

ஆன்மிகக் கட்டுரைகளைத் தகுந்த ஆதாரங்களோடும் வியப்பூட்டும் தகவல் திரட்டுகளோடும் படைப்பவர் ஜே.வி.நாதன். அண்மையில் வெளிவந்த அவரின் `கேரள திவ்ய தேசங்கள்' நூலினைத் தொடர்ந்து வெளிவரும் நூல் இது.
108 திவ்ய தேசங்களுள் 40 திவ்ய தேசங்களை உள்ளடக்கிய பெருமைக்குரியது சோழதேசம். இந்த 40 திவ்ய தேசங்களிலும் பதினோரு திவ்ய தேசங்கள் சீர்காழியைச் சுற்றி, சற்றேறக்குறைய 10 கி.மீ. சுற்றளவுக்குள் அமைந்திருக்கும் சிறப்பை இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
மணிமாடக் கோயில், திருச் செம்பொன்செய் கோயில், அரிமேய விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருவெள்ளக்குளம், திருவண் புருஷோத்தமம், திருமணிக்கூடம், திருவைகுந்த விண்ணகரம், கீழைச்சாலை, பார்த்தன் பள்ளி, திருக்காவளம்பாடி ஆகிய பதினோரு கோயில்களைப் பற்றிய செறிவான செய்திகள் இந்நூலில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்தத் திவ்ய தேசங்கள் அமைந்த தற்கான புராணப் பெருமை, பாடிச் சிறப்பித்த ஆழ்வார்கள், திருமங்கை ஆழ்வாரின் சுருக்கமான வரலாறு, இந்த ஆலயங்களைத் தொழுதவர்கள் பற்றிய செய்திகள், செவிவழிக் கதைகள், இந்த ஆலயங்களைத் தொழுவதால் ஏற்படும் நன்மைகள் போன்ற பலவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
- ஜே.வி.நாதன் | விஜயா பதிப்பகம், தொடர்புக்கு: 9047087053.