பக்தர்களை நோக்கி தவமிருக்கும் ஹனுமன்!

பக்தர்களை நோக்கி தவமிருக்கும் ஹனுமன்!
Updated on
2 min read

கர்நாடக மாநிலத்தின் ஹோஸ்பெட் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் ஹம்பியின் ஒரு குன்றின் மீது இந்த ஹனுமன் கோயில் அமைந்துள்ளது. இதனை யந்த்ரோ தரகா ஹனுமன் கோயில் எனவும் அழைக்கின்றனர்.

இனி கோயிலுக்குள் செல்வோமா? நெடிந்துயர்ந்த படிகள் ஏறி, கோயிலை நெருங்குகிறோம். மிகச் சிறிய கோயில் இது. நேரே கர்ப்பக் கிரகம்தான். 8 அடி கருங்கல் பாறையில் அறுங்கோண தாயத்து பாணியில் அமைந்துள்ள மையத்தில் உட்கார்ந்த கோலத்தில் இரு கைகளிலும் முத்திரை தாங்கி தியானம் செய்தபடி காட்சி தருகிறார் ஹனுமன். அவருடைய வாலின் இறுதிப் பகுதி, அவர் தலையில் தலைப்பாகை போல் சுற்றி அமைந்துள்ளது ஆச்சர்யம்.

கோயிலின் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி வெளியே ஒரு வட்டம் உள்ளது. அதற்கு வெளியே 12 குரங்குகள் ஒன்றின் வாலை மற்றது பிடித்தபடி சுற்றி நமக்கு முதுகைக் காட்டியபடி நிற்கும் சிற்பம் கவனத்தை ஈர்க்கிறது. கூர்ந்து பார்த்தால்தான் ஹனுமனின் கழுத்தில் உத்தராட்சம் மற்றும் சில மாலைகள், நகை கள் அலங்கரித்துள்ளது தெரியும். ஹனுமன் நம்மைப் பார்த்தபடி தியானம் செய்வது மற்றொரு சிறப்பு.

சீதையைத் தேடி, ராமனும் லட்சுமணனும் வந்தபோது, அவர்கள் ஹனுமனைச் சந்தித்தது இங்கேதான். துங்கபத்ரா நதியின் கரையில் ஒரு குன்றின் மீது இந்த கோயில் எழுந்துள்ளது.

ஹம்பி விருபாட்சர் கோயிலிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கோயிலைக் காணலாம். ஹனுமனைத் தரிசிக்க 575 படிகள் ஏறவேண்டும். பிடித்து ஏற வசதியுள்ளது. படிகளும் சிறப்பாக உள்ளன. குன்றின் உச்சியில் ஹனுமன் வர, முனிவர் வியாச ராஜா முக்கியக் காரணம். இவர் விஜயநகரப் பேரரசின் குலகுரு.

மறைந்த ஓவியங்கள்: வியாச ராஜா, ஹனுமனின் தீவிர பக்தர் என்பதால், ஒரு பாறையில் தினமும் கரிக்கட்டியால் ஹனுமன் படம் வரைந்து அதனை வைத்து தியானமும் பூஜையும் செய்வார். ஆச்சர்யம் என்னவென்றால், இப்படி அவர் வரைந்த ஓவியம் பூஜை முடிந்ததும் மறைந்துவிடும். 12ஆவது நாள், இப்படி வரைந்த கரி ஓவியம் மாயமாய் மறைந்த போது, "ஹனுமனே எனக்கு நீ காட்சி தந்து அருளக் கூடாதா?" எனப் பிரார்த்தித்தார் வியாச ராஜா.

ஹனுமன் உடனே காட்சி தந்ததுடன் “நீ வரைந்த அதே பாறையில் எனக்கு உருவத்தை ஏற்படுத்தி, சிறு கோயில் எழுப்பி, பக்தர்கள் வணங்க உதவ வேண்டும்" எனக் கூறிவிட்டு மறைந்துவிட்டாராம்.

வியாச ராஜாவின் மந்திரம்: வியாச ராஜா முனிவர் இங்கு ஹனுமனை பிரதிஷ்டை செய்ததோடு, 832 ஹனுமன் சிலைகளைப் பல்வேறு இடங்களில் நிறுவினார். ஹனுமனைத் திருப்தியோடு தரிசித்துவிட்டு சுற்றுவட்ட சுவரைப் பார்க்கிறோம்.

வியாச ராஜா முனிவர் ஹனுமனைப் புகழ்ந்து கூறிய ஸ்தோத்திரம் சுவரில் எழுதப்பட்டுள்ளது. கோயிலில் கேட்டால் அதன் ஆங்கில மொழி மாற்றமும் கிடைக்கிறது. இந்த ஸ்தோத்திரத்தை தினம் மூன்று வேளைகள் வீதம், 6 மாதத்திற்குத் தொடர்ந்து சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கர்ப்பகிரக தாயத்துக்கு வெளியே 12 குரங்குகள் உள்ளன என்று கூறினேன் அல்லவா, அவை வியாச ராஜா இங்கு பிரார்த்தனை செய்த 12 நாள்களை ஞாபகப்படுத்தவாம். இந்த இடம் ராமர், லட்சுமணன், ஹனுமன் சந்தித்த இடமல்லவா!

அதனால் கோயிலுக்கு வெளியே அவர்களுக்கும் சிறிய கோயில் உள்ளது. அங்கு ராம லட்சுமணர் கோதண்டத்துடன் (கையில் வில் அம்புடன்) காட்சி தருகின்றனர். அருகில் சீதாவும் இருக்கிறார். மேலும் அருகிலேயே விஷ்ணுவுக்கும் சிறு கோயில் உள்ளது அவரை `நிவாசா' என அழைக்கின்றனர்.

ஹனுமன் கோயில் இருப்பது மலை என்பதால் குரங்குகளுக்கும் அங்கு பஞ்சமில்லை. கையில் வைத்திருப்பதைப் பத்திரமாக பாதுகாக்க தனிக் கவனம் தேவை.

கோயில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்துள்ளது. கொஞ்சம் கூட்டமாக மக்கள் செல்லும் நேரத்தில் செல்வது சிறந்தது. வாசலில் அத்திமரம் உள்ளது.

அதன் அடியில் நாக கற்கள் பதிக்கப் பட்டுள்ளன. அக்டோபர் முதல் மார்ச் வரை பயணம் செய்வதற்கு உகந்த மாதங்கள். பெங்களூருவிலிருந்து கோயில் 341 கி.மீ. தொலைவில் உள்ளது.

- radha_krishnan36@yahoo.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in