பிப்ரவரி 4 | புனித ஜான் டி பிரிட்டோவின் 330 ஆவது நினைவு நாள்: மக்களுக்கு சேவை செய்த புனிதர் ஜான் டி பிரிட்டோ

பிப்ரவரி 4 | புனித ஜான் டி பிரிட்டோவின் 330 ஆவது நினைவு நாள்: மக்களுக்கு சேவை செய்த புனிதர் ஜான் டி பிரிட்டோ
Updated on
2 min read

பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவில் கிறித்தவச் சமயப்பணி செய்தவர்களுள் முக்கியமானவர் ஜான் டி பிரிட்டோ எனும் அருள் ஆனந்தர். இன்று தமிழ்நாட்டுக் கத்தோலிக்கக் கிறித்துவ வழிபாட்டில் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் முதன்மைப் புனிதராகத் திகழ்கிறார்.

பிறப்பும் சமயப் பணியும்: போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் 1647 மார்ச் 1இல் பிறந்தவர் ஜான் டி பிரிட்டோ. போர்ச்சுக்கல், சேசு சபையினரின் ஆதரவுடன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்தான் ஜான் டி ரிட்டோ.

பதினாறாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் சவேரியார் என்னும் சேசு சபை பாதிரியார் இந்தியாவில் ஏற்கெனவே பணி செய்தவர். அவர் மீது ஜான் டி பிரிட்டோவுக்கு அளவில்லா மதிப்பும் மரியாதையும் இருந்தன. சவேரியார் பணி செய்த இந்தியாவிலேயே தானும் பணி செய்ய வேண்டுமென்று தன் தலைமையிடம் வாய்ப்பைக் கேட்டு வாங்கி, 1673 செப்டம்பர் 4இல் கோவா வந்தார்.

அந்தக் காலத்தில் போர்ச்சுக்கல்லுக்கு ஆட்சி, வணிகம், சமயம் சார்ந்து இந்தியாவில் கோவா முக்கிய இடமாக விளங்கியது. சமயப் பணி செய்ய வருகிறவர்களுக்கு கோவாவில் இந்தியப் பண்பாடுகள், புவியியல் அமைப்பு குறித்து அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன்படி ஜான் டி பிரிட்டோ கோவாவில் சில மாதங்கள் தங்க வேண்டியிருந்தது. பயிற்சி முடிந்தவுடன், தற்போதைய கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய மலபார் சமயப் பணித்தளத்திற்கு வந்தார்.

இதன் ஒரு பகுதியாக இருந்த மதுரை மறை மாநிலம் (மறை மாநிலம் என்பது கத்தோலிக்கக் கிறித்தவத் துறவற சபைகளின் நிர்வாகப் பிரிவு) அவருக்கான பணித்தளமாக ஒதுக்கப்பட்டது. அதற்காக கேரளத்தின் கொச்சியை அடுத்த அம்பலக்காட்டில் தங்கி தமிழ் கற்றுக்கொண்டார். இங்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காகவே ஏராளமான தமிழ்ப் பண்டிதர்களும் பாதிரியார்களும் இருந்தார்கள்.

ஜான் டி பிரிட்டோ பணி செய்த மதுரை மறை மாநிலம் என்பது இன்றைய தமிழ்நாடு, தென் ஆந்திரத்தை உள்ளடக்கிய பெரும்பரப்பு. அப்பரப்பு முழுவதுமாக அவரது சமயப் பணி அமைந்திருந்தது. கொளை, தத்துவஞ்சேரி, திருச்சி, சிறுகடம்பனூர், கூத்தூர், கரையாம்பட்டி, வடக்கன்குளம் ஆகிய பகுதிகளில் பங்குத் தந்தை யாக (Parish Priest) பணியாற்றினார். கொளையில் இருந்தபோது அப்பகுதியில் பரவிய தொற்றுநோயில் மக்கள் மடிவதைக் கண்டவர், மருத்துவ உதவிகள் செய்து ஏராளமானவர்களைக் குணமாக்கியிருக்கிறார்.

