

சந்ததமு மடியார்கள் சிந்தியது குடியான
தண் சிறுவை தனில் மேவு பெருமாளே - திருப்புகழ்
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் சொந்த வீடு என்பது கனவு. ஓர் அரையடி நிலமேனும் நமக்குச் சொந்தமாக இருக்கவேண்டும் என்பது சிலருக்குக் கனவாகவே போய்விடுகிறது. ஆனால், நியாயமான கனவுகளை நிறைவேற்றுபவன் முருகன் அல்லவா? தன் பக்தர்களின் கனவை நிறைவேற்றவே சிறுவாபுரியில் பாலசுப்ரமணியனாகக் காட்சி அளிக்கிறார் முருகன்.
ஒரு பைசா கையில் இல்லை என்றாலும் கனவு மட்டும் அதிகமாக இருக்கும். நியாய மான, நேர்மையான வழியில் அக்கனவை நிறைவேற்றுபவர் சிறுவாபுரி முருகன்.
மாமனை மகிழ்விக்கும் மருமகன்
அன்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர் மன மகிழ்மீற
அருளாலே – அந்தரி யொடனாடு சங்கரனும் மகிழ்கூர
ஐங்கரனும் முமையாலும் மகிழ்வாக...
‘தேவேந்திரனை மீண்டும் தேவலோகத் தில் குடிபுகச் செய்து, அசுரர்களை அழித்து தேவர்கள் மனம் மகிழச் செய்தவன் சிவகுமாரன். ஈசன் களிப்படைய கணபதியும் உமையாளும் முனிவர்களும் பூமியில் உள்ளோரும் மகிழும்படியான செயல்புரிந்தவன்.
மருமகனின் செயல் கண்டு திருமாலும் லட்சுமியும் மகிழ்கிறார்கள். அனைவருக்கும் களிப்பைக் கொடுத்த நீ மயில் மீது ஏறி என் முன் ஆடி வர வேண்டும்’ என்கிறார் அருணகிரியார்.
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்தி நிறை
யறிவாள வுயர் தோளா என்று புகழ்கிறார்.
முருகனின் வீரப்புகழ்
முருகன் அறிவு நிறைந்த மெய்ஞ்ஞானி. பொங்கும் கடலில் கிரௌஞ்ச மலையைத் தகர்த்து பொன்னொளி பரப்பிய வேலாயுதன். செம்பொன் போன்ற அழகு படைத்தவன். தமிழ்க் கடவுள்.
‘தண்டமிழின் மிகுநேய முருகேசா’ என்றே அழைக்கிறார் அருணகிரிநாதர். எப்போதும் அவன் அடியவர்களின் மனத்தில் இருப்பவன் என்று,
‘சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தன்சிறுவை
தனில்மேவு பெருமாளே’
என உருகும் அருணகிரிநாதர், தன் திருப்புகழில் கந்தனின் வீரச் செயல்களைப் பற்றியே அதிகம் குறிப்பிடுகிறார்.
குசேலபுரியின் தாத்பர்யம்
சூரனை வென்று திரும்பும் குமரன் தன் மனைவி வள்ளியுடன் இங்கே தங்கி இளைப்பாறியதாகச் சொல்லப் படுகிறது.
இதன் புராணப் பெயர் குசேலபுரி. தேவர்களுக்கு முருகன் அமுது அளித்து அவர்களுக்கு வீடுபேறு அளித்த இடம் சிறுவாபுரி. ‘அண்டர் பதி’ பாடல் சொந்த வீடு கொடுக்கும் என்றால், அந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான ஆரோக் கியத்தைச் ‘சீதள வாரிஜ’ என்னும் பாடல் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
‘சீதள வாரிஜ பாதாநமோநமோ, நாரதகீத விநோதா நமோநமோ
செவல மாமயில் ப்ரீதா நமோநமோ, மறைதேடுஞ் சேகர
மானப் பிரதாபா நமோநமோ’ - இப்பாடல் முருகனின் போற்றிகளைக் கூறி வழிபடும் பாடலாக அமைந்துள்ளது.
முருகனே அனைவரிலும் உயர்வான வன், துணிவானவன், அன்பானவன் என்பது அருணகிரிநாதரின் அழுத்தமான எண்ணமாகப் பாடல்கள் எங்கும் விரிகிறது. கந்தனைத் தவிர வேறு கடவுள் இல்லை எனும் அவர்,
‘மாதவர் தேவர்களோடே முராரியு மாமலர் மீதுறை வேதாவுமே
புகழ் மாநில மேழினு மேலான நாயக வடிவேலா’ என்று கொண்டாடுகிறார்.
ஆரோக்கியத்தின் அதிபதி
தேவர்களும் மூவரும் போற்றும் முருகனே ஏழு உலகிலும் மேலானவன். தேவலோகத்தைக் காட்டிலும் குபேரனின் பட்டினத்தை விடவும் உயர்வானது சிறுவாபுரி என்கிறார் அவர்.
‘வானவரூரினும் வீறாகி வீரள காபுரி வாழ்வினு மேலாகவே
திருவாழ் சிறுவாபுரி வாழ்வேசுராதிபர் பெருமாளே’
என்று முருகனை அழைக்கிறார். கந்தன் வெற்றி தரும் இறைவன். பார்வதியின் செல்லக் குழந்தை. ஈசனுக்குப் பிரியமான கந்தன். ஞானத்தின் பொருளை உபதேசிக்கும் பண்டிதன்.
‘பார்வதியாள் தரு பாலா நமோநமோ, நாவல ஞானமனோலா
நமோநமோ- பாலகுமாரசாமீ நமோநமோ அருள் தாராய்’ என்று மனமுருகி வேண்டுகிறார்.
மனிதர்கள் தங்கள் நோய் தீரவும், மனக் கவலைகள் நீங்கி நலமோடு வாழவும் இந்தப் பாடலை தினசரி பாடலாம்.
‘அண்டர்பதி’ பாடலை மனமுருகிப் பாடி வேண்டினால் முருகன் சொந்த வீடு தருவான். ‘சீதள வாரிஜ’ என்கிற திருப்புகழ் அதில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான மகிழ்ச்சியான சூழலையும் அளிக்கும்.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com