

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்சிந்து பயமயிலு
மயில்வீரா, திங்களரவு நதி துன்று சடிலருள் செந்திநகரிளுறை பெருமாளே
- திருப்புகழ்
முருகனின் படை வீடுகளில் இரண்டாவது தலம் திருச்செந்தூர்.
வயலூரில் முருகனின் புகழைப் பாடிய அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனைப் பாடித் துதித்துப் பின் திருச் செந்தூர் செல்கிறார். இங்கு முருகன் குழந்தை வடிவில் வந்து அவருக்கு நடனக் காட்சி அளிக்கிறான். வில்லிப் புத்தூராருடன் வாதில் ஈடுபட்டு கந்தரந்தாதி பாடி வென்ற தலம் திருச்செந்தூர்.
அகத்தில் இடையறாது ஆடும் அலைகள் ஓய்ந்தால் ஜோதி வடிவாய் கந்தன் நம்மை ஆட்கொள்வான் என்பதையே திருச்செந்தூர் நமக்கு உணர்த்துகிறது.
இங்கு அருணகிரிநாதர் மனம் குளிர, உடல் சிலிர்க்க, கண்கள் ஒளி பெற கந்தனை நினைத்து, நினைத்து உருகிப் பாடுகிறார்.
“இயலுமிசை யிலுசித வஞ்சிக் கயர்வாகி
இரவு பகல் மனது சிந்தித்துழலாதே” என்கிறார்.
மண்ணுலக இன்பங்களில் திளைத்து காலத்தை வீணாக்காமல் உனது உயர்ந்த கருணையால் வரும் பேரின்பத்தை அனுபவித்து, அதில் மூழ்கி, உன்னை என் உள்ளத்தில் அறியக் கூடிய அன்பினைத் தருவாயாக” என்று வேண்டுகிறார்.
“நமோ, நமோ” என்று நாளும் உன் புகழ் பாடி முக்தி அடைய வேண்டும் என்றுதான் பாடுகிறார்.
தொழுநோயால் வருந்திய அவர் அங்கு சென்ற பிறகுதான் முருகன் கருணையால் நோய் தீர்ந்து குணமாகிறார். மயில் வழிகாட்ட இங்கு வந்த அவர் முருகன் மேல் பக்தியுடன் எண்பத்தி ஐந்து திருப்புகழ் பாடி நோய் முற்றிலும் நீங்கப் பெற்றார் என்பது வரலாறு.
திருச்செந்தூரில் பாடிய ஒவ்வொரு திருப்புகழுமே பலன்களை அள்ளி வழங்கக் கூடியது. மரண பயம் நீக்கும் திருப்புகழ், செல்வ வளம் தரும் திருப்புகழ் என்று ஒவ்வொன்றுமே ஏராளமான நன்மைகளை அளிக்கக் கூடியவை.
எமன் வரும் நேரத்தில் நீயே வந்து எனக்கு அருள வேண்டும். இவன் என் அன்பன் என்று சொல்லி காக்க வேண்டும் என்று “தந்த பசிதனை” என்ற பாடலில் “அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்சலென / வலிய மயில்மேல் நீ / அந்த மறலியொடு கந்த மனிதனம் தன்பனென மொழிய வருவாயே” என்று வேண்டுகிறார்.
“அனைவரும் மருண்டு” எனத் தொடங்கும் பாடலில் தன் தொழுநோய் தீர வேண்டும் எனப் பாடும் அருணகிரியார் “பெண்களின் மனக்கவலை தீரவும் ஓர் அற்புதமான திருப்புகழ் பாடியுள்ளார்.
விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த
மிகவானிலிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசை கூற
குறவாணர் குன்றி லுறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர,
குளிர்மாலையின் கணணி மாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ.
மறிமானுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா.
அறிவாலறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில் மேலமர்ந்து
அலைவாயுகந்த பெருமாளே!
என்ற பாடலைப் பெண் கள் நாற்பத்தி எட்டு நாள்கள் பக்தியுடன், மனமுருகி, முருகனை நினைத் துப் பாட திருமணம்நடக்கும் என்பது நம்பிக்கை.
திருமுருக கிருபானந்த வாரியார் தன் சொற்பொழிவுகளில் இப்பாடலைப் பற்றி அதிகம் குறிப்பிடுவார்.
எவ்வுயிர்க்கும் எப்பொருளுக்கும் இறைவனாகிய ஈசன் மந்திர உபதேசம் பெறும் பொருட்டு, உன்னை மகிழ்ச்சியுடன் வழிபாடு செய்த ஞான ஸ்வரூபியே, அரக்கர்களையும், அலைகள் உடைய சமுத்திரம் அஞ்சவும் வடிவேலாயுதத்தை எறிந்த தைரியம் உடையவரே,
மெய்ப்பொருளை உணர்ந்து, தேவரின் பாதக் கமலங்களை வணங்கும் பக்தர்களின் இடைஞ்சல்களை நீக்குபவரே, அழகிய செம்பொன் மயில் மேல் அமர்ந்து திருச்சீரலைவாயில் உறைகின்ற பெருமாளே, எவரையும் மயக்கும் சக்தி உடைய மாறனின் கணைகள் தாக்கவும், வானில் சந்திரன் வெயில் போலக் காயவும், தென்றல் நெருப்பாக வீசவும், வாடி நிற்கும் பேதைப் பெண்களின் துன்பத்தை தீர்க்க, குரவர்கள் வாழும் குன்றின் மேல் உள்ள வள்ளியை மணந்த பெருமாளே, வருவாயே” என்று வேண்டுகிறார்.
இப்பாடலைப் பாடி முருகனை நெகிழ்ந்து உருகி வேண்டினால் குறை தீர்க்க வருவான் குமரன் என்பது சத்தியமான உண்மை.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com