இறை உருமாற்றத்துடன் ஒரு பஞ்சப் பிரகார விழா!

ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி
ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி
Updated on
2 min read

பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் விசேஷ மகிமை கொண்டது இத்தலம்.

நீரைக் கொண்டு அம்பிகை இக்கோயிலின் மூர்த்தியை அமைத்த சிறப்பைப் பெற்றது இத்தலம். சக்திக்குரிய தலங்களில் ஒன்றாகவும், யானையும் சிலந்தியும் போட்டியிட்டுப் பூசித்த கோயிலாகவும் ஆனைக்கா விளங்குகிறது. ‘செழுநீர்த்திரள்’ என்று அப்பர் சுவாமிகளால் பாடப்பெற்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு.

இக்கோயிலின் முக்கியத் திருவிழாவான மண்டலப் பிரம்மோற் சவம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தொடங்கிப் பங்குனி வரை 40 நாள்கள் நடக்கிறது. சிதம்பரத்திற்குப் பின் எட்டுத்திக்குக் கொடியேற்றத்துடன் தொடங்கி நடக்கும் இத்திருவிழா, முதல் நாள் மண்ணெடுத்தல், விநாயகர், முருகனுக்கு 5 நாள், நால்வருக்கு 3 நாள், கல்யாணசுந்தரருக்கு 3 நாள், சந்திரசேகரருக்கு 6 நாள், சோமாஸ்கந்தருக்கு 10 நாள், பல்லக்குச் சொக்கருக்கு 3 நாள், மவுனவிழா 3 நாள், சண்டிகேசுவரருக்கு 3 நாள், பஞ்சப்பிராகாரம் ஒரு நாள், விடையாற்றி ஒரு நாள், மண்டலாபிஷேகம் ஒரு நாள் என 40 நாள்கள் நடைபெறும்.

அம்மையப்பன் சொரூபம்: இதில் குறிப்பாகத் தேரோட்டத்திற்குப் பின், பங்குனி சித்திரை நட்சத்திரத்தில் புராண முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சப்பிராகார விழா நடக்கிறது. இவ்விழாவின் போதுதான் கோயிலில் உள்ள ஐந்து பிராகாரங்களையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வலம்வருவதால் ‘பஞ்சப்பிரகாரம்’ என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது.

அதோடு, இத்திருவிழாவில்தான் எங்கும் இல்லாத திருநிகழ்வாக சிவபெருமான் பெண் கோலம் பூண்டு அம்பிகையாகவும் அம்பாள் அகிலாண்டேஸ்வரி ஆண் வேடம் கொண்டு சிவபெருமானாகவும் ஐந்து வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். இறைவனும் இறைவியும் உருமாறி வலம்வரும் இப்பிரசித்தி பெற்ற விழாவிற்கு சுவாரசியமான புராண வரலாற்றுப் பின்னணி உண்டு.

கர்வமும் பரிகாரமும்: மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மதேவன் தான் செய்துவரும் படைப்புத் தொழிலால் மிகவும் கர்வம் கொண்டார். அழகில் சிறந்த ஒரு பெண்ணைப் படைத்தார். அப்பெண்னைக் கண்ட பிரம்மன் வினை வசத்தால் தீய எண்ணம் கொண்டார்.

இதனால், அவரது படைப்புத் தொழிலின் சக்தி குறைந்ததோடு அவரால் படைக்கப்பட்டோர் நன்னெறியில் இருந்து விலகியதால் அகால மரணம், துர்மரணம் அடைந்தனர். இதனால் மனம் வருந்தித் தன் தவறை உணர்ந்த பிரம்மன் தான் செய்த குற்றத்துக்குப் பரிகாரம் தேட எண்ணிப் பல தலங்களைத் தரிசித்தார்.

