விவாக ஓலை எழுதிய விநாயகன்
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வேந்தனை நாம் அறிவோம். அவருக்கு அங்கவை சங்கவை என்று இரண்டு மகள்கள் இருந்தார்கள். பாரியின் புகழில் பொறாமை கொண்ட மூவேந்தர்கள் அதாவது சேர, சோழ, பாண்டியர்கள் சூழ்ச்சிகள் பல செய்து பாரியைக் கொன்றார்கள். தந்தையை இழந்த அங்கவையும் சங்கவையும் ஆதரவின்றி நின்றார்கள்.
பாரியைத் தன்னால் காக்க முடியவில்லை, அவனுடைய பெண்களையாவது கரை சேர்க்க வேண்டும் என்று தீர்மானித்தார் சங்கப் புலவரான கபிலர். திருக்கோவிலூர் அரசனான மலையமானின் மகனுக்கு அங்கவையையும் சங்கவையையும் கட்டி வைக்க, கபிலர் படாத பாடு பட்டார். ஆனால், மூவேந்தர்களை எதிர்த்துக்கொண்டு, பாரியின் மகளைத் தனது மகனுக்கு மணம் முடித்து வைக்க மலையமான் சம்மதிக்கவில்லை.
மனம் நொந்துபோன கபிலர், இறைவனடி சேர்ந்தார். தங்களுக்கு ஆதரவாக இருந்த கபிலரையும் இழந்த பாரி மகள்கள் தனிமையில் ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது அவ்வழியே ஔவை பாட்டி சென்றுகொண்டிருந்தார். மழை கொட்டிக்கொண்டிருந்தது. பாட்டி, பாரி மகள்களின் குடிசைக்கு அருகில் ஒதுங்கினார்.
பாரி மகளிர் பாட்டிக்குத் துடைத்துக்கொள்ள துண்டும் உணவும் தந்து உபசரித்தார்கள். ஏழ்மையிலும் அடுத்தவருக்கு உதவும் பண்போடு இருக்கும் அவ்விரு பெண்களை யார் என்று பாட்டி விசாரித்தார். விஷயம் அறிந்த ஔவைப் பாட்டிக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது.
‘முல்லைக் கொடிகூட வாடக் கூடாது என்று எண்ணிய பாரியின் வஞ்சிக் கொடிகளுக்கா இந்த நிலை’ என்று வருந்தினார். கபிலர் செய்ய முடியாமல் போன திருமணத்தை நாம் நடத்தி, பாரி மகள்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்று தீர்மானித்தார்.
பக்திக்கு மயங்கும் இறைவன்: கோவிலூர் மலையமானிடம் தூது போனார். அவன், மூவேந்தர்களுக்கு இதில் சம்மதம் என்றால் எனக்கும் பரிபூரண சம்மதம் என்றான். ஆனால், ஆணவம் பிடித்த மூவேந்தர்களை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று ஒரு கணம் பாட்டி சிந்தித்தார். அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது. உடன் கை குவித்து தனது இதய தெய்வமான விநாயகனை வணங்கியபடியே பாட ஆரம்பித்தார்.
ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்
கரியுரிவைக் கங்காளன் காளாப் – பரிவுடனே
கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து
என்று அழகாக ஒரு பாடல் பாடினார்.
அதாவது, ‘ஆனைமுக அண்ணலே! உன் தந்தங்களில் ஒன்றை உடைத்து, எழுத்தாணி ஆக்கிக்கொண்டு பாரதம் எழுதினாய் என்பார்கள். அங்கவை, சங்கவை கல்யாணத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுத வேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்’ என்று ஔவை பாடினார்.
தனது பக்தியாலும் தெய்வத் தமிழாலும் தெய்வத்தையே மிரட்டுகிறார் ஔவையார். இதே பக்தியால்தானே சுந்தரருக்காக ஈசன் தூது போனார், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டார். அந்த பக்தி பொங்கி வழியும்போது, ஆண்டவன் நமக்கு ஏவல் செய்யக் காத்திருக்கிறான். ஏனென்றால், அவன் மீது நாம் வைக்கும் அன்பு பக்தி. அந்தப் பக்தி மேலும் மேலும் கனியும்போது அவன் தெய்வம் என்கிற உணர்வு நீங்கி அவன் நம்மவன் என்கிற எண்ணம் வரும். அந்த உணர்வின் வெளிப்பாடே இது போன்ற பாடல்கள்.
முதிர்ந்த, கனிந்த பக்திக்கு அடங்காமல் இருப்பாரா ஆனைமுகன்? நொடியில் ஔவையின் முன் தோன்றி பாரி மகளிருக்காகத் திருமண ஓலை எழுதினார். ஆனைமுகனே கல்யாணத்துக்கு அழைப்போலை எழுதிவிட்டான் என்றால், அந்த கல்யாணத்தைத் தடுக்க மூவேந்தர்களால் முடியுமா என்ன? முந்தியடித்துக்கொண்டு மூவேந்தர்களும் பாரி மகள்களுக்குச் சீதனம் கொண்டு வந்தார்கள். கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
ஔவையார் தனிப் பாடல் திரட்டு நூலில் இருக்கும் இப்பாடல், சுந்தரத் தமிழுக்கு இறைவனும் அடிமை என்று இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
- ரா. மகேஷ் | radhaekrishnamag1999@gmail.com
