

வட மாநிலங்களில் விஜய யாத்திரையில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிக்கு பிப்ரவரி 18 அன்று 55ஆவது ஜயந்தித் திருநாள்.
காஞ்சி நகர் பெருமை: பஞ்சபூத தலங்கள் ஐந்தினுள், காஞ்சி, ப்ருத்வி தலமாகும். ‘நகரேஷூ காஞ்சி’ என்று போற்றப்படும் காஞ்சி நகரம், சரித்திரங்களிலும் இதிகாசங்களிலும் கோயில் நகரம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியும் நடமாடும் தெய்வ மென இன்றளவும் போற்றப்படும் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு சிறப்பாகச் செயல்படுகிறது.
ஸ்ரீ காமகோடி பீடத்தின் பெருமை: இத்தனை பெருமைகள் பெற்ற இந்நகரில் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதரால் தோற்றுவிக்கப்பட்டும், அப்பீடம் தனில் அவர் தாமே சர்வக்ஞ பீடமென எழுந்தருளி இங்கேயே அதிஷ்டானம் கொண்டதுமான ஸ்ரீ காமகோடி பீடம் சங்கரமடம் சமஸ்தானத்தின் தலைமையிடம் எனும் கூடுதல் பெருமை யினையும் காஞ்சி மாநகரம் பெற்றுள்ளது.
இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கர பகவத் பாதரால் ஸ்தாபிக்கப்பட்ட காமகோடி பீடத்தினை ஆதி சங்கரர் முதலாகவும் தற்போது, பீடாதிபதிகளாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திரர் வரையிலும், 70 குருமார்கள் வரிசையில் இடைவெளி இல்லாது வந்துள்ள அனைத்து பீடாதிபதிகளும் ஆதிசங்கரர் அவதாரமே என்பது மடத்தின் சம்பிரதாய மாகும். ‘காஞ்சி த்ரிவேணி’ என்று சிறப்பாக அழைக்கப்பட்ட மூன்று பெரியவர்களும் ஆன்மிகத்திற்கும், சமயத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம்.
70ஆவது பீடாதிபதி: ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 68 ஆவது பீடாதிபதியானார். அவர்களால் 69 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பெரியவர்கள் இருவராலும் 70வது பீடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளாவார்.
இவரும் தமது 13ஆவது வயதிலேயே துறவறம் மேற்கொண்டார். 13-03-1969 அன்று, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி கிராமத்தில், அந்தண சீலரும் ரிக் வேதத்தினை முழுதும் முறையாகக் கற்றுத் தெளிந்தவருமான கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் - அம்பா லக் ஷ்மி தம்பதியின் எட்டாவது குழந்தையாக சங்கர நாராயணன் பிறந்தார்.
துறவறம் ஏற்றல்: ஒருமுறை தண்டலம் அருகே காக்கவாகத்தில் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமது மடத்தின் பிரமுகர்களுடன் முகாமிட்டிருந்தார். அப்போதுதான், சங்கரன் பெரியவரை முதல் முறையாகத் தரிசித்தார்.
அதுமுதல் பெரியவாளிடம் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக பின்னர் அவரைத் தரிசிக்கும் போதெல்லாம் அவர்கள் பூஜை செய்யும் முறைகளைக் கூர்ந்து கவனித்தும் பூஜையின்போது சொல்லப்படுகின்ற மந்திரங்களையும் முத்திரைகளையும் மனத்தில் உள்வாங்கிக் கொண்டும் அவற்றை தாம் அறியாமலேயே அப்யசிக்கலானார்.
பெரியவர், சங்கரனே தமக்கு அடுத்து பீடாதிபதியாக வரத் தகுந்தவர் எனத் தீர்மானித்து அதற்கான காலம் கனியட்டும் எனக் காத்திருந்தார்.
ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தமக்குப் பின் பீடாதிபதியாக வேண்டியவர் சங்கரனே என்பதை சங்கரனின் தந்தையார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளிடம் தெரிவித்து அவரது இசைவினைப் பெற்றார். சங்கரன் மிக்க மகிழ்ச்சியடைந்தார். உடன் அச்சமயம் ஆந்திர மாநிலம் மஹபூப் நகரில் முகாமிட்டிருந்த மகா பெரியவரின் அனுமதி கேட்டு, சங்கரனை தக்க துணையுடன் அனுப்பி வைத்தார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
மகாபெரியவர், சங்கரனிடம் வேத விஷயங்களிலும் பூஜை விஷயங்களிலும் பலப்பல கேள்விகள் கேட்க, அவை அனைத்திற்கும் சரியான பதில்களை உடனுக்குடன் அளித்தார் சங்கரன். இரு பெரியவர்களும், “பீடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக சங்கரனைத் தேர்வு செய்தனர்.
இது சங்கரனுக்கும் அவரது தந்தைக்கும் தெரிந்ததும், தந்தை சம்மதிக்க சங்கரன் மிகவும் மகிழ்ச்சியுற்றார். முறையாக மடத்தின் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகுந்த ஏற்பாடுகள் அனைத்தும் வேகமாகத் தொடர்ந்தன. 29-05-1983 அன்று மடத்தின் வழிமுறைகள் யாவும் முறையாகப் பின்பற்றப்பட்டு, ஜெயேந்திர சரஸ்வதிஸ்வாமிகள் அவர்களால், சங்கரன் எனும் சங்கர நாராயணனுக்கு சன்யாஸ ஆஸ்ரமம் வழங்கப்பட்டு, “ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி” எனும் தீக் ஷா நாமம் வழங்கப்பட்டு, ஸ்ரீ காமகோடி பீடத்தின் 70ஆவது பீடாதிபதியாக ஆனார். தொடர்ந்து குரு, பரம குரு என்று இரு பெரியவர்களிடமும் ஆஸ்ரம தர்மங்களுக்கான பாடங்களை சங்கரன் கற்கலானார்.
