

சுவாமி வேதாந்த தேசிகனின் ஏழாவது நூற்றாண்டு விழாவில் தன்னை இணைத்துக்கொண்டு (1969), அவரது படைப்புகளை உலகுக்கு வெளிப்படுத்த ‘சேவா’ பத்திரிகையை நடத்தியவர் ஸ்ரீஅரசாணிபாலை நல்லூர் ஸ்ரீ நிவாச ராகவாச்சார்ய மகா தேசிகன்.
சுவாமி தேசிகரின் ஆச்சாரியரும் மாதுலருமான கிடாம்பி அப்புள்ளார் வம்சத்தில் 1923ஆம் ஆண்டு பங்குனி சித்திரையில் நல்லூர் அக்ரஹாரத்தில் ஸ்வாமி தேசிகரின் அவதாரமாகத் தோன்றியவர் ஸ்ரீநிவாச ராகவாச்சார்யர் ஸ்வாமி. சிறு வயதிலிருந்து ஆச்சாரியர்களின் ஸ்ரீஸூக்திகளை நன்கு பயின்று ஆசாரம் மற்றும் ஞான வைராக்ய பூஷணமாகத் திகழ்ந்தவர்.
உத்தமூர் வீரராகவாச்சாரியார், டி.டி. தாத்தாசாரியார், நாவல்பாக்கம் நரசிம்ஹ தாத்தாச்சாரியார் முதலியவர்களிடம் சம்ஸ்கிருதம் மற்றும் வேதம் பயின்றார். திருப்பதி வெங்கடேஸ்வரா கல்லூரியில் கல்வி பயின்ற இவர், தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ந்ததால், எழுத்துப் பணியிலும் ஆன்மிகப் பணியிலும் சிறந்து விளங்கினார்.
ஸ்ரீதேசிகனின் புகழையும் அவர் அருளிச் செய்த கிரந்தங்களையும் மக்களிடையே நிரந்தரமாகப் பரப்புவதற்கு அடிகோலியாக வில்லிவாக்கத்தில், உருப்பட்டூர் ராஜகோபால அய்யங்கார் என்பவரால் இடம் அளிக்கப்பட்டு ஸ்ரீவைஷ்ணவ பெரியோரின் பேருதவியால் ஒரு மணிமண்டபத்தை நிறுவினார். அதில் லக்ஷ்மி ஹயக்ரீவர், அனந்த லட்சுமி தாயார், ஆண்டாள், சுவாமி நம்மாழ்வார், பகவத் ராமானுஜர், வேதாந்த தேசிகன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுத் தினமும் ஆராதனை நடைபெற்றுவருகிறது.
இந்த மண்டபத்தில் சேவா சுவாமி ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம், ஸ்ரீ வேங்கடாசல மஹாத்மியம் முதலிய காலக்ஷேபங்களை நிகழ்த்தியுள்ளார். ஸ்ரீ தேசிக தர்சன டைரி, ஸ்ரீ வேதாந்த தேசிக ஆராய்ச்சி மையம், ஸ்ரீ வேங்கடநாத நூலகம், சிரவண உபன்யாசங்கள், ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்கு வஸ்திர உபயம் போன்ற திட்டங்களால் தேசிகரின் ஸ்தோத்திரங்கள் பல மொழிகளில் வியாக்யானம் எழுதப்பட்டுப் பலருக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில் சேவா சுவாமியின் நூற்றாண்டு விழா, முப்பெரும் விழாவாகத் தற்போது நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திர தினத்தில் உற்சவங்கள் நடந்துவருகின்றன. முதல் பெருவிழாவாக 18-12-2022 முதல் 27-03-2023 வரை 100 நாள் உற்சவம் நடைபெற்றது. இதில் சுவாமி தேசிகன் அருளிய நூல்களோடு சேவா சுவாமி அருளிய நூல்களும் சேர்த்து 60-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. தினமும் வேத, பிரபந்த ஸ்தோத்திர பாராயணங்கள், பாகவத ததீயாரதனங்கள் நடைபெற்றன.
இரண்டாவது பெருவிழா 10 நாள் உற்சவமாக 28-03-2023 முதல் 06-04-2023 வரை நடைபெறுகிறது. இதில் வேத, பிரபந்த, ஸ்தோத்திர பாராயணங்களுடன், வித்வத் சதஸ், சம்ப்ரதாய சேவகர்கள் சதஸ், பிருஹஸ்பதி வித்வத் சதஸ், அருளிச் செயல், ஆகம வித்வத் சதஸ், ஸ்த்ரீ வித்வத் சதஸ், சங்கீத வித்வத் சதஸ், வித்வான்களைக் கவுரவித்தல் ஆகியவை நடைபெறும். நிறைவு நாளான 07-04-2023 அன்று பாராயணங்களுடன் திவ்ய தேச மரியாதைகள், ஆச்சார்ய சம்பாவனைகள், ததீயாரதங்களும், புத்தக வெளியீடும் நடைபெறவுள்ளன.
- கே.சுந்தரராமன்