

தக்கலை பீர் முஹம்மது அப்பா வலியுல்லாஹ் அருளிய ஞானப்புகழ்ச்சியின் உரை நூல் இது. பீரப்பாவின் `ஞானப்புகழ்ச்சி'யில் மொத்தம் 686 பாடல்கள் இருக்கின்றன. இவற்றிலிருந்து 125 பாடல்களுக்கு கருத்துகள் சிதையாதவண்ணம் எளிமையான தமிழில் பாடலையும் அதற்கான உரையையும் நூலாசிரியர் அளித்திருக்கிறார்.
சமயத்துக்கு அப்பாற்பட்டு இறைத் தேடலுடனும் இருப்பவர்களுக்கான கண்டடைவாக இந்நூலின் கருத்துகள் அமைந்திருக்கின்றன. பீரப்பாவின் பாடல் ஒன்றில் தந்தை என்பதற்கு `அத்தா' என்னும் சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்.
இதைக் குறிப்பிடும் உரையாசிரியர் சலாகுதீன், முஸ்லிம் தமிழ்ச் சமூகத்தில் `அத்தா' என்னும் சொல்லும் `வாப்பா' என்னும் சொல்லும் வழக்கத்தில் இருப்பதை குறிப்பிடுகிறார். மேலும், `வஃபா' எனும் அரபுச் சொல்தான் இதற்கு வேர்ச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.
பாடலுக்கான தன்னுடைய உரை வீச்சுக்கு மிகவும் நெருக்கமாக குர்ஆனின் வாசகங்களையும் குறிப்பிட்டிருப்பது பாடலின் கருத்தோடு படிப்பவர்களை மேலும் ஒன்றுவதற்கு உதவுகிறது. ஒரு பாடலில் இறைவனை `ஏதுமிலி' என்னும் வார்த்தையைப் பயன்படுத்தி பீரப்பா விளிக்கிறார்.
இதற்கு இணக்கமாக "அவன் எவரையும் பெறவும் இல்லை. எவராலும் பெறப்படவும் இல்லை" என்னும் குர்ஆன் வரிகளைச் சொல்லி, பிறப்பே இல்லை என்கின்ற போது அவனுக்கு ஏது இறப்பு? அத்தகைய பரம்பொருள் அவனுக்கு ஒப்பும் இல்லை, உவமையும் இல்லை.
இதனால்தான் பீரப்பா `ஏதுமிலி' என்று இறைவனைக் குறிப்பிடுகிறார் என்ற விளக்கத்தையும் துலக்கமாக அளிக்கிறார் நூலாசிரியர் முகமது சலாகுதீன்.