சமயமும் சமுதாயமும்: தமிழ்ப் பாடசாலை, பெண்களுக்கும் ஆண்களுக்கும் என்று செயல்பட்டு வரும் நாதஸ்வர பாடசாலைகளும் ஸ்வாமிகளின் திட்டமே. வரும் காலங்களில் ஏற்படக் கூடிய மக்களின் தேவை, வேலை வாய்ப்புகள் முதலியனவற்றைக் கருத்தில் கொண்டும் சமூகத்தில் ஆண், பெண் இரு பாலருக்கும், அவர்கள் சுயசார்புடையவராக இருந்திட சமகால கல்வியுடன் பல்வகை கைத்தொழில்களிலும் திறன்மிக்கவராக்கும் வகையில் சம்பிரதாயா பள்ளிகள் முறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
திருப்பதி, ஹைதராபாத் மற்றும் திருவானைக்கா போன்ற இடங்களில் சம்பிரதாயா பள்ளிகளில் ஏறக்குறைய வசதியற்ற 500 குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வியும் கைத்தொழிலும் கற்று வருகிறார்கள்.
காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில், பொருளாதார வசதி குறைவான நூற்றுக் கணக்கான மாணவர்கள் இலவசமாக உணவு உறைவிடத்துடன், கல்லூரிகளில் பல்கலைப் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு வசதியும் பெற்று வருகிறார்கள். தற்போது விருப்பமுள்ள மாணவர்களுக்கென்று மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வாணையங்கள், வங்கிகள் ஆகியன நடத்திடும் தேர்வுகளுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலே சொல்லப்பட்டவை போன்ற சமூக முன்னேற்ற பணிகள் என்றால், ஆன்மிகத்தில் ஸ்வாமிகள் ஆற்றிக்கொண்டிருக்கும் பங்களிப்புகள் மகத்தானவை.
நூற்றுக்கணக்கான கோயில்களுக்குக் கும்பாபிஷேகங்கள், பிரயாக்ராஜ் ஆதிசங்கரர் விமானத்தைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தார். மடத்தின் 66ஆவது பீடாதிபதிகளின் அவதார ஸ்தலமான செங்கல்பட்டு அருகே உள்ள உதயம்பாக்கம் கிராம சிவன் கோயிலை சீரமைத்து செய்திட்ட கும்பாபிஷேகமும் பீடத்தின் பூர்வாச்சார்யர்களுக்கு வினயத்துடன் ஸ்வாமிகள் செய்திட்ட மரியாதையும் அஞ்சலியுமாகும்.
தமிழகத்தை வளமாக வைத்திருக்கும் பெருமை மிகுந்த நதிகளை கொண்டாடும் விழாக்களாக காவேரி புஷ்கரம், தாமிரபரணி புஷ்கரம் விழாக்களை மிகப் பெரிய அளவில் மீண்டும் தமிழகத்தில் நடைபெறச் செய்தது ஸ்வாமிகளின் முழு முயற்சியாகும்.
பீடத்தின் 69ஆவது பீடாதிபதியுமான பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ் டானத்தைப் பெரியவருடைய குருவினது அதிஷ்டானத்துக்கு அருகே அமைத்தார்.
1990களில் அசாம் மாநில மக்களின் வேண்டுகோளை ஏற்று மிகப் பெரிய அளவில் சங்கரா கண் மருத்துவ மனையும் பூர்வ பாலாஜி கோவிலும் அமைத்துக் கொடுத்ததும் தேச ஒற்றுமைக்கு காஞ்சி சங்கராச்சார்யார்களின் மிகப் பெரிய கொடையாகும்.
ஆண்டுதோறும் சங்கர ஜயந்தி கொண்டாடி மொழி, கலை, கலாச்சாரங்கள் வழியாகத் தேசத்தின் வடக்கு தெற்கு மாநிலங்களை இணைத்ததையும் இங்கு சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இடம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களின் குடும்பங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புக்கு புனர் நிர்மாண திட்டங்கள் வழங்கியிருக்கிறார்.
அன்றாடம் மூன்று வேளையும் சந்திர மெளலீஸ்வரர் பூஜையும் அதற்கு முன்னும் பின்னும் அனுஷ்டானங்களும் தர்மப் பிரசாரம் செய்வதும் ஸ்வாமிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பணியாகும்.
சமகால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கென்று, Heritage Agraharam, thanjavur parampara ரிஷி-க்ருஷி போன்ற இவரது சிறப்புத் திட்டங்கள் அருமையாகச் செயல்படுகின்றன.
இந்தியாவின் மகத்தான சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள பெருமைமிகு காஞ்சி காமகோடி பீடம் உலகளாவிய மிகப் பெரிய ஆன்மிக கலை கலாச்சார இறையருள் நிறைந்த ஸ்தாபனம். அது போலவே, காமகோடி பீடாதிபதிகள் முக்காலமும் உணர்ந்த குருபரம்பரையினர். எனவே அவரை என்றென்றும் போற்றுவோம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர; ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர.
- சேது. இராமச்சந்திரன்; ramachanransethu@gmail.com