

இஸ்லாமிய இறைத்தூதர்களுள் இறுதியானவரான முஹம்மது நபிகள் பற்றியது இந்நூல். அவரைப் பற்றிய முழுமையான வரலாற்றுப்பதிவாக மலர்ந்திருக்கிறது. முஹம்மது எனும் சொல்லுக்கு `புகழப்பட்டவர்' என்பது பொருள். எனவே நூலுக்கும் அப்பெயரையே சூட்டியுள்ளார் ஆசிரியர்.
இந்நூலுக்கு வைரமுத்து, மேத்தா, பொன்னீலன், சேமு முஹம்மது அலி போன்ற அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை, அணிந்துரை, வாழ்த்துரை, மகிழ்வுரைகள் வழங்கியுள்ளனர்.
பல்வேறு பெருந்தலைப்புகளிலும் 623 குறுந்தலைப்புகளிலும் நேர்த்தியான நடையழகால் முஹம்மது நபிகளின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூன்று ஆண்டு கால நபிகளின் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்றின் வெளிச்சத்தில் பதியப்பட்டவை. அவற்றில் பொய்மைகளும் புனைந்துரைத்தல்களும் இல்லை. இந்நூல் அதை வெளிச்சப்படுத்துகிறது. மற்றவர்களின் சில தவறான கருத்துரைகளுக்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது.
"இது ஒரு வரலாற்றுக் காவியம்" என்றும் "நபிகள் நாயகத்தின் வரலாறு குறித்து இதுவரை வெளிவந்திருக்கும் தமிழ் உரைநடை நூல்கள் வேறெதிலும் காணக்கிடைக்காத கவிதைத் தமிழ் இதில் நுரை கட்டி நிற்கிறது" என்றும் கவிஞர் வைரமுத்து சான்றுரைத்திருக்கிறார்.
“பிற உலக சமயங்களோடு ஒப்பிட்டு நோக்கி அவற்றுள் இஸ்லாத்தின் தனித்தன்மையை விளக்குவதோடு இஸ்லாம் பற்றி எழுகின்ற பல்வேறு கேள்விகளுக்கும் தக்க பதில்கள் தரப்பட்டிருக்கின்றன” என்று பொன்னீலன் கூறுகிறார்.
நூலாசிரியரின் தமிழ் அறிவும் நபி மீது அவர் கொண்ட பற்றும் நூல் முழுவதும் வெளிப்படுகின்றன. ஆசிரியரின் கடின உழைப்பு தெரிய வருகிறது. பல்வேறு நூல்களையும் விரிவாகப் படித்துத் தகவல்களைச் சேகரித்து, அழகிய கவிதை மொழியில் எளிய தமிழில் செய்திகளை அலங்கரித்து ஆபரணம் ஆக்கி இருக்கிறார் ஆசிரியர்.
இஸ்லாம் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் பல்வேறு தவறான தகவல்கள் வெளிவரும் இந்நேரத்தில் ஆசிரியரின் இம்முயற்சி அவற்றை நீக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இம்முயற்சியை அவருடைய சமுதாய நல்லெண்ணத்தின் அடிப்படையாகவும் சேவையாகவும் கொள்ளலாம். சமயங்கள் கடந்தும் நபிகளின் வரலாற்றை அறிய விரும்புவோருக்கு இது ஓர் அற்புத ஆவணம்.
புகழப்பட்டவர்
ஆசிரியர்: அத்தாவுல்லா
பக்கங்கள்:1008
விலை ரூபாய் 1000
வெளியீடு: ஜாரியா பதிப்பகம்
39 பள்ளித்தெரு
இடலாக்குடி, கோட்டாறு
நாகர்கோவில். 629002.
தொடர்புக்கு: 9629573938.