

தொன்மைக் காலம்தொட்டுத் தொடர்ந்துவந்த சமணக் கொள்கைகளின் அடிப்படைக் கூறுகள் மாறாமல், தத்துவரீதியில் சில மாற்றங்களைச் செய்து பெரும்பாலான மக்களைத் தன்வயப்படுத்திய சிறப்பு 24 ஆம் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரரையே சாரும். அரச குலத்தில் பிறந்து ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த மகாவீரர், மக்களை நல்லறப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்னும் விருப்பத்தோடு துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
வகுத்தளித்த நன்னெறிகள்: இல்லற வாழ்வில் ஈடுபடுவோர் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பொருள்வரைதல், கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை உள்ளிட்ட விரதங்களை மேற்கொண்டு வாழ வேண்டும் என வலியுறுத்தினார். இவற்றைப் பத்து விரதங்கள் என சமணக் கொள்கை குறிப்பிடுகிறது.
நூற்பொருளில் உள்ள உண்மையை ஆராய்ந்தறிதலாகிய ‘நற்காட்சி’, ஆராய்ந்தறிந்த நுாற்பொருளில் அறிவைச் செலுத்துதலாகிய ‘நல்ஞானம்’, அப்பொருளின் வழிநடத்தலாகிய ‘நல்லொழுக்கம்’ என்னும் கொள்கைவழி போற்றி நடப்பது உலகியல் வாழ்க்கைச் சிறப்புக்கு அடித்தளம் எனப் போதித்தார். இக்கொள்கையினை ‘மும்மணிகள்’ என்று சமணம் கூறுகிறது.
நான்கு சாதனங்கள்: இல்லற வாழ்வில் ஈடுபடுவோர் அன்னதானம், அபயதானம், மருந்து தானம், கல்வி தானம் ஆகிய நான்கையும் தேவைப்படுவோரின் நலன் கருதி செய்தல் வேண்டும் என்றார் மகாவீரர். இவை இல்லறத்தார் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு சாதனங்கள் என சமணம் வகைப்படுத்தியுள்ளது. இவ்வாறு இல்லறத்தில் பயிலும் நல்லறங்களே துறவறம் மேற்கொள்ள நினைப்போர்க்குத் துணையாகவும் அமையும் என்கிற கருத்தையும் மகாவீரர் கூறினார்.
தீமை புரிவோரைத் திருத்த முயலும் குணமும், பகைப்போரிடம் பகைமை கொள்ளாது அன்பு பாராட்டும் பண்பையும் வளர்த்துக்கொள்ளுதல் மனிதகுல ஒற்றுமைக்கும், மனிதநேய மாண்பு செழித்தோங்கவும் வழிவகுக்கும் என்கிற அன்பு நெறியைப் போதித்தார்.
இவ்வாறு மானுடம் நல்லறப் பாதையில் நடைபோட மகாவீரர் அருளிய அறவுரைகளை அவர் பிறந்த நன்னாளில் நினைவுகூர்ந்து அறம் வளர்ப்போம்.
- கே.ஏ.ராஜபாண்டியன்