

வசனமிகவேற்றி மறவாதே மனத் துயராற்றி உழலாதே
இசைபயில் ஷடாக்ஷ ரமதாலே இகபர சௌபாக்ய மருள்வாயே
- திருப்புகழ்
அதிசயம் அநேகமுற்ற பழநி மலை என்று சிறப்பித்துக் கூறும் அருணகிரிநாதர், பழநி மலை பற்றி தொண்ணூற்று ஐந்து பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பழநி நாதனை ஞான மூர்த்தி, ஞான நாதன், ஞானாசிரியன், ஞான ஸ்வரூபன் என்றுதான் அழைக்கிறார் அவர். தன் நோய் தீர்ந்து பழநி வந்த அருணகிரிநாதருக்கு ஜெப மாலை தந்து அருள்கிறான் கந்தன். “ஜெபமாலை தந்த சத்குரு நாதா, திரு ஆவினன் குடி வாழும் பெருமாளே" என்று திருப்புகழில் குறிக்கிறார்.
ஞானப் பழத்துக்காக மலை மீது ஏறி நின்ற முருகனின் கோபம் தணிக்க, நீயே `ஞானப்பழம்' என்று அம்மையும் அப்பனும் புகழ்கிறார்கள். போகரால் உண்டாக்கப்பட்ட முருகனின் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே, பழநி முருகனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் சகல நோய்களைத் தீர்க்கும் மருந்து என்கிறார்கள்.
தினப்படி திருப்புகழ் படி: பழநி மலை முருகனை வணங்கினால் துயரங்கள் யாவும் விலகும் என்கிறார் அருணகிரியார். “சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர் வேல் வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக் கந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைக் சாந்துணைப் போதும் மறவாதர்க்கு ஒரு தாழ்வில்லையே” என்று முருகனைச் சிறப்பிக்கிறார் அருணகிரிநாதர். முருகனை வணங்க மனக்கவலை தீரும் என்கிறார் அருணகிரியார்.
‘மனக்கவலை ஏதுமின்றி உனக்கடிமையே புரிந்து வகைக்கு மனு நூல் விதங்கள் தவறாதே வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கிமயக்கமற வெதமுங் கொள் செழித்த வள மேசிறந்த மலர்ப்பொழில்களே நிறைந்த திருப்பழநி வாழ வந்த பெருமாளே.” என்ற பாடலை தினமும் படிப்பதன் மூலம் நம் மனக்கவலைகள் யாவும் தீரும் என்பது அருணகிரியாரின் வாக்கு.
தண்டாயுதத்தில் உறைந்த அருணகிரி: பழநி முருகனின் கையில் ஒரு தண்டாயுதம் இருக்கும். அந்த தண்டாயுதத்தில் ஒரு கிளி இருக்கும். அது அருணகிரியார் என்று சொல்லப்படுகிறது. சம்பந்தாண்டவன் என்ற அவரின் பகைவனின் நயவஞ்சகத்தால் கூடு விட்டுக் கூடு மாறி கிளி உருவில் பாரிஜாத மலரை எடுத்து வர தேவலோகம் செல்கிறார் அருணகிரியார்.
அவர் வருவதற்குள் சம்பந்தாண்டவன் அவரின் உடலை எரித்துவிட, முருகப் பெருமான் அவரை கிளி உருவத்திலேயே தன் தண்டாயுதத்தில் இருத்திக் கொண்டார். இத்தலத்தில் அவர் பாடிய திருப்புகழ்கள் அனைத்தும் அலாதியான சொல்லாற்றலும் பலன்களும் கொண்டவை.
அவன் தத்துவங்களுக்கு மூலாதாரமான வேத மந்திர ஸ்வரூபமாய் இருப்பவன் என்று `நாத விந்து கலாதீ நமோ, நம' என்ற பாடலில் கூறுகிறார்.
"நாதவிந்து கலாதீ நமோ நம, வேத மந்திர ஸ்வரூபா நமோநம ஞானபண்டித சாமீ நமோநம, வெகுகோடி நாம சம்பு குமாரா
நமோநம.
போக அந்தரி பாலா நமோநம நாக பந்த மயூரா நமோநம
பரசூரர்
சேத தண்ட வினோதா நமோநம கீத கிண்கிணி பாதா
நமோநம
தீர சம்பிரம வீரா நமோநம கிரிராஜ, தீப மங்கள ஜோதி
நமோநம
தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம
அருள் தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குறு சீர்பாத சேவையும் மறவாத ஏழ்தலம் புகழ்
காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோஹர ராஜ கம்பீர நாடாளு நாயக
வயலூர
ஆதரம் பயிலாரூர் தோழமை சேர்தல் கொண்டவரோடே
முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி ஆதி அந்தவுலாவாக
பாடிய
சேர்த்தல் கொங்குவை காவூர் நன்னாடதில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே“ என்று புகழ்ந்து பாடுகிறார்தூய அம்பலத்தில் ஜோதி வடிவாக விளங்கும் பெருமாளே, வள்ளி, தேவயானையை பக்கத்தில் கொண்டவனே, உனது அருள் தர வேண்டும் என்று உன்னை `நமோநம' என்று போற்றுகிறோம்.
உனது திருவருளைத் தந்தருள்வாய் என்று பிரார்த்தனை செய்கிறார் அருணகிரியார். பழநி திருப்புகழில் இந்தப் பாடல் மிகச் சிறப்பு வாய்ந்தது. நோய் தீர்த்து, செல்வ வளம் தந்து வாழ்வை வளமாக்கும் திருப்புகழ் இது என்பது சத்தியம்.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com