ஸ்ரீரங்கம் மாசி தெப்பத்திருவிழா ஒரு வெள்ளோட்டம்!

ஸ்ரீரங்கம் மாசி தெப்பத்திருவிழா ஒரு வெள்ளோட்டம்!
Updated on
2 min read

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கத்தில் அரங்கநாதருக்கு அனுதினமும் திருவிழாதான். அந்த வரிசையில், மகத்துவமான மாசி மாதத்தில் கொண்டாடப் படுவது ஸ்ரீ நம்பெருமாள் திருப்பள்ளியோடம் என்றழைக்கப்படும் மாசி தெப்பத் திருநாள்.

இந்த உற்சவம் ரங்கநாதரின் திருவிழாக்களில், சுவாரஸ்யமான வரலாற்றையும், பல்வேறு சிறப்புகளையும் கொண்ட விழாவாகும். நம்பெருமாள் தெப்பத்தில் வலம் வருவது மாசி தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு இன்று (02.03.2023) மாலை நடக்கிறது.

தெப்பத் திருநாள் வரலாறு: ஸ்ரீரங்கத்தில் தெப்பத் திருநாளானது பாண்டியர்கள் காலத்தில் 8 மண்டலங் களைக் கொண்டு `கோயில் பொன் வேய்ந்த பெருமாள்' சுந்தர பாண்டியன் கைங்கர்யமாக அவர் பெயரிலே நடைபெற்ற சித்திரைத் திருநாளில், திருக்காவிரி நீர்பாய்ச்சி அதிலே முத்தும், பவளமும் கட்டின திருக்காவணம் கட்டுவித்து, ஊருணியிலே தங்கத்தால் திருப்பள்ளி ஓடம் செய்து நிறுத்தி அதிலே நாச்சியார்களுடனேயே அழகிய மணவாளனை (நம்பெருமாள்) எழுந்தருளச் செய்தது நடந்தது.

ஓடத்தைக் கரை சேர்த்த ஜீயர்: இப்படி நடந்த ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா, பிற்காலத்தில் ஆடி 18ஆம் நாளில் திருக்காவிரியில், `திருப்பள்ளி ஓட' உற்சவமாக நடந்தது. அவ்வாறு ஓர் ஆண்டு நம்பெருமாள் உபயநாச்சியார்களோடு திருப்பள்ளி ஓடத்திலே எழுந்தருளித் தெப்பத் திருநாள் கண்டருளினார்.

அப்போது, துர்மந்திரங்களைப் பிரயோகித்த வர்களுடைய (மாந்த்ரீகர்கள்) அடாத செயலால் திடீர் வெள்ளம் உண்டானது. தெப்பமானது திருக்காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டது.

இந்தச் செய்தியை அறிந்த கூரநாராயண ஜீயர், தனது வலது திருக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்ப, நம்பெருமாளின் திருப்பள்ளி ஓடம் காவிரி வெள்ளப் பெருக்கை எதிர்த்து நிலை கொண்டது. நாச்சியார்களும் அழகிய மணவாளனும் எந்தவிதமான ஆபத்துமின்றி ஆஸ்தானம் சென்றடைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கூரநாராயண ஜீயர், மந்திரவாதிகளுடைய அக்கிரமச் செயல்களுக்கு இடம் கொடுக்காதபடி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஒரு குளத்தை வெட்டி, அதிலே திருப்பள்ளி ஓடத் திருநாள் நடத்தும்படி அறிவுறுத்தினார்.

ஜீயரின் இந்தச் செயலைப் போற்றும் வகையில், `தெப்பத் திருநாளில் விட்டவன் விழுக்காடு' (ஸ்ரீ நம்பெருமாளுக்கு அமுது செய்த பிரசாதம்) இன்றும் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்பிறகு, கி.பி.1489இல் கந்தாடை ராமானுஜமுனி காலத்தில் அடையவந்தான் வீதிக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டி வைத்தார்.

தற்போது நடைபெறும் மாசித் திருநாள், துளுவ வம்சத்தைச் சார்ந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னரான கிருஷ்ணதேவராயர் பெயரில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட பிரம்மோற்சவத்தின் திரிபு ஆகும்.

மாசி மாதம் நடைபெறும் திருநாளைக் ‘கிருஷ்ணதேவ மகாராயர் திருநாள்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஆனாலும், இப்போது மாசி மாதத்தில் நடைபெறும் விழா அவர் பெயரால் குறிக்கப்படுவதில்லை.

ஒன்பது நாள் வைபவம்: இத்திருநாள் மாசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியைக் கடைசி நாளாகக் கொண்டு ஸ்ரீநம்பெருமாள் தெப்பத் திருநாள் 9 நாள் விமரிசையாக நடைபெறுகிறது.

அதன்படி, தினமும் மாலையில் வாகனங்களில் எழுந்தருளி உள்வீதிகளில் (உத்தர வீதிகள்) வலம் வரும் நம்பெருமாள், 8ஆம் நாளில் உபயநாச்சியார்களோடு தெப்பத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இத்திருவிழா நாளை (மார்ச் 3) நடக்கிறது.

நுாற்றுக்கணக்கான தீப்பந்தங்கள் புடைசூழ ஒற்றைப்பிரபை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வரும் ‘பந்தக்காட்சி’யோடு ஸ்ரீரங்கம் மாசி தெப்பத் திருவிழா நிறைவடைகிறது.

காசியின் பலன் ஸ்ரீரங்கத்தில்: ஸ்ரீரங்கம் மாசி தெப்பத் திருநாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது, மாசி கருட சேவை. ஸ்ரீரங்கத்தில் ஆண்டுக்கு 4 முறை கருட சேவை நடக்கிறது. இதில், தை உள்ளிட்ட 3 கருட சேவைகளின்போது நம்பெருமாள் தங்கக் கருட வாகனங்களில் வீதியுலா வருவார்.

ஆனால், மாசி மாதத்தில் நடக்கும் தெப்போற்சவத்தின் 4ஆம் திருநாளில் மட்டும் வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள் வலம் வருவார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காணக்கிடைக்கும் இந்த மாசி வெள்ளிக் கருட சேவையைச் சேவிப்பது, காசிக்குச் சென்ற பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அத்தகைய சிறப்புக்குரிய வெள்ளி கருட சேவை கடந்த 26ஆம் தேதி நடந்தது.

- நிகாஷ் | srinksmedia@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in