

தங்களிடம் குடிகொண்டிருக் கும் கலையைவிட தங்களை உயர்வாக நினைக்கும் கலைஞர்கள் காணாமல் போகி றார்கள். தங்களைவிட தங்களிடம் குடிகொண்டிருக்கும் கலையே உயர்ந்தது என்று நினைப்பவர்கள் தொடர்ந்து பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபட்டு தங்களின் கலையை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பரதநாட்டியக் கலைஞர்தான் அக் ஷயா ரங்கராஜன்.
அண்மையில் ரசிக ரஞ்சனி சபாவில் அனுஷம் ஆர்ட்ஸ் அகாடமியின் ஆதரவில் அக் ஷயா ரங்கராஜனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மதுரை சோமுவின் அந்தக் கால `ஃபுல் பெஞ்ச்' இசைக் கச்சேரியைக் கேட்ட திருப்தியை, அக் ஷயாவின் அன்றைய இரண்டரை மணிநேர நாட்டிய நிகழ்ச்சி வழங்கியது!
மகாவிஷ்ணுவின் இரு அவதாரங் களை (ராமர், கிருஷ்ணர்) அக் ஷயா அன்றைய நிகழ்ச்சிக்கான கருவாக எடுத்துக் கொண்டிருந்தார். செறிவான அவரின் அபிநயங்களிலும் நாட்டிய முத்திரைகளிலும் திரேதா யுகமும் துவாபர யுகமும் மேடையில் நமக்கு தரிசனமாயின.
இசை மேதை லால்குடி ஜெய ராமனின் `இன்னும் என் மனம் அறி யாதவர் போல் இருந்திடல் நியாயமா' பதவர்ணம் அவரின் நடனத் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு உதவியது. வார்த்தைகளுக்குள் அடங்காத கிருஷ்ணன் என்னும் தத்துவத்தின் பல கூறுகளை விரிவாக நம் முன் காட்சிப்படுத்தினார் அக் ஷயா.
குழந்தைக் கிருஷ்ணனாக பூதகியை வதம் செய்வதில் அவரின் பாவனையும், பாலகனாக காளிங்க நர்த்தனம் ஆடியதில் அவரின் கால்களின் உறுதியும் சமநிலையும் ரசிகர்களை காட்சிகளோடு மிகவும் நெருக்கமாக்கியது.
நீலாம்பரி ராகத்தில் பாடப்பட்ட குருவாயூரப்பன் தாலாட்டுக்கு அக் ஷயாவிடமிருந்து வெளிப்பட்ட அபிநயங்கள் அவ்வளவு அழகு. குழந்தை தூங்கிவிட்டது என்று தூளியை அம்மா ஆட்டாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தால், அதுவரை கண்மூடியிருந்த குழந்தை கண்களைத் திறந்து சிரிக்கும்.
பொய்க்கோபத்துடன் அம்மா மீண்டும் தூளியை ஆட்ட இந்த முறை குழந்தை தூங்கிவிடும். இந்தக் காட்சியை குருவாயூரப்பன் தாலாட்டுப் பாடலில் அக் ஷயா நிகழ்த்திய விதம் மிகவும் இயல்பாக இருந்தது சிறப்பு.
சரணாகதி தத்துவத்தையும், கிருஷ்ணனின் காருண்யம், லீலை, சிருங்காரத்தை வெளிப்படுத்திய அக் ஷயாவின் நடனம், ராமனின் தீரத்தையும் வீரத்தையும் வெளிப் படுத்தத் தவறவில்லை. மைசூர் வாசுதேவாச்சாரியாவின் `நின்னே நம்மிதினே' பாடலுக்காக ஆடிய அபிநயங்களின் மூலம் ராமனின் அவதாரப் பெருமையை உணரவைத்தார்.
குரு மாலதி தோத்தாத்ரியின் நட்டுவாங்கமும் ஸ்ரீசாயின் பாட்டும் விஜயராகவனின் மிருதங்க தாளமும் தேவராஜனின் குழலும் ராதா வெங்கடேஸ்வரனின் வீணை வித்வாம்சமும் அக் ஷயாவின் நடனத் துக்கு பெரிதும் பலம் சேர்த்தன.
சென்னையிலிருக்கும் கலாசாகரா அகாடமியில் ஆறு வயது முதல் பரதநாட்டியத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கி தன்னுடைய 13ஆவது வயதில் நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தியவர் அக் ஷயா. நடனத்தில் மட்டுமில்லாமல் படிப்பிலும் அறிவுச் சுடராக விளங்கிய அக் ஷயா, இந்திய அளவில் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் பள்ளி இறுதியாண்டில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவியாகத் திகழ்ந்தார்.
எலக்ட்ரிகல் இன்ஜீனியரிங்கில் பொறியியல் பட்டம் பெற்று, சிலிக்கான் வேலியில் மின் வடிவமைப்புப் பொறியாளராக இருப்பவர் அக் ஷயா. பரதநாட்டியத்தை பொழுதுபோக்குக்காக கற்றுக் கொள் பவர்களிடமிருந்து மாறுபட்டு, அதன் சம்பிரதாயத்திலிருந்து சிறிதும் நழுவாமல் அவரின் குரு மாலதி தோத்தாத்ரியிடம் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் கற்றுவருகிறார். "தன்னுடைய நடனத்தை மிகவும் நுட்பமாக செதுக்கிய பெருமை தன்னுடைய குருவையே சாரும்" என்கிறார் அக் ஷயா.