தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 02: அகந்தையை அழிக்கும் ஞானரூபன்

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 02: அகந்தையை அழிக்கும் ஞானரூபன்
Updated on
2 min read

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சக்திச்
சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்.

- திருப்புகழ்

முத்து முத்தாய் சொல்லெடுத்து முருகன் புகழ் பாடும் முதல் திருப்புகழ் உருவான புனிதமான இடம் திருவண்ணாமலை. இப்பாடல்களை அருணகிரிநாதர் தானாகப் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். வல்லாள கோபுரத்தின் உச்சியிலிருந்து தன்னை மாய்த்துக்கொள்ள கீழே குதித்த அவரைத் தாங்கிப் பிடித்த முருகன் “தன்னைப் பற்றிப் பாடு" என்கிறான். அவர் நாவில் தன் வேலால் சடாக்ஷரத்தை எழுதுகிறான்.

என்ன பாடுவது? எப்படிப் பாடுவது என்று திகைத்த அருணகிரியாருக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகன் அடி எடுத்துக் கொடுக்க அவர் பாடிய முதல் திருப்புகழ் `முத்தைத் தரு' என்ற இப்பாடலாகும். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழி இலக்கியத்திலும் இல்லை. சங்கத் தமிழின் முதல் தலைவன் முருகனைப் புகழ்ந்து பாடிய முதல் பாடல் இது.

“முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்து முவர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப்
பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத் தொகு தொக்குத்
தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதும்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக்
குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்டப்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப் பலியிட்டுக்
குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

வாழ்வின் சகல பேறுகளையும் தரும் திருப்புகழ் இது. இதைப் படிப்பவர்களுக்கு வாழ்வில் அனைத்துத் துன்பங் களையும் நீக்கி வளமான வாழ்வை அருள்வான் முருகன். வெண் முத்துக்கு நிகரான பல்வரிசையும், அழகான புன்னகையும் அமைந்த தேவயானையின் தலைவனே, சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவனே, முக்தி எனும் சாம்ராஜ்யத்தை அடைய ஒரு விதையாக விளங்கும் ஞானகுருவே, முக்கண்ணன் என்று துதிக்கப்படும் ஈசனுக்கு `ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்து, பிரம்மா, விஷ்ணு மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் அடி பணிய நின்றவனே!

ராவணனின் பத்துத் தலையும் சிதறி விழுமாறு, அம்பு விட்டு, ஒப்பற்ற மந்தர மலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, தன் நண்பன் அர்ச்சுனனுக்காகத் தேர் ஓட்டி, தன் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து, பகலை இரவாக்கிய நீலமேக வண்ணன், பாராட்டும் பரம்பொருளே! பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ என்று வினவுகிறார் அருணகிரியார்.

அஞ்ஞானம் அகற்றும் ஞானவேல்: இதன் பிற்பகுதிப் பாடலில் முருகன் அசுரர்களுடன் போரிட்ட செய்தியை விவரிக்கிறார் அவர். யுத்த பூமியின் கோரத்தை ரசித்து காளிதேவி ஆடுகிறாள். அவள் காலில் உள்ள சிலம்பின் மணிகள் ஒலிக்கின்றன. அந்த ஜதிக்கேற்ப ஆடுகிறாள் பைரவி. அந்த யுத்த பூமி என்றில்லாமல் எல்லாத் திசையும் நடுங்கும்படி அவள் ஆடினால் அவளின் கூட்டத்திற்கும் உல்லாசம்தானே.

கழுகுகள், பேய்கள், அவளுடன் சேர்ந்து குதித்து ஆடுகின்றன. திக்கிற்கு ஒருவராக அஷ்ட பைரவர்களும், காளியின் ஜதிக்குத் தகுந்தவாறு ஆடுகிறார்கள். வீர வாத்தியங்கள் முழங்கும் களத்தில், பறையிசையும் முழங்கியது. அங்கு இறந்த உடல்களின் ரத்த வாடை முதிர்ந்த கழுகுகளை ஈர்க்கிறது. அவை யுத்த பூமியில் பறந்து வட்டமடித்தன.

சூரபத்மனை நட்பு கொள்ளவே முருகன் முயன்றான். அவன் அகந்தையின் காரணமாகவே முருகன் அவனை அழித்து, திருத்தித் தன் திருவடியில் தஞ்சம் புகுந்தவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி அடைக்கலம் தந்தான் ஸ்கந்தன். இதற்கும் முன் கிரௌஞ்ச மலையைத் தூள் தூளாக்கினான். அதுவே கந்தனின் முதல் வெற்றி. எதையும் செய்யவல்ல பெருமாள் கந்தன் என்று முதல் பாடலில் போற்றுகிறார் அருணகிரியார்.

ஞான ரூபனின் வேல் நம் உள்ளத்தில் உள்ள அகந்தையை அழிக்கும். எதுவும் அவன் செயல் என்று உணரவைத்து, உலகோர் போற்றும் வண்ணம் வாழ வைக்கும். தினமொரு திருப்புகழ் தித்திக்கும் வாழ்வைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

(புகழ் ஓங்கும்)

- ஜி.ஏ.பிரபா; gaprabha1963@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in