

ஜெகதல மிடிகெட விளைவன வயல் அணி
செங்கோடு அமர்ந்த பெருமானே
- திருப்புகழ்
நம் அனைவரின் வாழ்க்கையும் நீர்க் குமிழி போன்றதுதான். ஓட்டைகள் நிறைந்த பொய்க் குடிசைக்குள்தான் வாழ்கிறோம். அதில்தான் எவ்வளவு ஆசைகள், போட்டிகள், பொறாமைகள், வஞ்சனைகள். ஏராளமான பாவங்களை வேறு செய்கிறோம். அவற்றிலிருந்து நம்மைக் காக்கும் சக்தி படைத்தவன் செங்கோட்டு வேலவன்.
காலனை விரட்டும் கந்தன்
காலன் இடத்து அணுகாதே, காசினியில் பிறவாதே
சீல அகத்திய ஞான தேன் அமுதைத் தருவாயே
-என்று கேட்கும் அருணகிரியார் அவ னையே சரண் என்று அடைந்தோர்க்குத் தனது திருவருளை அள்ளித் தருவான் என்கிறார்.
‘அடைந்தோர்க்கு உணர்ந்தோர்க்கு அளிந்தோர்க்கு
அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணர்க்கு ஒன்று
இலதாகி அலைந்தோர்க்கு உலைந்தோர்க்கு இளைந்தோர்க்கு
அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக் கும் பெருமானே’ - என்று பாடுகிறார்.
செங்கோட்டின் சிறப்பு: தேவாரப் பாடல் பெற்ற தலமாக இருந்தாலும் வேலவனாலேயே சிறப்புப் பெற்றது திருச்செங்கோடு. ஒரு பக்கம் ஆணாகவும் ஒரு பக்கம் பெண்ணாகவும் காட்சி அளிக்கிறது மலை. எனவே, இறைவன் அர்த்தநாரீஸ்வரர் எனப்படுகிறார்.
முருகனை ஒவ்வொரு தலமாகத் தேடித் தரிசித்து வந்த அருணகிரியார் இங்கே 21 பாடல்கள் பாடியுள்ளார். அவர் தரிசித்த 87ஆவது தலம் இது. இங்கே வேலவன் வலக்கையில் வேலும், இடக்கையில் சேவற் கொடியைப் பிடித்தபடியும் நிற்பது சிறப்பு.
‘கொடிமாடச் செங்குன்றம்’ எனப்படும் செங்கோடு, அருணகிரியாருக்குத் தொலைவிலிருந்து பார்க்கும்போது இரு பாம்புகள் எதிரெதிர்த் திசைகளிலிருந்து வந்து இணைந்திருப்பதுபோல் காட்சி அளித்தது. எனவேதான் பல இடங்களில் அரவகிரி, சர்ப்பகிரி, நாககிரி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.
‘சக்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பனும் மெச்சிட
மறைநூலின் தத்துவம் தற்பரம் முற்றும் உணர்த்திய
சர்ப்ப சிரிச்சுரர் பெருமாளே..
சற்பகிரி நாதா, முத்தமிழ் விநோத, சக்ர கதைபாணி மருகோனே’ என்றும் குறிப்பிடுகிறார்.
சத்தியவாக்குப் படிகள்: செங்கோட்டு மலைப் படிகளில் கடைசி 60 படிகள் சத்தியவாக்குப் படிகள் என்று அழைக்கப்படுகின்றன. அங்கே குடி கொண்டிருக்கும் கந்தனைச் சாட்சியாக வைத்து, இந்தப் படிகளில் நின்று வழக்கு களைத் தீர்த்துக்கொள்வார்கள் அப்பகுதி மக்கள்.
இதை அருணகிரியார், ‘தர்க்க சாத்திர, தக்க மார்க்க சத்யவாக்யப் பெருமாளே’ என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். திருப்புகழ் அனைத்திலுமே தன்னுடைய குற்றங்களை நீக்கி ஆட்கொண்டருள வேண்டும் என்று வேண்டுபவர் வேலனைக் காண நாலாயிரம் கண் போதவில்லை என்று மருகுகிறார்.
‘மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை
வானவர்க்கு வயற்பொழில் செங்கோடனைச்
சென்று கண்டு தொழ நாலாயிரங்கண் படைத்திலனே" என்று பாடுபவர், ‘பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே’ என்று கந்தர் அலங்காரத்தில் போற்றுகிறார்.
அருள் வேண்டும் அருணகிரியார்: ‘வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடிவேலா’ என்று அவன் அருளை வேண்டுகிறார். ‘அன்பாக வந்து உன்தாள் பணிந்து ஐம்பூத மொன்ற நினை யாமல்’ இருப்பவர்களின் குறைகளைத் தீர்ப்பவன் செங்கோட்டுவேலவன்.
அறிவு கலங்கி, மயங்கும் வினையுடைய அடியேன் உன் அடியார்களுடன் ஒன்றிடும் பேற்றை அளிக்க வேண்டும் என்கிறார் அருணகிரியார்.
அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் உரையையும்
அறிவையும், உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச
மலர் மீதே உரவொடு புனை தர நினைதரும் அடியரொடு
ஒன்றாக என்று பெறுவேனோ?
- என்று அருணகிரியார் ஏக்கத்துடன் முருகனிடம் கேட்கிறார்.
சித்தம் கலங்கி, பொது மகளிருடன் மயங்கித் திரிந்த தன் செய்கைகள் கண்டு வெறுத்திடாமல், ‘முருகா உன் பாதமே தஞ்சம் தந்து என்னைக் காத்தருள்வாய்’ என்றே ஒவ்வொரு திருப்புகழிலும் முருகனின் அருள் வேண்டியே இறைஞ்சுகிறார்.
கந்தன் கனிவே உருவானவன். தன் பக்தர்களின் குறை அறிந்து, ஓடி வந்து காத்திடுவான். அன்பே உருவானவன். உலகின் ஜோதியானவன். அழைத்தவுடன் அவன் சேவலும், மயிலும், வேலும் துணை யாக வந்து நிற்கும்.
இருளைப் போக்கும் தீபமாக இருப்ப வன். ‘தீப மங்கள ஜோதி நமோ நம’ என்றே பணிகிறார் அருணகிரியார். அவனைப் பணிந்து வணங்கினாலே சகல சௌபாக்கியங்களையும் அருள்வான் செங்கோட்டு வேலவன்.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com