

விண்டு மேல்மயிலாட இனிய களுண்டு காரளி பாட
இதழி பொன் விஞ்ச வீசு விராலிமலையுறை பெருமாளே!
- திருப்புகழ்
“சும்மா இரு சொல் அற” என்று முருகன் அருணகிரியாருக்கு மட்டும் சொல்லவில்லை. உலக ஜீவராசிகள் அனைத்திற்குமான உபதேசம் அது. இந்த உலகில் எதுவும் நம் செயல் இல்லை. ஆட்டுவிக்கும் பொம்மைதான் நாம். சூத்திரதாரி அவனே.
நம் தேவை என்ன என்று அவனே அறிந்து தக்க சமயத்தில் தேவையானதைத் தருகிறான். இதை நாம் உணர்ந்துவிட்டால் மனித வாழ்வில் துன்பம் என்பதே இல்லை.
அருணகிரிநாதர் இதை உணர்ந்தே அமைதியாக கந்தனின் கருணையை எதிர்பார்த்து நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறார். அதன்பின் வயலூர் செல்கிறார்.
திருவண்ணாமலையில் அருணகிரி நாதரைத் தடுத்தாட்கொண்டு `முத்தைத் தரு' என்று திருப்புகழ் பாட அடியெடுத்துக் கொடுத்த முருகன், அடுத்து அவரை விராலிமலைக்கு வரச் சொல்லி உத்தரவு இடுகிறான். இதையே அருணகிரிநாதர்,
சொலைபுடை சுற்று வயலூரா! தானகிரியில் மட்டு
வாசமலரொத்த தாளிணை நினைப்பில் அடியேனை
விராலிமலையில் நிற்பம் நீ கருதியுற்று வா, வா என அழைத்து
என் மனதாசை மாசினை யறுத்து, ஞானமுதளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே!
என்று வயலூர்ப் பாடலில் குறிக்கிறார்.
இங்கு அவர் பதினாறு திருப்புகழை இத்தலத்து முருகன் மீது பாடியுள்ளார்.
கரிபுராரி காமாரி திரிபுராரி தீயாடி கயிலை யாளி
காபாலி கழையோனி
கரவு தாசனாசாரி பரசு பாணி பானாளி
கணமொடாடி காயோகி சிவயோகி
பரமயோகி மாயோகி பிரியா ராஜ டாசூடி
பகரொணாத மாஞானி பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத அருளாயோ
என்னும் பாடலில் இருபத்தியொரு சிவன் நாமங்களைப் பாடியுள்ளார்.
சீரான கோலகால நவமணி மாலாபிஷேக பாரா
வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்
சீராக மோது நீப பரிமள இருதாளும்
ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ்ஞானாபி ராம தாப
வடிவமும் ஆபாத னேனு நாலு நினைவது பெற வேணும்
- என்னும் பாடலில் முருகனை எந்த உருவத்தில் தியானம் செய்ய வேண்டும் என்கிறார்.
சீரான நவமணிகள் பதிக்கப் பெற்ற கம்பீரமும் பெருமையும் வாய்ந்த கிரீடங்கள் தாங்கும், தேவர்களும் துதிக்கும் ஆறுமுக மலர்களையும், வீரலக்ஷ்மி விளங்கும் பன்னிரு தோள்களையும், வண்டுகள் ராகம் பாடும் கடம்ப மலரின் வாசம் வீசும் இரு தாளினையும், வேடர் மகள் வள்ளி, இந்திரன் மகள் தேவசேனா வலது, இடது புறமாக விளங்கி, பக்தர்களின் பற்றுக்கோடாக விளங்கும், உன் வேலையும் மயிலையும் மெய்ஞான ரூபமாக விளங்கும் உன் திருமுகத்தையும் நான் வணங்கும் பேறு அளிக்க வேண்டும் என்று தியானம் செய்கிறார்.
அருணகிரியாரின் பாடல்களில் ஒரு புராணச் சம்பவம் மறைந்திருக்கும். இந்தப் பாடலில் மகாபாரத நிகழ்வொன்றைக் கூறுகிறார்.
கூராழியால் முன் வீய நினைப்பவன் ஈடேறு மாறு பானு
மறைவு செய் கோபாலராயன்
என்னும் வரிகளில் பாரதப் போரின் பதினான்காம் நாளன்று கிருஷ்ணன் சூரியனைத் தன் சக்கரத்தால் மறைத்து, அர்ஜுனன் தன் சபதப்படி ஜயத்ரதனைக் கொன்ற கதையைச் சொல்கிறார். புகழ் மொழிகளில் தலைசிறந்தது முருகனைப் பாடும் திருப்புகழ். முருகனே அடி எடுத்துக் கொடுத்து, தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னது. முருகனைப் பாடப் பாட முக்தி நெறி வளரும்.
உனதருள் கைவர உயர் பக்தி வழியும்
பரம முக்தி நெறியும் தெரிவதொரு நாளே - என்கிறார்.
தன் பாடல்களில் ராகங்கள் பற்றியும் பாடும் அருணகிரியார், முருகனைத் தியானித்து அவனை அடையும் வழியைக் காட்டுபவரே உண்மையான குரு என்கிறார்.
“ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண
ஐம்பத்தோர் விதமான லிபிகளும்” என்னும் பாடலில் உலகின் அசையும், அசையாப் பொருள்களிலும் உறைந்து நிற்கும் சிவரூபனே, உன் உபதேசத்தில் பொருந்தி நான் வாழவேண்டும் என்கிறார். “முருகா” எனும் நாமமே இவை அனைத்தையும் அளிக்க வல்லது என்பதையே அவர் தன் பாடல்கள் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com