

மாபெரும் தவமுனிவரான வசிஷ்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலலிங்கம், சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஆலயம், குரு பகவானின் பரிகாரத் தலம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற க்ஷேத்திரம் எனப் பல பெருமைகளுக்கு உரியது தஞ்சாவூர் மாவட்டம் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் ஆலயம்.
‘திட்டை’ என்று பரவலாக அறியப்படுகிற தென்குடித் திட்டை தஞ்சாவூரிலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம். வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தால் இந்தக் கிராமம் பிரபலம் ஆகியிருக்கிறது.
தொழுதவரின் பெயரில் திருநாமம்: காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயம். அழகிய கோபுரம் உயர்ந்து நின்று நம்மை உள்ளே வரச்சொல்லி அழைக்கிறது. உள்ளே தூண்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு தூணில் ஈசனும் அம்பிகையும் தரிசனம் அளிக்க, மற்றொன்றில் நான்கு சைவ சமயக் குரவர்களும் பளிச்சென்று காட்சி தருகிறார்கள்.
மூன்று நிலைகளாகப் படிகள் உள்ளன. அவற்றில் ஏறித்தான் வசிஷ்டேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். சந்நிதிக்குள் நுழையும் முன் இடது புறம் சிறிய விநாயகரும் வலது புறம் வசிஷ்டரும் காட்சி தருகிறார்கள். இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக வெளிப்பட்டு அருள்புரிந்திருக்கிறார். இத்தலத்தில் சிவலிங்கத்தை வசிஷ்ட மாமுனிவர் வழிபட்டிருக்கிறார். அதனால்தான் மூலவருக்கு அந்தப் பெயர். இவருக்கு பசுபதிநாதர், பசுபதீஸ்வரர் என்கிற வேறு பெயர்களும் உள்ளன.
வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் ஒன்று வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இந்தச் சந்திர காந்தக்கல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் 24 நிமிடத்திற்கு ஒரு முறை இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழ வைக்கிறது எனக் கூறப்படுகிறது.
ஆலயத்தைக் காக்கும் பன்னிரு ராசி சக்கரம்: திருஞானசம்பந்தர் வெட்டாறு வடகரையில் இருந்து ‘தென்கொடி திட்டையே’ என்று பதினோரு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று:
கருவினா லன்றியே கருவெலா மாயவன்
உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே
என்பதாகும் (மூன்றாம் திருமுறை).
அடுத்து நாம் தரிசிப்பது உலக நாயகியை. இவர் சுகுந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அம்மன் சந்நிதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரளய காலத்தில் இப்பகுதியில் திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவத்தலங்கள் பாதிக்கப்படவில்லை என்கிற நம்பிக்கை நிலவுகிறது (திட்டை எனும் சொல்லுக்கு மேடு எனவும் பொருள் உண்டு). சீர்காழியை வடதிட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியைத் தென்திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள்.
பரிபூரண அனுபவம்: வெண் செண்பகம் இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது. நவக்கிரகங்களில் எட்டு கிரகங்களும் சூரியனைப் பார்த்தபடி உள்ளன. இந்தத் தலத்தில் குரு பகவானுக்குத் தெற்கு நோக்கித் தனிக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
குரு பகவான் வசிஷ்டரிடம் நின்ற நிலையில் உபதேசம் பெற்றுள்ளார். படிப்பு, உத்தியோகம் சிறக்கவும் விவாகம் நடைபெறவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு ஆசிபுரிகிறார். ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இந்தக் கோயில் குலோத்துங்க சோழரால் அமைக்கப்பட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் செட்டிநாடு நகரத்தார் கருங்கல் கொண்டு திருப்பணி செய்துள்ளனர்.
ஆலய கோபுர வாசலுக்கு நேரெதிரே சற்றுத் தள்ளி பரந்துவிரிந்திருக்கிறது திருக்குளம். இதைப் பசு தீர்த்தம், சூல தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். தொன்மையான ஆலயங்களுக்கே உள்ள ஈர்ப்பை திட்டைக் கோயிலிலும் பரிபூரணமாக உணர முடிகிறது.
- aruncharanya@gmail.com