

தென்னூர் கைம்மைத் திருச்சுழியல் திருக்கானப்பேர்
பன்னூர் புக்குறையும் பரமர்க்கு இடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரான் உறையும் திருத்தேவனூர்
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசை நாட்டுப் புரிசையே
- சுந்தரமூர்த்தி நாயனார்
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தம்முடைய தேவாரத்தில் வைப்புத்தலமாக இத்திருத்தலத்தைப் பாடியுள்ளார்.
வைப்புத்தலங்கள்: தமக்கென்று தனிப்பதிகம் பெறாமல் மற் றொரு தலத்தின் பதிகத்தில் இத்தலம் வைத்துப் பாடப்பட்டிருக்குமாயின் அத்தகைய தலங்களும், தலங்களின் பெயர்களையே அடுக்கி வைத்துப் பாடப்பட்ட க்ஷேத்திரக் கோவை, அடைவுத் திருத்தொண்டகம் (திருஞானசம்பந்தர்), ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகை (சுந்தரர்) ஆகிய திருப்பதி கங்களில் உள்ள தலங்களின் பெயர்களில் பாடல்பெற்ற தலங்கள் போக எஞ்சியுள்ள தலங்களும் வைப்புத்தலங்களாகும்.
பிறிதொன்றில் வைத்துப் பாடப்பட்டதால் ‘வைப்பு’ என்கிற பெயரைப் பெற்றது (ஆதாரம்: அமரர் பு.மா.ஜெயசெந்தில்நாதனின் ‘தேவார வைப்புத்தலங்கள்’ நூல்). சுந்தரர் தம் தேவாரப் பதிகத்தில் பொன்னூர், நாட்டுப் பொன்னூர் என்று குறிப்பிடும் பொன்னூர் புரிசையை அடுத்துள்ளது. இதே பதிகத்திலேயே புரிசை நாட்டுப் புரிசை என்று புரிசையையும் குறிப்பிடுகிறார். இந்த ஊர்கள் அருகருகே உள்ளன.
அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம்: அகத்தியப் பெருமான் வடக்கிலிருந்து தென்னகம் குறிப்பாகத் தமிழகம் வந்தபோது 108 இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிவலிங்கங்கள் யாவும் அதிக அளவில் தொண்டை நாட்டில் உள்ளன. இந்த ஊரில் உள்ள சிவலிங்கமும் ஸ்ரீஅகத்தீசுவரர் என்கிற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலை மூன்று நிலைகளும் ஐந்து கலசங்களும் கொண்ட ஒரு ராஜகோபுரமும் அலங்கரிக்கின்றன.
இந்த ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அங்கே ஒரு சாளரத்தின் வழியாக ஈசனையும் தரிசிக்கிறோம்.
கருவறையின் வெளிப்புறத்தில் மகாமண்டபச் சுவரில் நாயன்மார்களின் வரலாற்றுச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் சிறப்பே இதில்தான் அடங்கியுள்ளது.
நரி - பரி புடைப்புச் சிற்பங்கள்: மனுநீதிச் சோழன் - தேர்க்காலில் குழந்தை, ஆனாய நாயனார் குழலூதல் - அதிசூரனுடன் போர், கண்ணப்ப நாயனார் பன்றி வேட்டை - சிவலிங்கத்தின் மீது காலூன்றியவாறு கண்ணைப் பெயர்த்தல், திருக்குறிப்புத்தொண்டர் ஆடையைப் பெறுவது - கல்லில் தலையை முட்டிக்கொள்வது, சுந்தரர் யானையின் மீதும் சேரமான் பெருமான் குதிரை மீதும் செல்வது, சண்டீசருக்குப் பதம் அருளிச் செய்வது, தில்லைவாழ் அந்தணர்கள் சிற்பங்கள், மாணிக்கவாசகர் - இறைவன், குதிரை, பின்னால் நரிக்கூட்டம் ஆகியவை இங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் சில.
அகத்தீசுவரர் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.
சுயம்புலிங்கம், நீண்டுயர்ந்த பாணம். கருவறையில் ஈசனை அகத்தியர் வழிபடும் நிலையில் அவர் உருவம் உள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக துர்க்கை, பிரம்மன், மகா விஷ்ணு, தட்சிணாமூர்த்தியும் சண்டிகேசுவரரும் கோயில் கொண்டுள்ளனர்.
திருமணத்தலம்: நந்தி மண்டபத்தின் இடப்புறம் அம்பாள் அகிலாண்டேசுவரி சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் அங்குச, பாசம், அபய, வரத முத்திரைகள் தாங்கி கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறாள். அம்பாள் கிழக்கு நோக்கிக் காட்சியளிப்பதால் திருமணத்தலமாகக் கருதப்படுகிறது. இருவரும் எதிர் எதிரே மாலை மாற்றும் நிலையில் இருப்பதால் இங்கே வந்து வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
தெற்கில் ஆடும் கூத்தனின் நடராஜ சபை உள்ளது. அச்சந்நிதியின் பக்கத்தில் உற்சவ மூர்த்திகளின் தரிசனம் காணலாம். பைரவர், சூரியர், நவகிரகங்கள், நால்வர் ஆகிய மூர்த்திகளையும் இக்கோயிலில் தரிசிக்கலாம். விநாயகரையும் முருகனையும் தனிச் சந்நிதிகளில் தரிசிக்கலாம்.
திசைதோறும் விநாயகர்: இக்கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு விநாயகர் சந்நிதிகள் உள்ளன. பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கோயிலின் தலமரம் வில்வம். அகத்திய தீர்த்தம் என்னும் திருக்குளம் உள்ளது. தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை ஏழு மணி முதல் பத்து மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். சென்னையிலிருந்து 105 கி.மீ. தொலைவிலும் செய்யாறிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் இந்தத் திருத்தலம் உள்ளது.
- மஹேந்திரவாடி உமாசங்கரன