

சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான, திருநாவுக்கரசரால் ‘வாட்போக்கி’ என்று ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பித்து பாடப்பட்ட புண்ணியத் தலம் அய்யர்மலை. 224 ஏக்கர் நிலப்பரப்பில் செங்குத்தாக நான்கு கிலோ மீட்டர் சுற்றளவுடனும், கடல் மட்டத்திலிருந்து 1,178 அடி உயரமும், ஆயிரத்து 17 படிகளும் கொண்ட இம்மலைக்கோயில் மாணிக்கமலை, ரத்தினகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு இறைவனாக சுயம்புலிங்கம் ரத்தின கிரீஸ்வரரும் இறைவியாக சுரும்பார் குழலி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். காகம் கவிழ்த்து உண்டான காவிரியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற இம்மலைக் கோயிலுக்கு, ‘காகம் பறவா மலை’, ‘காகம் அணுகா மலை’ என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு. அதற்கு காரணமாகத் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளதை அறிவோம்.
இடையருக்குக் கிடைத்த இறை அனுபவம்: அய்யர்மலைக்கு அருகிலுள்ள குழித்தண்டலை என்றழைக்கப்படும் இன்றைய குளித்தலையில் சிவனடி மறவாமல் பூசித்து வந்த இடையர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் மாணிக்கமலைச் சாரலுக்கு பசுக்களை ஓட்டி வந்து மேய்த்துவிட்டு, ஒரு குடம் பாலை எடுத்துச் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்துவந்தார்.
ரு நாள் மலைமேல் ஓரிடத்தில் பால் குடத்தை வைத்துவிட்டு, மேய்ச்சலில் இருக்கும் பசுக்களை கண்காணித்தபடி இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காகம் ஓன்று அந்த பால்குடத்தை தட்டி கவிழ்த்துவிட்டது. மனம் கலங்கிய அந்த இடையர், உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினார்.
அப்போது இறைவன் எழுந்தருளி, ‘‘மெய்யன்பனே, இந்த மலையெல்லாம் என் திருமேனியானதால் இங்கு சிந்திய பால் என்னை குளிர வைத்ததாகும்’’ என்று கூறினார். அதோடு, அந்த ஆயர் விருப்பப்படி அந்த காகத்தையும் எரித்தார்.
இந்த அருள்சம்பவம் நடந்த இடத்தை குறிக்கும் வகையில் மலையின் அடிவாரத்திலிருந்து படி ஏறிச்செல்லும் வழியில் மூன்றாவது மண்டபமாக ‘காக்கை மண்டபம்’ கட்டியிருக்கின்றனர். இதனால், அந்த உயரத்துக்கு மேல் இப்போதும் காகம் பறப்பதில்லை. இதனால், அய்யர்மலைக்கு ‘காகம் பறவா மலை’,‘காகம் அணுகா மலை’ என்ற பெயர்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிகழ்வை, ‘காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பறம்பு’ என்று திருநாகைக் கரோணப் புராணத்தில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் எட்டாவது கிலோ மீட்டரில் இத்தலம் அமைந்துள்ளது.
பொன்னிடும் பாறை: இம்மலைக்கோயிலின் அடிவாரத்தில் ‘பொன்னிடும் பாறை’ என்ற சிறப்பிடம் ஒன்று உள்ளது. இந்த மலைக்கும் ஒரு சிறப்பு உண்டு. சுந்தரர், தன் உயிர்த் தோழரான சேரமான் பெருமான் நாயனாரைப் பார்ப்பதற்காகத் திருவாரூரிலிருந்து தன் அடியார்களுடன் மலை நாட்டிலுள்ள கொடுங் கோளூருக்குப் புறப்பட்டார்.
வழியிலுள்ள தலங்களை வணங்கி வாட்போக்கிக்கு வந்தார். ரத்தினகிரி மலையே சோதிலிங்கமாகக் காணப்பட்டதால், அதன் மேலே ஏற அஞ்சி, கீழிருந்தபடியே இறைவன் புகழைப் பாடினார். பொன் வேண்டுமெனத் துதித்தார். பெருமான் ஆணைப்படி, பூதகணங்கள் பாறையில் பொன்னைச் சொரிந்தன. ஒன்றுபாதி என்னுமிடத்தில் இறைவன், சுந்தரருக்குக் காட்சி அளித்தார்.
அந்த பொன் சொரியப்பட்ட இடமே இப்போது ‘பொன்னிடும் பாறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவத்தில் நடக்கிறது. இந்த வரலாற்றை சூதமா முனிவர் சவுனகாதி முனிவர்களுக்கு கூறியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
- நிகாஷ் | srinksmedia@gmail.com