கூத்தூர், வடக்கன்குளம் ஆகிய ஊர்களில் ஜான் டி பிரிட்டோ 1,200 நபர்களுக்குத் திருமுழுக்கு அளித் திருப்பதை பிலவேந்திரர் என்னும் பாதிரியார் 1679இல் ரோமுக்கு எழுதிய கடிதத்தின் வழியாக அறிய முடிகிறது. தான் பணி செய்த இடங்களில் பிரிட்டோ கோயில் களைக் கட்டியிருக்கிறார். ஏற்கெனவே கோயில் இருந்த இடங்களில் அதைப் புதுப்பித்து விரிவுபடுத்தியிருக்கிறார்.

அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதியவர்: ஜான் டி பிரிட்டோவின் காலத்தில் பாதிரியார்களிடம் இரண்டு பிரிவுகள் இருந்தன. ஒரு பிரிவினர் இந்தியத் துறவி போலவே காவி உடையணிந்து சமூகத்தின் மேல் அடுக்கு மக்களுக்குக் கிறித்துவத்தை அறிவித்தார்கள். மற்றொரு பிரிவினர், அடித்தட்டு மக்களிடையே அவர்களைப் போலவே உண்டு, உடுத்தி பணி செய்தனர்.

அவர்களுக்குப் ‘பண்டாரசாமி’ என்று பெயர். ஜான் டி பிரிட்டோவும் அடித்தட்டு மக்களிடம் பணி செய்த ஒரு பண்டாரசாமி. அடித்தட்டு மக்களின் எளிய வாழ்வில் இருந்த போதாமைகளைச் சரி செய்வ தற்கான உளவியல் ரீதியான சமாதானத் தேவையை ஜான் டி பிரிட்டோ சரியாக உள்வாங்கி இருந்தார். அதுதான் அவரது சமயப் பணியின் வேராக இருந்தது.

பஞ்சங்களின் நூற்றாண்டு என்று வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்படும் பதினேழாம் நூற்றாண்டில் 1622இல் தொடங்கி 1690 வரை 11 பஞ்சங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தப் பஞ்ச காலத்தின் கடைசி இருபது ஆண்டுகள் (1673-1693) ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பணிசெய்தார் ஜான் டி பிரிட்டோ. சேசு சபையின் மதுரை மறை மாநில தலைவராகவும் மாநில ஆய்வாளராகவும் இருந்தபோது அவர் நிறைய பயணித்தார். அதன் பயனாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்திருந்தார்.

புதிதாகக் கிறித்துவத்தைத் தழுவியிருந்த மக்களின் குடும்பம் முதல் பணித்தள நிர்வாகம் வரை இருந்த சிக்கல்களை நேரடியாக அணுகித் தீர்வு கண்டிருக்கிறார். அது அவரை மக்களிடம் மிகவும் நெருக்கமாகக் கொண்டு சேர்த்திருக்கிறது. அடித்தட்டு மக்களிடம் அவர் காட்டிய நெருக்கம் பல நேரங்களில் அவருக்கு எதிராகவும் திரும்பியிருக்கிறது. சுதேச பிராந்திய அரசு தொடர்ச்சியாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

1693ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அவர் கைதானபோது, மரண தண்டனை விதிக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரியூரில் மறைசாட்சியாக மரித்தார். போப்பாண்டவர் பன்னிரண்டாம் பயஸ், 1947ஆம் ஆண்டு ஜான் டி பிரிட்டோவுக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

மதுரை மறைமாநில சேசு சபையின் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் அவருடைய எழுத்து களைக் கால முறைப்படி தொகுத்து மொழிபெயர்த்தால், பதினேழாம் நூற்றாண்டு அடித்தள மக்களின் வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும்.

- ஞா.குருசாமி; jeyaseelanphd@yahoo.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in