

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும்
கண்களாலே என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்...
- திருப்புகழ்
திருவண்ணாமலையில் முத்தைத்தரு என்று பாடல் வரியை எடுத்துக் கொடுத்த முருகன் அடுத்து அருணகிரியாரை `வயலூருக்கு வா' என்று ஆணை இடுகிறான். வயலூர் வந்த அவருக்கு அங்குள்ள `பொய்யா கணபதி திருப்புகழ்' என்னும் பெயரில் முருகனைப் பற்றிப் பாடுவதற்கும் வழி கற்பிக்கிறார்.
இதையே அருணகிரியார், “அருளிற் சீர் பொய்யாத கணபதி திருவக்கீசன் வாழும் வயலியின் அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே” என்று துதிக்கிறார்.
`கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி' என்று கணபதியைப் பாடித் துதித்த அருணகிரியார் இங்கு பதினெட்டுப் பாக்கள் பாடியுள்ளார். எல்லாம் ஈசன் செயல் என்று பாடித் துதிக்கும் அற்புதமான திருப்புகழ் இது.
என்னால் பிறக்கவும், என்னால் இறக்கவும், என்னால் துதிக்கவும்
கண்களாலே என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்,
என்னால் இருக்கவும் பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும்
என்னால் முசிக்கவும், என்னால் சலிக்கவும் தொந்த நோயை
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால்
தரிக்கவும் இங்கு நான் ஆர்?
கன்னா ருரித்த என் மன்னா எனக்கு நல்
கர்ணாமிர்தப் பதம் தந்த கோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணாடி யிற்றடம் கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை
வன்வாளி யிற்கொளும் தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா மூவர்கொரு தம்பிரானே.
- என்கிறது வயலூர் திருப்புகழ்.
இந்த உலகில் நடப்பது எதுவும் நம் சித்தம் இல்லை என்பதோடு அனைத் தும் அன்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. இதனையே அருணகிரியார், “கல்லில் நார் உரிப்பது போல் என் நெஞ்சக் கல்லிலிருந்து அன்பை வருவித்து கசியச் செய்த அரசனே, அமுதம் போன்ற நல்ல உபதேசங்களை என் செவியில் உரைத்த குருநாதனே, அறிவுடைய நல்ல நூல்களைப் பயிலாதவர் மனதில் தங்காத திருவே, என்று அழைக்கும் அவர் கந்தனின் செயல்களைப் பேசுகிறார்.
வழிநடத்தும் வள்ளல்: "கண்ணாடி போன்ற தடாகத்தைத் தன் வேலால் உண்டாக்கியவரே, தேவர்களுக்குத் தலைமை பெற்று விளங்கிய தக்கனை அவனது மகுடம் அணிந்த தலையை வெட்டி வீழ்த்திய ஈசனாகிய பொன்னார் மேனியனின் புதல்வனே, குறத்தியான வள்ளியின் தலைவனே வயலூர் என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் நாதனே, மும்மூர்த்திகளுக்கும் மேலான தலைவனே, அடியேனால் நினைத்தவுடன் பிறக்கவும், இறக்கவும், கண் கொண்டு மற்றவரை அழைக்கவும், கால் கொண்டு என் செயலால் நடக்கவும், என் திறத்தால் ஓர் இடத்தில் நான் இருக்கவும், உன்னைத் துதிக்கும் அருள் பெறவும் முடியாது.
மாதர்கள் வீடு செல்லவும், அங்கு நான் இன்புற்று இருக்கவும், இது போதும் என்று சலிப்புறவும், வினையின் காரணமாக வரும் நோய்களை நான் பொசுக்கவும், என்னால் ஒன்றைத் தாங்கிக் கொள்ளவும் எனக்கு என்ன அதிகாரம்? இதைச் செய்வதற்கு நான் யார்? உங்களுடைய அருளாலேயே நான் இவற்றை எல்லாம் செய்கிறேன்.
எனவே நீயே என்னை வழி நடத்த வேண்டும்” என்று வேண்டுகிறார். தன் பாடல்களில் கந்தனைப் பற்றி மட்டுமல்லாமல் பல புராணச் சிறப்புகளைப் பாடி அவற்றோடு தொடர்புடைய நாதனே என்று குகனைப் பாடுகிறார் அருணகிரியார்.
வேலும் மயிலும் துணை: வயலூரிலும் ஆதிநாயகி அம்பிகையின் புகழைப் பாடி அவள் தந்தருளிய குமரனே என்று போற்றுகிறார். வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தருகந்த நிரந்தர மேலை வயலை உகந்துள நின்றருள் பெருமாளே என்று வேலையும் மயிலையும் துதிக்கும் அடியார்களின் துயர் தீர்ப்பான் என்கிறார்.
வயலூரில் வீற்றிருக்கும் கந்தனை `சரவணபவ' என்று துதிக்க, வினைகள் யாவும் தீரும் என்று மற்றொரு பாடலில் குறிக்கிறார்.
வாரியார் சுவாமிகளின் வாழ்வில் பல திருவிளையாடல்களை முருகன் நிகழ்த்திய இடம் வயலூர்.
முருகன் கனவில் உணர்த்தியபடி, வாரியார் சுவாமிகள் முருகனுக்கு ராஜ கோபுரம் கட்டி முடித்தார். அதன் பிறகு வயலூர் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. திருப்புகழ் அன்பர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் வயலூர் சென்று முருகனைத் தரிசிக்க வேண்டும். எல்லாம் அவன் செயல் என்று உணர்ந்தவர்கள் வாழ்வில் பல அற்புதங்களைச் செய்ய வல்லவன் கார்த்திகேயன். முருகா என்றிட மூவினையும் தீரும் என்பது சத்திய வாக்கு அல்லவா? சத்தியமாக நிற்பவன் சத்குரு நாதன் சுப்பிரமணியன்.
(புகழ் ஓங்கும்)
- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com