ஞானத் தலமாகிய திருவானைக்காவை அடைந்து 4ஆம் பிராகாரத்தின் தென்பகுதியில் குளத்தை வெட்டிக் கடுந்தவம் செய்யத் தொடங்கினார். இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான், பிரம்மாவுக்குச் சாப விமோசனம் தருவதற்குத் தேவியுடன் புறப்பட்டார். அப்போது பிரம்மனின் மனதைச் சோதிக்க எண்ணிய சிவதம்பதியர், சிவன் இறைவி தேவியாகவும், தேவி இறைவன் சிவனாகவும் உருமாறி பிரம்மாவுக்குக் காட்சி தந்தனர்.

பெருமானே பெண்ணுருவம் கொண்டு வந்து நிற்பதை அறிந்த பிரம்மன், வேரற்ற மரம்போல் சிவபெருமானின் பாதங்களில் பணிந்து வீழ்ந்து வணங்கி, “கருணைக்கடலே, அரவாபரணா, அடியார்களை ஆண்டருளும் அண்ணலே! அடியேன் அறியாமையால் செய்த குற்றத்தை மன்னித்து மீண்டும் படைப்புத் தொழிலை நடத்தத் திருவருள் புரிய வேண்டும்” என்று பிரார்த்தித்தார். பிரம்மனின் பக்குவ நிலையைக் கண்ட பெருமானும் அவ்வாறே அருள் செய்து தேவியுடன் மறைந்தார்.

பிரம்மன் நடத்திய விழா: இதைத் தொடர்ந்து, பிரம்மன் தன்னால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கிப் பஞ்சப் பிரகாரங்களாகிய 5 வீதிகளிலும் வலம்வந்து பெருமானைப் பூசித்தான். ஜம்புநாதராகிய பெருமானுக்கு 40 நாள்கள் நடைபெறும் மண்டல பிரம்மோற்சவத்தைச் சிறப்பாக பிரம்மா நடத்தினார்.

37ஆம் நாளில் பெருமான் தனக்குக் காட்சி தந்த விதமாகவே இறைவன் பெண்ணுரு கொண்டும், இறைவி ஆண் உரு கொண்டும் எழுந்தருளச் செய்து பஞ்சப் பிரகாரப் பெருவிழாவை நடத்திவைத்தார். இந்தப் புராணச் சம்பவத்தைச் சித்தரிக்கும் வகையிலேயே, ஆண்டுதோறும் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பஞ்சப் பிரகாரப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

திருமுறை ஓதலுடன் பிரகார உலா: இந்த ஆண்டு நடைபெறும் மண்டலப் பிரம்மோற்சவத்தில் பஞ்சப் பிரகாரப் பெருவிழா இன்று (06.04.2023) வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. பஞ்சப் பிரகார விழா புறப்பாட்டின்போது உற்சவ மூர்த்திகள் தங்களது பரிவாரங்களுடன் நான்கு வேதங்கள், திருமுறைகள் மற்றும் பஞ்சாட்சர ஜபம் ஆகியவற்றை மட்டும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு நான்கு பிரகாரங்களில் வலம்வருவார்கள்.

தெற்கு நான்காம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பிரம்மனுக்குச் சாபவிமோசனம் அளித்தபின் வாணவேடிக்கைகள் முழங்க, மேளதாளத்துடன் நாகஸ்வர இன்னிசை உடன் வர பஞ்சமூர்த்திகள் தங்களின் மீதி பிரகார உலாவைத் தொடருவார்கள்.

மேலும், விபூதியைக் கூலியாகக் கொடுத்து சித்தரால் கட்டுவித்ததாகக் கூறப்படும் திருநீற்றான் மதிலை இக்கோயில் மூர்த்திகள் ஆண்டுக்கு ஒரு முறை இந்நாளில் மட்டுமே வலம்வருவதால் இவ்விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவ்விழாவில் கலந்துகொண்டு இறைவன், இறைவியை வழிபட்டால் பாவங்கள், சாபங்கள் ஏதுமிருந்தால் அவை முற்றிலுமாக விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

- நிகாஷ் | srinksmedia@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in