

சீதை காணாமல் போனபின், அவளைத் தேடும் முயற்சியில் ராமர், லட்சுமணர் ஈடுபட்டனர். அப்போது சீதை அணிந்திருந்த நகைகள் அவர்களுக்குக் கிடைத்ததுதான், ராமாயணத்தில் முக்கியத் திருப்புமுனை. அந்த நகைகளை வைத்துதான் ராவணன், சீதையை இலங்கைக்குத் தூக்கிச்சென்றது தெரியவந்தது.
ராமர், லட்சுமணருடன் காட்டிற்கு மரவுரி தரித்துச் சென்ற சீதையிடம் நகைகள் எப்படி வந்தன? இந்தக் கேள்விக்கான விடையாக ராமாயணத்தில் அறிமுகமாகுபவர்தான் அனுசுயா.
அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா. இவர்களின் ஆசிரமம் காமதம் என்கிற வனத்தில் இருந்தது. ராமனுடைய வனவாசப் பயணத்தில் இந்த இடமும் உண்டு.
ஒரு நாள் அத்திரி முனிவரின் ஆசிரமத்துக்கு, காட்டு வாழ்க்கை பயணத்தின் ஊடாக ராமர், லட்சுமணர், சீதை வந்தனர். சீதையின் அழகையும் பொறுமையையும் கண்டு மகிழ்ந்த அனுசுயா, தன்னிடமிருந்த நகைகளை சீதைக்கு அணிவித்து அழுகு பார்த்தார். அதோடு நிற்காமல், அணிந்த நகைகள் சீதையிடமே இருக்கட்டும் என்று வழியனுப்பி வைத்தார்.
ராவணன், சீதையைப் புஷ்பக விமானத்தில் கவர்ந்து சென்றபோது, தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றி அவற்றில் சிலவற்றை வழியிலும் மேலும் சிலவற்றை சிறு மூட்டையாகக் கட்டியும் கீழே வீசினாள். ரிஷ்யமுகி மலையில் சீதையின் நகைகளைச் சிறு மூட்டையாக கண்ட பின்பே ராமனின் மனதில் இனி சீதையைக் கண்டுபிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் சிமோலி ஜில்லாவில் கோபேஸ்வரிலிருந்து 12 கிலோ மீட்டரில் அடர்ந்த காட்டுக்குள் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோபேஸ்வரிலிருந்து 7 கிலோமீட்டர் பயணித்தால் மண்டல் வரும். அங்கிருந்து 5 கி.மீ. மலை ஏறினால் இந்த அனுசுயா கோயிலை அடையலாம்.
இங்குள்ள அனுசுயாவை சதி மாதா அனுசுயா என அழைக்கின்றனர். இந்தக் கோயிலின் தல வரலாறு முப்பெரும் தெய்வங்கள், முப்பெரும் தேவியர் பற்றியது.
அனுசுயாவின் பதிவிரதத்தன்மை, முப்பெரும் தேவியரை வியப்பில் ஆழ்த்தியது. தங்கள் கணவர்கள் மூலம் சோதிக்க விரும்பினர். அதனை ஏற்று மு்ப்பெரும் தெய்வங்களும் அத்திரி முனிவர் ஆசிரமம் வந்தனர். அனுசுயாவைச் சோதிக்கிறோம் எனக் குறும்பில் ஈடுபட, அதனைக் கண்டுபிடித்த அனுசுயா அவர்களைக் குழந்தைகளாக ஆக்கி விடுகிறார்.
சென்ற கணவர்கள் திரும்பாத சூழலில், அவர்களை முப்பெரும் தேவியர் தேடிவந்தனர். கணவர்கள் மூவரும் குழந்தைகளாக இருப்பதை அறிந்து அனுசுயாவின் பதிவிரதா தன்மையை உணர்ந்து தங்கள் கணவர்களை விடுவிக்கும்படி வேண்டினர். அனுசுயாவும் வேண்டுகோளை ஏற்று அவர்களைப் பழையபடி மாற்றினார். அதற்கு நன்றியாக முப்பெரும் தேவியர் மூன்று குழந்தைகளையும் ஒன்றாக வைத்து இணைத்து, ஒரே குழந்தையாக மாற்றியதுடன், மூன்று தெய்வங்களின் முகத்தையும் அந்த ஒரு உருவத்திற்கு அளித்தனர். அவரே தத்தாத்ரேயர்!
இந்த இடத்தில் குழந்தைகளின் ஜனனம் நடந்ததால், தங்களுக்கும் குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோயிலை அடை வதற்கு கடைசி 5 கி.மீ. மலை ஏற வேண்டும். இமய மலையின் மடியில் உள்ள கோயில்களில் உள்ள கட்டிடக் கலையை இங்கும் காணலாம்.
கர்ப்பகிரகத்துக்கு மேல் கோபுரம். முன்பக்கமாக முன் மண்டபம், உள் மண்டபம், கர்ப்பகிரகம் அவ்வளவு தான். கோயிலினுள் நுழைந்தால் நேரே கர்ப்பகிரகம்தான். உள்ளே கம்பீரமான அனுசுயாவின் முகத்தை வெள்ளிக்கவச அலங்காரத்தில் தரிசிக்கலாம். அதன் பின்னால் பெரிய அளவில் கறுப்புக் கல்லில் அனுசுயா சிலை உள்ளது. அனுசுயா காலடியில் கப்னஷ், மாதா பார்வதி, சிவலிங்கம் ஆகியவற்றைத் தரிசிக்கலாம். தத்தாத்ரேயருக்கும் தனி சிலை உள்ளது.
டிசம்பர் மாதம் நடக்கும் தத்தாத்ரேய ஜெயந்தி சமயத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு திரள்கிறார்கள். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை தரிசிக்க சிறந்த நேரம். மழைக்காலம் குளிர்காலத்தைத் தவிர்க்கவும். அனுசுயா கோயிலிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அத்திரி முனிவர் ஆசிரமம், ஒரு பெரிய பாறை பகுதியில் குகையினுள் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 2,175 மீட்டர் உயரத்தில் சதி மாதா அனுசுயா கோயில் அமைந்துள்ளது. மலை, மரங்கள், ரம்மியமான சூழலைத் தருகின்றன.
இக்கோயில் ரிஷிகேஷிலிருந்து 234 கி.மீ., டேராடூனிலி ருந்து 255 கி.மீ. தொலைவில் உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
- ராஜி ராதா | radha_krishnan36@yahoo.com