவபுராணத்தில் பல இடங்களில் பரம்பொருளின் ஒளி உருவப் பண்பை மாணிக்கவாசகர் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, நெற்றிக்கண்ணில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது தெரியும் ஒளிச்சுடரை மூன்று நிறங்கள் கொண்டதாக விவரிக்கிறார் பரமஹம்சர். முதலில் ஓங்காரத்தின் வெளிப்பாடான பொன்னொளி (ஓம்), அதற்குள் இறை உணர்வு நிலையான நீல வண்ணம் (தத்), அதற்குள்ளே மலரும் விண்மீன் வடிவில் தோன்றும் பரம்பொருள் (சத்) என்று விவரிக்கிறார். மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரென்னும் மணிவாசகத்தின் விளக்கமாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது.
உள்ளே விரியும் ஆகாயம்: ‘ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே’ என்று மாணிக்கவாசகர் கூறும்போது, அப்பேரொளி வேறெங்கும் இல்லை; நமது உள்ளத்துள்ளேயே அகக் கண்ணாய் விளங்குகிறது என்பது உண்மையாகிறது. இறைவன் என்பவன் வானத்தைக் கிழித்துக்கொண்டு இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்புரிவான் என்று நம்பும் வேளையில், அவ்வானம் வெளியில் புறக்கண்ணில் காணும் ஆகாயமன்று; நம் உள்ளத்து விளங்கும் அகக்கண்ணுள் தோன்றும் சூட்சும ஆகாயம்; அதிலும் இறைவனுடன் ஏற்படும் முதல் தொடர்பு ஒளி வடிவமாகவோ அல்லது அனைவரது உள்ளத்தும் ஓங்காரமாய் நிற்கும் ஒலி வடிவமாகவோ விளங்கும் என்பதையே ‘ஓராதார் உள்ளத்து ஒளிரும் ஒளியானே’ என்றும் ‘உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யே’ என்றும் அழைக்கிறார்.
தியான உத்திகளில் நம்முள் இருக்கும் ஓங்காரத்தைத் தேடுவதை முக்கியமான உத்தியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எடுத்துரைத்திருப்பது, ஆயிரம் ஆண்டுகள் முன்னர் உள்ளத்துள் ஒலிக்கும் ஓங்காரத்தைத் தேடும் மாணிக்கவாசகரோடு பொருந்துகிறது.
இறையை நோக்கிய பயணம்: ஆக, இறைவன் என்பவன் நம்மில் இருந்து வேறுபட்டவன் அல்ல; ஏகன் அநேகனாய் நம்முள்ளேயே உறைபவன் என்பதுதான் நமது முக்கியமான தேடல் பொருளாகிறது. நாமே கடவுள் என்றால் நமக்குள் இருமை, அதாவது சுகம் - சோகம், இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு, அன்பு - கோபம் ஆகியவை ஏன் உள்ளன என்பதே அனைத்துத் தேடலிலும் உதயமாகும் முதல் கேள்வி.
அதையே மணிவாசகர் ‘ஓர் உயிரின் பயணமாகச் செல்லா நின்ற இத்தாவரச் சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’ என்று பயணக் குறிப்பும் எழுதியுள்ளார். அதையே பரமஹம்சர், பிரபஞ்ச கூர்மத்தை, இயக்க ஆற்றல் இல்லாத அன்னமய உணர்வாகவும், வாயு ஆற்றல் முளைத்த தாவரங்களைப் பிராணமய கோசமாகவும், மனதின் ஆற்றல் பெருகிய விலங்குகளை மனோமய கோசநிலையாகவும், ஆய்ந்து அறியும் உணர்வு வளர ஞானமய கோசமாகவும், அதுவே கூர்ந்து இறைவனை அடையத் துடிக்கும் நிலையான ஆனந்தமய கோசமாகவும் ஆராய்கிறார். இங்கேயும் மாணிக்கவாசகரின் ‘புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல் விருகமாகி’ எனக் கூறும் உயிரின் பயணக்குறிப்பு ஆழமாய் விளங்கும். ஆக, உயிர் என்பது இறைவனில் இருந்து பிறந்து, மீண்டும் இறைவனை நோக்கியே பயணிக்கிறது.
மாயையை அகற்றும் பயிற்சி: கள்ளப் புலக்குரம்பை (வஞ்சம் செய்யும் புலன்களால் ஆகிய குடில்) கட்டவிழ்க்க வல்லான் என்று இறைவனை அழைக்கும்போது, நமது மூச்சுதான் இந்த உயிரை உடம்போடு கட்டி வைத்துள்ளது என்பதையும், அந்தக் கட்டை அவிழ்க்க பிராணாயாம உத்திகளின் அவசியத்தையும் அதையே இறைவன் யோகிகள் மூலம் மனிதருக்கு உணர்த்தியுள்ளான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பிராணாயாம உத்திகளில் பரமஹம்ச யோகானந்தர் கூறும் கிரியா யோகப் பிராணாயாமம் அறிவியல் சார்ந்த தலைசிறந்த உத்தியாகும்.
‘‘நாம் யார்? நாம் இறைவனில் இருந்து உதிர்ந்த ஆத்மா. இந்த உடல் வெறும் இறைவனது கூத்தை நிறைவேற்ற வந்த கருவி’’ என்பார் பரமஹம்ச யோகானந்தர். நாம் நம்மை இக்கருவியோடு அடையாளப் படுத்திக்கொண்டால் இக்கருவியின் இயலாமைகளே நமது முழு சக்தியாகும்; அதே நமது ஆத்மாவோடு நம்மை அடையாளப்படுத்திக்கொண்டால் இறைவனில் இருந்து உதிர்ந்த உயிரின் ஆற்றல் புலப்படும். ஆனால், மாயை நம்மை ஆன்மாவோடு அடையாளப்படுத்த விடாது.
கிரியா யோகப் பயிற்சி மூலம் மாயையைச் சுட்டெரிக்க முடியும். அது கடினம் என்று கருதுவோர், சிவபுராணம் கூறும் அடிப்படை உண்மைகளை உணர்ந்து பாடினாலும் நம் உள்ளத்துள் எழும் அதிர்வுகளால் அந்த பிராணாயாமம் இயற்கையாகவே நம்முள் நடைபெற, சிவனை அடையலாம். இரண்டையும் கலந்தால் பயணம் துரிதப்படும்!
கார்த்திக். எஸ் | கட்டுரையாளர், காவல்துறை கண்காணிப்பாளர்; mailtokarthiks@gmail.com