

உனைத் தினந்தொழுதிலன் உணதியல்பினை உரைத்திலன்
பல மலர் கொடுன் அடியிணை உறப்பணிந்திலன் - திருப்புகழ்
முருகன் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறான்?
நித்தம் பூசை செய்து அவன் நாமத்தை இடையறாமல் ஜபித்து, மலர் கொண்டு பூஜை செய்து தொழுவதா? என்றால், `இல்லை' என்பதே ஒரே பதில். வேலன் நம்மிடம் எதிர்பார்ப்பது அவன் மீதான நிலைத்த பக்தி. நம்பிக்கை. அடியவர்களுக்கு உதவிடும் பாங்கு. தூய அன்பே அவனின் எதிர்பார்ப்பு. அதை முழுவதுமாக கந்தன் மேல் செலுத்தினார் அருணகிரியார்.
எனவேதான் தமிழால் தன்னைப் போற்றித் துதிக்கும் பாக்கியத்தை அருணகிரிக்குத் தந்தான் கார்த்திகேயன். திருப்புகழுக்கு ஈடு, இணை எதுவுமில்லை என்கிற அளவுக்கு அற்புதமான தமிழில் சாகா வரம் பெற்ற பாடல்களை அழகு தமிழில் பாடும் திறமையை அருளினான் கந்தன்.
“ஒருதவமிலனுன தருள்மாறா உளத்துள ன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடுன் சிகரமும் வலம் வருகிலன் உவப்பொடுன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே கனைத்தெழும்பக டது பிடர் மிசை வரு கறுத்தவெஞ்சின - - - - - - -
கணத்தில் என்பய மற மயில் முதுகினில் - - - - வருவாயே தினத்தின ஞ்சதுர் மறைமுநி முறை கொடு புனற் - - - - - - -
தெனத் தெனந்தன எனவரி யளி நறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில் திகழ் திருப்பரங்கிரி நனிலுறை சரவண பெருமாளே”
முதல் படை வீடு: முருகா உன்னைத் தினம் தொழுது அறிந்திலேன். உன் பெருமைகளையும் கூறியது இல்லை. பல மலர் கொண்டு உன்னைப் போற்றியதும் இல்லை. ஒரு தவமும் நான் செய்தது இல்லை. உன்னருள் நிலைத்து நிற்கும் அடியார் இருக்குமிடம்கூட எனக்குத் தெரியாது. உற்சாகமாய் உன் மலையைச் சுற்றி வந்ததும் இல்லை.
பெருமாளே எமதூதர்கள் என் முன் வரும்போது அஞ்சேல் என்று கூறி மயில் மீது ஏறி நீ வர வேண்டும். அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, வாசமிகு சந்தனமும், கஸ்தூரியும் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனே, திருப்பரங்குன்றத்தில் ஆட்சி செய்யும் கந்தனே நீயே என்னைக் காக்க வேண்டும் என்று பாடுகிறார். இங்கு முருகன் மேல் பதினைந்து பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் அருணகிரிநாதர். முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு இத்தலம்.
முருகன் தவமிருந்த மலை: ஈசன் அம்பிகைக்கு `ஓம்' என்னும் பிரணவ மந்திரப் பொருளை உரைத்தபோது தாயின் மடியிலிருந்த கந்தனும் அதைக் காது குளிரக் கேட்டான். குரு உபதேசம் இல்லாமல் கேட்பது பாவம் என்பதால் அதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்கு வந்து தவம் செய்தான். `பரங்கிரி' எனும் பெயர் பெற்ற மலை சிவ ரூபத்தில் இருந்தாலும், இக்குன்று முருகனுக்கென்றே புகழ்பெற்ற படை வீடாக விளங்குகிறது.
“பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரிபவ மின்றுக ழிந்திட வந்தருள் புரிவாயே..."
- என்று வேண்டுகிறார் அருணகிரியார். "பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற, அற்பனான நான் செய்கின்ற பாவங்களை எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி திருவருள் புரிய வேண்டும்" என்கிறார்.
தன் பாடலில் அவர் முருகன் மூலம் பெற்ற மகிழ்வான அனுபவங்களை மட்டும் பாடவில்லை. மிகக் கேவலமாய், குறையுடயவனாய் இருந்த தன்னை முருகன் ஆட்கொண்ட விதத்தையும் கூறுகிறார், அருள் இலாத வாழ்வை வாழும் நம் அவலத்தையும் முருகனின் கருணையை ஒரு கண்ணாடியாகவும் காட்டி, முருகனின் திருவடிகளுக்கு நம்மை ஈர்க்கிறது.
குச்சு வீடு, மச்சு வீடு: நம் நாடோடிப் பாடல்களும் முருகனின் திருவடிகளை வேண்டியே பாடுகிறது. “எட்டடிக் குச்சுக்குள்ளே முருகா எத்தனை நாள் இருப்பேன்? ஒரு மச்சு வீடு கட்டித் தாரும்” என்று முருகனை வேண்டுவதாக ஒரு பரதேசிப் பாடல் உண்டு.
லௌகீக வாழ்வை விரும்பும் இந்த உடலை `குச்சு வீடு' என்றும், பேரின்பம் அருளும் வீட்டை `மச்சு வீடு' என்று கூறுகிறது பாடல். முருகன் வசிக்கும் அந்த `மச்சு வீட்டு'க்கே வழிகாட்டுகிறது திருப்புகழ். திருப்பரங்குன்றம் திருப்புகழைப் பாராயணம் செய்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com